பிரசவத்திற்கு எபிடியூரல் கொடுப்பது சரியா? தவறா?

cover-image
பிரசவத்திற்கு எபிடியூரல் கொடுப்பது சரியா? தவறா?

இன்றைய காலகட்டத்தில் சுகப் பிரசவம் குறைந்து கொண்டே போகின்றது. இதற்கு முக்கிய காரணம், பெண்களால் பிரசவ காலத்தில் வலியைத் தாங்கிக் கொள்ள முடியாமல் போவது தான். பிரசவ காலத்தில், குறிப்பாகப் பிரசவத்திற்கு அறுவை சிகிச்சை செய்யும் போது, எபிடியூரல் அதாவது வால் பகுதி தண்டுவடத்தில் மயக்க மருந்து போடப் படுகின்றது. இதனால், பெண்களுக்குப் பிரசவ நேரத்தில் வலி குறைவதோடு, பிரசவமும் எளிதாகின்றது.

 

கடந்த 50 ஆண்டுகளாகப் பிரசவத்திற்காக எபிடியூரல் கொடுக்கப்படுவது அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. இது குறிப்பாகப் பிரசவ நேரத்தில் பெண்களுக்கு அதிகமாக வலி ஏற்படாமல் இருப்பதற்காகக் கொடுக்கப்பட்டாலும்,  அந்த நேரத்தில் பெண்களுக்கு வேறு சில பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கவும், தாய் மற்றும் சேய் இருவரும் சுகமாக இருக்கவும் இது உதவுகின்றது.

 

எபிடியூரல் மயக்க மருந்தைச் சிறிது அளவு கொடுத்தாலும் பெரும் அளவு வலி தெரியாமல் இருக்க உதவுகின்றது. இது முதுகுத் தண்டில் இருக்கும் நரம்பில் நேரடியாகச் செலுத்தப்படுகின்றது. குறைந்த அளவு இந்த மருந்து கொடுக்கப் படும்போது, கால்களை அந்தப் பெண்ணால் அசைக்க முடியும். மேலும் அவளால் சிறிது எழுந்து நடக்கவும் முடியும். இந்த எபிடியூரல் மயக்க மருந்து ஒரு நல்ல வலி நிவாரணியாகச் செயல் படுகின்றது. இது பிரசவத்திற்குப் பின் பெண்கள் சௌகரியமாகவும், நலமாகவும் இருக்க உதவுகின்றது.

 

நன்மைகள் 

இந்த எபிடியூரல் மயக்க மருந்து ஒரு பெரிய வலி நிவாரணியாகப் பிரசவ நேரத்தில் இருக்கின்றது. பிரசவ வலி அதிகரிக்கும் போது பெண்களுக்கு மூச்சு வாங்குதல் அதிகமாக இருக்கும். மேலும் அவர்களது உடலில் அதிக அளவு சுரப்பிகள் சுரக்கத் தொடங்கும். இதனால் சில பெண்கள் மரணிக்கவும் வாய்ப்பு உள்ளது. மேலும் இதனால் குழந்தையும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இத்தகைய ஆபத்தைத் தடுக்க இந்த மயக்க மருந்து பெரிதும் உதவுகின்றது.

 

இந்த மயக்க மருந்து சிறு அளவு கொடுக்கப்பட்டாலே பிரசவ காலம் முழுவதும் அந்த பெண்ணுக்கு வலி தெரியாமல் வைத்துக் கொள்ள உதவுகின்றது. எந்த வகையிலும் இந்த மயக்க மருந்து குழந்தை பிறப்பதில் தாமதத்தையோ அல்லது பிற பிரச்சனைகளையோ ஏற்படுத்தாது.

 

சரியாகவும், முறையாகவும் மருத்துவர்கள் இந்த மருந்து கொடுக்கப்படும் போது பெண்களுக்குப் பிரசவ நேரத்தில் தேவையான உணர்வு இருக்கின்றது. இதனால் பெண்களால், குழந்தையை வெளியே தள்ள முடிகிறது.

 

இந்த மருந்து எந்த வகையிலும், பிரசவத்திற்குப் பின் தாய் குழந்தைக்குப் பால் கொடுப்பதிலோ அல்லது தாய் சேய் உறவிலோ பிரச்சனைகளையும் ஏற்படுத்தாது. இந்த மருந்து எந்த வகையிலும் நஞ்சுக்கொடிக்குள் செல்ல வாய்ப்பு இல்லாததால், குழந்தை எந்த விதத்திலும் பாதிக்கப்படாது. மாறாக வாய் வழியாகத் தாய் ஏதாவது மருந்தை உட்கொண்டால் அது குழந்தையைப் பாதிக்க வாய்ப்பு உள்ளது.

 

எபிடியூரல் மயக்க மருந்து கொடுக்கப்படும் போது பொது மயக்க மருந்து தவிர்க்கப்படுகின்றது. இதனால் பிரசவ நேரத்தில் பெண்கள் சுய நினைவோடு இருக்க முடிகின்றது. மேலும், பொது மயக்க மருந்தால் ஏற்படும் உபாதைகளையும் இது தடுக்க உதவுகின்றது

 

கர்ப்பிணிப் பெண்களால் பிரசவ காலத்தில் ஏற்படும் வலியைப் பொறுத்துக் கொள்ளும் வரையில் இந்த மருந்தின் தேவை இருக்காது. எனினும், அவர்களுக்கு தங்கள் சக்தியை மீறி வலி ஏற்படும் போது, இது போன்ற சில உதவிகள் தேவைப்படுகின்றது. இது அவர்கள் நினைவிழக்காமல் வைத்துக் கொள்ளப் பெரிதும் உதவுகின்றது. குறிப்பாக இந்த மருந்து கர்ப்பிணிப் பெண்கள் ஒரு சமன்பட்ட மன நிலையில் இருக்க ஒரு முக்கிய காரணியாக இருக்கின்றது. பிரசவ நேரத்தில் இது மிக முக்கியமான ஒன்று.

