• Home  /  
  • Learn  /  
  • புத்தகம் படிக்கும் பழக்கம் இவ்வளவு சிறந்ததா?
புத்தகம் படிக்கும் பழக்கம் இவ்வளவு சிறந்ததா?

புத்தகம் படிக்கும் பழக்கம் இவ்வளவு சிறந்ததா?

13 Mar 2020 | 1 min Read

Medically reviewed by

Author | Articles

நம்மில் எத்தனை பேருக்கு புத்தகம் படிக்கும் பழக்கம் இருக்கிறது. இன்றைய அவசர டிஜிட்டல் உலகில் அமர்ந்து புத்தகம் படிக்க யாருக்கும் நேரம் இருப்பதில்லை. பொறுமையும் இருப்பதில்லை. ஆனால் நம் முந்தைய தலைமுறையினருக்கு நாளிதழ்/புத்தகம் வாசிப்பில் இருந்த சுவாரசியம் இப்போதைய இளம் தலைமுறையினரிடையே இருப்பதில்லை. நாவல்கள்  அவர்களின் உலகை பெரிதும் ஆக்கிரமித்து வைத்திருந்தன எனலாம். இதனாலேயே அவர்கள் மன அழுத்தம் என்ற வார்த்தையை அறியாதவர்களாய் இருந்தனர் எனலாம். புத்தகம் என்பது மாயாஜால வித்தை, கொஞ்சம் சுவாரஸ்யமானதும் கூட. அதாவது, இது வெறும் வித்தை மட்டுமல்ல. ஒரு சிறந்த புத்தகத்தால் ஒருவருக்குள் இருக்கும் தனிமை உணர்வை விலக்க முடியும்; நிறைய மனிதர்களை அறிமுகப்படுத்த முடியும்; குழப்பங்களுக்கு விடை சொல்ல முடியும்; மனதுக்கு ஆறுதல் தர முடியும். அறிவியல்ரீதியாக இவை எப்படிச் சாத்தியம் என்பதையும், வாசிப்பால் கிடைக்கும் நன்மைகள் குறித்தும் விளக்குகிறார் நரம்பியல் மருத்துவர்.

 

அறிவியல் காரணங்கள்

புத்தகம் வாசிக்கும்போது, மூளையின் பின்பகுதி நரம்புகள் தூண்டப்படும். இந்தப் பகுதியில்தான் நினைவுகளின் தொகுப்புகள் இருக்கும். வாசிப்பு அதிகரிக்கும்போது, நிறைய விஷயங்களை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய சூழல் ஏற்படும். இதனால் மூளையின் பின்பகுதி முன்பைவிட அதிகமாகத் தூண்டப்படும். இதனால் கூடுதல் சுறுசுறுப்பாக இயங்க முடியும். ஞாபகசக்தியும் நாளுக்கு நாள் அதிகரிக்கும். கவனம் கூர்மையாகும். நரம்பு மண்டலங்கள் வலுப்பெறும்.

மூளைக்கான பயிற்சி

உடலுக்கும் தசைகளுக்கும் தனித்தனியாக உடற்பயிற்சிகள் தேவைப்படுவதைப் போல மூளைக்கும் உடற்பயிற்சி தேவை. வாசிப்புப் பழக்கம் மூளைக்கான பயிற்சியாக அமையும்.

 

வாசிப்பால் கிடைக்கும் சில நன்மைகள்

  • ஒவ்வொரு விஷயத்தின் மீதும் எல்லோருக்கும் தனிப்பட்ட ஒரு பார்வை இருக்கும். புத்தகம் வாசிக்கும்போது அந்தப் பார்வை விசாலமடையும். இதனால் அனைத்துக் கோணங்களிலுமிருந்தும் சிந்தித்து பின்விளைவுகள், பக்கவிளைவுகள் போன்றவற்றை யோசித்துச் செயல்பட முடியும். குறுகிய எண்ணங்கள் மற்றும் பார்வைகளிலிருந்து ஒருவரால் விடுபட முடியும்.
  • மிகச்சிறந்த ஒரு புத்தகத்தால் ஒருவரின் கவனச் சிதறல் பிரச்னையைச் சரிசெய்ய முடியும். தூக்கம் தொடர்பான பிரச்னைகள் சரியாகும். தூக்க நேரம் நெறிப்படும்.
  • புத்தகம் வாசிப்பதால் அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் மனஅழுத்தம் குறையும்.

 

குழந்தைகள், முதியவர்களுக்கு வாசிப்பு கட்டாயம் – ஏன் தெரியுமா?

குழந்தைகள் பேசக் கற்றுக்கொள்ளும்போது, வார்த்தைகளின் ஓசைகளையும் அர்த்தங்களையும் மட்டுமே தெரிந்து கொள்வார்கள். அவற்றின் பின்னணியிலுள்ள எழுத்துகளைப் புரிந்துகொள்ளவும் உணர்ந்துகொள்ளவும் வாசிப்பு தேவை. எந்தவொரு வார்த்தையையும், மூளை, குறியீடுகளாகத்தான் ஞாபகம் வைத்துக்கொள்ளும் என்பதால் வாசிக்க வாசிக்க, அவை யாவும் குழந்தையின் மூளைக்குள் குறியீடுகளாகவோ, சொற்களாகவோ உருமாறும். இப்படியாகக் குறியீடுகள் சொற்களாகும் நிலை ‘Word Recognition’ எனப்படும். உருவாகும் சொற்களின் அர்த்தங்களைப் புரிந்துகொள்ளும் நிலை ‘Comprehension’ எனப்படும். அர்த்தங்களின் அடிப்படையில், வார்த்தைகளைக் கோர்வையாக்குவது ‘Fluency’ எனப்படும். இவை அனைத்தும், ஒரே நேரத்தில் இணைந்து நடக்கும்போது பேச்சுக்கலை குழந்தைக்கு எளிமையாகும். குழந்தைகள் மொழி உச்சரிப்பில் சரளமாக இருக்க வாசிப்பு அவசியம்.

