13 Dec 2019 | 1 min Read
P.Tamizh Muhil
Author | 8 Articles
கர்ப்பமுற்றிருக்கும் ஒரு பெண்ணானவள், நல்ல சத்தான, சரிவிகித உணவினை உட்கொள்வதே தனது கருவிலிருக்கும் குழந்தைக்கு தரும் மிகச் சிறப்பான பரிசாக இருக்க முடியும். ஆரோக்கியமான குழந்தைச் செல்வத்தை அடைய, கர்ப்பகால ஊட்டச்சத்து மிகவும் அவசியம். எனவே, கர்ப்பம் தரிக்க முடிவெடுத்தது முதல், நல்ல, சத்தான உணவுப் பழக்கங்களை மேற்கொள்ளுதல் நல்லது. இதுவரை மேற்கொள்ளாது போனாலும், இப்போதும், நமக்கு அவகாசம் இருக்கிறது. வளரும் கருவுக்கு தேவையான பலவகையான ஊட்டச்சத்துகளுள், மிகவும் முக்கியமான ஊட்டச்சத்து, புரதம் ஆகும்.
ஒரு பெண்ணின் வளர்ச்சி மற்றும் பராமரிப்பிற்கு தேவையான சத்தான உணவில், புரதம் மிக முக்கியமான அங்கமாக விளங்குகிறது.தாயாகப் போகும் பெண் உட்கொள்ளும் உணவானது, குழந்தைக்கு தேவையான அனைத்து புரதத்தினையும் வழங்குகிறது.எனவே, கர்ப்பமாக இருக்கும் பெண்ணின் உணவு, சத்தில்லாததாக இருக்குமாயின், அதனால், அவரது குழந்தை பாதிக்கப்படலாம். கர்ப்பமாக இருக்கும் பெண், தனது உணவில் புரதத்தை ஏன் தவிர்க்கக் கூடாது, புரதக் குறைபாட்டுடன் ஏன் இருக்கக் கூடாது என்பதைக் குறித்து காணலாம்.
கர்ப்பத்தில் புரதத்தின் பங்கு
நம் உடலில் இருக்கும் புரதமானது, கட்டமைப்பு மற்றும் செயல்பாட்டிற்கான காரணியாக செயல்படுகிறது. கருவில் இருக்கும் குழந்தையின் உடற் திசுக்களை உருவாக்க புரதம் மிகவும் தேவையாக இருக்கிறது.நம் உடலில் இருக்கும் ஒவ்வொரு உயிரணுவிலும் புரதம் காணப்படுகிறது, தோல்,திசுக்கள், முடி, நகம் மற்றும் இன்னபிற திசுக்களின் உருவாக்கத்திலும் புரதம் பெரும்பங்கு வகிக்கிறது. அவை திசுக்களுக்கு கட்டமைப்பை வழங்கி,நன்முறையில் செயல்பட உதவுகின்றன.இது மட்டுமன்றி, திசுக்கள் தம்மைத் தாமே செப்பனிட்டுக் கொள்ளவும் உதவுகின்றன. கர்ப்ப காலத்தில், நாம் உட்கொள்ளும் புரதமானது, மூளை திசுக்கள் உட்பட, கருவின் அனைத்து திசுக்களின் வளர்ச்சிக்கும் சாதகமாக அமைகிறது.
கர்ப்பம் தரிக்க முயற்சிக்கும் பெண்களின் புரதத் தேவையானது, கர்ப்ப காலத்திலும் அதிகரிக்கிறது.கருத்தரித்த பல வாரங்களுக்குள்,கருவின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் உதவும் வகையில், புரத வளர்சிதை மாற்றத்தில் சீரமைப்பு நடக்கிறது. அதே சமயத்தில், தாயாகப் போகும் பெண்ணின் உள் சமநிலையும் பராமரிக்கப்பட்டு, பாலூட்டுதலுக்கும் தயாராகிறது. தாயாகப் போகும் பெண்ணின் மார்பக திசுக்கள் மற்றும் கருப்பை திசுக்கள் வளர்ச்சிக்கும், அவரின் இரத்த விநியோகம் அதிகரிப்பதற்கும் புரதம் பெரும் பங்கு வகிக்கிறது.
புரதத்தின் போதுமான / குறைபாடுள்ள தன்மை
முழு கர்ப்பகாலத்திற்கு தேவையான கூடுதல் ஆற்றல், தோராயமாக 77,000 கிலோ கலோரிகள் என கணக்கிடப்பட்டுள்ளதை அறிவீர்களா? நிறை மாத பிரசவத்தில், ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்க, கர்ப்பமுற்றிருக்கும் பெண் உட்கொள்ளும் உணவில் தேவையான ஆற்றலும்,ஊக்கமும், புரதமும் நிறைந்திருக்கிறது என்பதை உறுதி செய்ய வேண்டும்.
புரதத்தின் மூலமும் அதனை உட்கொள்ளும் வழிமுறையும்
தாய் மற்றும் கருவில் இருக்கும் குழந்தை, இருவரின் திசுக்களிலும், கர்ப்ப காலம் முழுதும் புரதம் படிதல் அதிகரிக்கிறது. இரண்டாம் மற்றும் மூன்றாம் மும்மாத காலத்தில், குழந்தையின் வளர்ச்சியானது மிக வேகமாக இருக்கிறது. எனவே, கருவின் ஆரம்ப வளர்ச்சிக் காலத்தை விட, கர்ப்ப காலத்தின் பிற்பாதியில், புரதத்தின் அளவு மிகவும் முக்கியமானது.
பெரியவர்கள் ஒரு நாளில் உட்கொள்ள வேண்டிய புரதமானது, அவர்களது உடல் எடையின் ஒவ்வொரு கிலோவிற்கும், 0.75 கிராம். இதுவே, கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு, நாளொன்றுக்கு கூடுதலாக 6 கிராம்கள் உட்கொள்ள வேண்டும். புரதம் என்பது அளவினை மட்டும் சார்ந்தது அல்ல, புரதத்தின் வகைகளையும் சார்ந்தது. ஏனெனில், வெவ்வேறு புரதங்கள், வெவ்வேறு அமினோ அமிலங்களை வழங்குகின்றன. எனவே, ஒவ்வொரு உணவு வேளையின் போதும், ஒரு வகை புரத உணவினை உட்கொள்வது, நாம் இரண்டு முதல் மூன்று பகுதி புரதங்களை பெற நல்லதொரு வழிமுறை ஆகும்.
ஒரு பெண்ணின் வாழ்வில், கர்ப்ப காலத்தில் தான், அவளது உணவுப் பழக்கம் நேரிடையாக மற்றோர் நபரை பாதிக்கிறது. இது பிறக்கும் குழந்தையின் அடிப்படை ஊட்டச்சத்து ஆரோக்கியத்தையும், அவர்தம் இளமைக்காலம் மற்றும் அதற்குப் பின்னான உணவுப் பழக்கத்திற்கும் மாதிரியாக அமைகிறது. எனவே, கர்ப்ப காலத்தில், புரதத்துடன் கூடிய சரிவிகித ஊட்டச்சத்தினை எடுத்துக் கொள்வதன் வாயிலாக, ஆரோக்கியமான கர்ப்பத்திற்குத் தேவையான அனைத்துக் காரணிகளும் பூர்த்தியாவதை உறுதி செய்ய வேண்டும்.
A