 

தீமைகள்

எந்த மருந்தாக இருந்தாலும், அதில் சில உபாதைகள் இருக்கத்தான் செய்யும். எனினும் அவை பெரிதாக உடல் நலத்தைப் பாதிப்பதில்லை. நாளடைவில் உடல் நல்ல நிலைக்கு வந்து விடும். இந்த வகையில், இந்த எபிடியூரல் மயக்க மருந்து கொடுப்பதால், கர்ப்பிணிப் பெண்களுக்கு என்ன உபாதைகள் ஏற்படக் கூடும் என்பதை இங்கே பார்ப்போம்,

 

குறைந்த இரத்த அழுத்தம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்த மருந்து நரம்பில் செலுத்தப்படுவதால், இயல்பான இரத்த அழுத்தத்தைச் சற்று பாதிக்கக் கூடும். எனினும், பிற மருந்துகள் கொடுக்கப்பட்டு, இந்த குறைந்த இரத்த அழுத்தம் சீரான அளவிற்கு விரைவில் கொண்டு வரப்படும்.

 

சருமத்தில் அரிப்பு ஏற்படக்கூடும். சில பெண்களுக்கு, இந்த மருந்து செலுத்தப்படுவதால், உடலில் அரிப்பு அல்லது ஒவ்வாமை போன்ற உணர்வு ஏற்படக் கூடும். எனினும் இது 1% பெண்களுக்கு மட்டுமே ஏற்பட வாய்ப்பு உள்ளது.

 

அதிக அளவு இந்த மருந்து செலுத்தப்படும் போது, கருவில் இருக்கும் சிசுவை பாதிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் குழந்தையின் வளர்ச்சி பாதிக்கப்படலாம், அல்லது வேறு பிரச்சனைகள் ஏற்படலாம். தாயின் உடலில் இருக்கும் வெப்பத்தைச் சற்று அதிகரிக்கக் கூடும். இருப்பினும், இது அந்த மருந்து கொடுக்கப்படும் அளவை பொறுத்தே உள்ளது.

 

தாய்க்குப் பிரசவத்திற்குப் பின் முதுகு வலி ஏற்பட வாய்ப்பு உள்ளது. முதுகுத் தண்டு, இடுப்பு மற்றும் முட்டிக்கால்கள் போன்ற பகுதிகளில் வலி ஏற்பட வாய்ப்பு உள்ளது. பிரசவம் தாமதமாகலாம். இந்த மருந்து கொடுக்கப்படும் போது அறுவைசிகிச்சைக்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றது. இருதயத் துடிப்பு அதிகரிக்கக் கூடும் மற்றும் குழந்தையின் நிலையில் மாற்றம் ஏற்படக் கூடும்.

 

எபிடியூரல் கொடுக்கப்படுவதால் நன்மை, தீமை இரண்டும் உள்ளன. கர்ப்பிணிப் பெண்களால் முடிந்த வரை வலியைப் பொறுத்துக் கொள்ள முடியுமென்றால், இந்த மருந்தின் தேவை இல்லாமல், சுகப் பிரசவ முறையையே மேற்கொள்ளலாம். எனினும், இது அனைவருக்கும் சாத்தியம் இல்லை என்பதால், தேர்ச்சி பெற்ற மருத்துவரின் உதவியால், இந்த எபிடியூரல் மயக்க மருந்தைச் சரியான அளவு பயன்படுத்த முயற்சி செய்வதே நல்ல தீர்வாக இருக்கும்.

 

ஆதாரம்: மாலைமலர் நாளிதழ் 

பேனர் படம் : arksurgicalhospital

மறுப்பு: வலைத் தளம் மற்றும் பயன்பாட்டில் இடுகையிடும் உள்ளடக்கத்தை துல்லியமாகவும், முழுமையானதாகவும், புதுப்பித்ததாகவும் வைத்திருக்க பேபிசக்ரா பாடுபடுகையில், பேபிசக்ரா எந்தவொரு உள்ளடக்கத்தின் துல்லியத்தன்மையையும், முழுமையையும், நேரத்தையும் பேபிசக்ராவோ, மற்றும் அதன் வழங்குநர்களோ அல்லது வலைத்தளமோ அல்லது பயன்பாட்டின் பயனர்களோ வழங்க முடியும் என்பதற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது, பேபி சக்ரா அதற்கு பொறுப்பல்ல. இந்த உள்ளடக்கத்தின் எந்தவொரு பங்குகளோ, வரவுகளோ அல்லது விநியோகமோ பேபிசக்ரா மற்றும் அதன் ஆசிரியர் / உரிமையாளருக்கு உரிய வரவுகளுடன் செய்யப்பட வேண்டும்.

#delivery
logo

Select Language

down - arrow
Personalizing BabyChakra just for you!
This may take a moment!