8 Jan 2020 | 1 min Read
Komal
Author | 138 Articles
குடும்பத்தில் தந்தை என்பவர் ஆணிவேர் என்று அழைக்கப்பட்டாலும், எப்போதும் குடும்பம் மற்றும் பிள்ளைகளின் நலனையே கருத்தில் கொள்ளும் ஜீவன். பெரும்பாலான இடங்களில் தாய் மட்டுமே முன்னிலைப்படுத்தப்படுகிறார், ஆனால் தந்தையின் பங்கும் சரிசமமே. தாய்க்கும் பிள்ளைக்குமான பிணைப்பு அன்பிலானது, தந்தை – பிள்ளை பிணைப்பு கண்டிப்புடன் கூடியது. தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பதற்கிணங்க அப்பாவின் தொழில்/துறையை பின்பற்றி, வெற்றிப் பெற்ற பல பிள்ளைகள் இருக்கின்றனர். அவர்களுக்கு வழிகாட்டியாகவும் பக்கபலமாகவும் இருந்து வழிநடத்தும் தந்தையர்களை இங்கே காண்போம்.
ஆதாரம்: tamil.filmibeat
இசைத்துறை:
1980 களில் தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்தவர் இசைஞானி இளையராஜா.
இசை துறையில் இவரை அறியாதவர்களே இல்லை எனலாம், பெரும்பாலும் அனைத்து மொழிகளிலும் இசை அமைத்து இருக்கிறார். அனைத்து பாலினரையும் மெய் சிலிர்க்க வைக்கும் இசையையும் வரிகளையும் செதுக்கியவர். பல தேசிய விருதுகளை பெற்றிருக்கிறார். சென்ற தலைமுறை மக்களின் இரவு நேரங்கள் இளையராஜாவின் இசைக்கு அடிமை என்றே சொல்லலாம்.
ஒன்றை உறுதியாக சொல்லலாம், 80-களின் பல முன்னணி நடிகர்கள் ரசிகர்களுக்கு பரிச்சயமானது இவரின் இசையின் மூலமே. பாடல்களுக்கென்றே படம் நீண்ட நாட்கள் தியேட்டரில் ஓடியது என்றே சொல்லலாம். இன்றும் பெரும்பாலான இசை போட்டிகளில் இவரின் பாடல்களை பாடும் போட்டியாளர்களுக்கு என்று தனி மவுசு இருக்கிறது.
இவரின் மகன் யுவன் ஷங்கர் ராஜா தந்தையின் வழியை பின்பற்றி பின்னணி இசையில் தனக்கென ஒரு தனி இடத்தை பதித்துள்ளார். 90-களின் இறுதியில் இசையமைக்க தொடங்கிய இவர், 2000-இல் பல வெற்றி படங்களை கொடுத்து அசுர வளர்ச்சியடைந்தார். அப்பாவைப் பின்பற்றி வரும் மகன்கள், தந்தையின் புகழ் வெளிச்சத்தில் தாமும் கொஞ்ச காலம் ஜொலிக்க ஆசைப்படுவார்கள். ஆனால் இவர் தந்தையின் நிற்காமல், தனது அப்பா அவ்வளவு பெரிய இசை ஜாம்பவனாக இருந்தபோதிலும், தான் இசையமைத்தப் படங்களின் மூலம் தன்னை நிரூபித்துக் கொண்டே இருந்தார். அதன் பலனாக, யுவனின் பின்னணி இசை அனைத்து இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இவர் இசையமைக்கிறார் என்றால் அந்த படம் நன்றாக இருக்கும் என்று இவருக்கான ரசிகர் பட்டாளம் உருவாக்க தொடங்கியது. இந்த தலைமுறை இளைஞர்களிடையே யுவனிசத்தை ஏற்படுத்தித் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்தி தந்தைக்கு பெருமை சேர்ப்பவர் யுவன் ஷங்கர் ராஜா என்றே சொல்லலாம். பல மாநில விருதுகளையும் இந்த இளம் வயதில் பெற்றிருக்கிறார். இவருடைய குரலுக்கும் தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது எனலாம். காதல் சோக பாடல்களை இவர் பாடும் விதமே தனி.
தனிமையில் கேட்க மனதை வருடும் இசை இவருடையது. இவருடைய இசையால் இளைஞர்களை கட்டி போட்டு வைத்திருக்கிறார்கள் என்றே சொல்லலாம்.
நடனத்துறை:
இந்த துறையில் சிறந்து ஜொலிப்பவர் நடன இயக்குனர் பிரபுதேவா – இவரும் தந்தையின் வழியை பின்பற்றியே நடனத்துறையை தேர்ந்தெடுத்தார். தந்தை சுந்தரம் மாஸ்டர் 1980-90 களில் சிவாஜி, நாகேஷ், எம்ஜிஆர் போன்ற நடிகர்களுக்கு சினிமாவில் நடன இயக்குனராக பணிபுரிந்துள்ளார். தந்தையின் நடன இயக்கத்தில் சில படங்களில் குழு நடனக் கலைஞராக பணியாற்றியிருக்கிறார்.
ஆதாரம்: newstm
ஒரு சிறிய நடன கலைஞராக தன்னுடைய திரையுலக வாழ்க்கையைத் தொடங்கி, ஒரு நடிகராக மட்டுமல்லாமல், இயக்குனராகவும் வெற்றிப் பெற்றிருக்கிறார். நடன அமைப்பாளர், கதாநாயகன், இயக்குனர் எனப் பன்முகம் கொண்ட இவர், இந்தியாவின் மைக்கல் ஜாக்சன் என அழைக்கப்படுவதோடு, தற்பொழுது ‘ரீமேக் கிங்’ எனவும் அழைக்கப்படுகிறார். குறிப்பாக நடனத்தைப் பொறுத்தவரை, இந்திய சினிமா உலகில் பிரபுதேவாவின் நடனம் மிகவும் தனித்துவம் வாய்ந்தது என்றால் அது மிகையாகாது.
தந்தையை விட அதிக பணமும் புகழும் பெற்று “இவன் தந்தை என்னோற்றான் கொள்எனுச் சொல்” என்பதற்கேற்ப வளர்ச்சியின் உச்சத்தில் இருக்கிறார்.
பேனர் படம்: onlykollywood
A