ஆரம்பத்தில் சில வருடங்களுக்கு, பெற்றோர் குழந்தைகளுக்கு வாசித்துக் காட்டுவது நல்லது. குழந்தையைச் சத்தமாக வாசிக்கச் சொல்வதன் மூலம் அவர்களின் பேச்சாற்றலை மேம்படுத்தலாம். ஏற்ற இறக்கங்களோடு பேச அவர்கள் கற்றுக்கொள்வார்கள்.

 

ஒருவர் என்ன மாதிரியான புத்தகத்தைப் படிக்கிறார் என்பதைப் பொறுத்துதான், அதனால் கிடைக்கும் நன்மைகள் அனைத்தும் அமையும். உதாரணமாக, அதிக கதாபாத்திரங்கள்கொண்ட புத்தகங்களைப் படிப்பவர்களுக்கு, கற்பனைத்திறன் மேம்படும். நிறைய விஷயங்களை நினைவில் வைத்துக்கொள்வதால், நரம்பு மண்டலத்தின் செயல்பாடு அதிகரிக்கும். இது ஞாபகசக்தியை அதிகரிக்கும். ஞாபகசக்தி அதிகரிக்கும்போது சுறுசுறுப்புடனும் புத்துணர்ச்சியுடனும் இயங்க முடியும். இதுவே இலக்கியம் சார்ந்து நிறைய படிப்பவர் எனில், அவருக்கு மொழிப் புலமை அதிகரிக்கும். அப்படிப்பட்டவர்கள், நிறைய புதிய வார்த்தைகளைக் கற்றுக்கொள்ள முடியும். வார்த்தைகளுக்கு மத்தியிலிருக்கும் நுண்ணரசியல், ஒரே அர்த்தத்தைக்கொண்ட வெவ்வேறு வார்த்தைகளின் பின்னணி, சொற்களின் உள்ளர்த்தங்கள் போன்றவற்றை முழுமையாகத் தெரிந்துகொள்ள முடியும். பாசிட்டிவ்வான கதாபாத்திரங்களைத் தேடிப்பிடித்துப் படிக்கும்போது, வாழ்க்கையும் அப்படியே மாறும். ஒவ்வொரு புத்தகத்தைப் படிப்பதால் ஒவ்வொரு வகையான பலன் கிடைக்கும் என்பதால், ‘இது படித்தால் இப்படி நடக்கும், இந்தப் பலன் கிடைக்கும்’ என்ற எதிர்பார்ப்போடு புத்தகங்களை வாசிக்க வேண்டாம். எந்த மாதிரியான புத்தகங்களை நெருடலில்லாமல் படிக்க முடிகிறதோ, அவற்றைக் கண்டெடுத்து படிப்பதே போதுமானது. தோல்வியை ஏற்றுக்கொள்வதற்கான மனநிலையும் அடுத்த முயற்சிக்குத் தயாராவதற்கான தைரியமும் தன்னம்பிக்கையும் புத்தக வாசிப்பில் அதிகரிக்கும்.

 

வாசிப்பென்பது மனதளவில் ஒருவரின் சுற்றத்தையே மாற்றியமைக்கும் அளவுக்கு ஆழமானது. எனவே, மன அழுத்தத்தில் இருப்பவர்களுக்கான சிறந்த தீர்வாக அது இருக்கும். `நான் மனஅழுத்தத்தில் இருக்கிறேன். புத்தகம் வாசிக்கப் போகிறேன்’ என்பவர்கள், ‘என்ன படிக்கிறோம், எதைப் படிக்கிறோம்’ என்பதில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். உங்களுக்கான புத்தகம் எந்தத் துறையைச் சார்ந்து இருக்க வேண்டும் என்பதை, யாருடைய பரிந்துரையுமின்றி நீங்களே முடிவு செய்யுங்கள்.

 

வாசிப்பு, பகுப்பாய்வுத் திறனை அதிகரிக்கும். ஆகவே, சுயம் சார்ந்த தேடல்கள் அதிகரிக்கும். இந்தத் தேடல், வாழ்க்கையில் அடுத்த படிநிலைக்குச் செல்ல உதவும். ஆக, வாழ்க்கை சிறக்க வாசிப்பை நேசிப்போம்!

மறுப்பு: வலைத் தளம் மற்றும் பயன்பாட்டில் இடுகையிடும் உள்ளடக்கத்தை துல்லியமாகவும், முழுமையானதாகவும், புதுப்பித்ததாகவும் வைத்திருக்க பேபிசக்ரா பாடுபடுகையில், பேபிசக்ரா எந்தவொரு உள்ளடக்கத்தின் துல்லியத்தன்மையையும், முழுமையையும், நேரத்தையும் பேபிசக்ராவோ, மற்றும் அதன் வழங்குநர்களோ அல்லது வலைத்தளமோ அல்லது பயன்பாட்டின் பயனர்களோ வழங்க முடியும் என்பதற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது, பேபி சக்ரா அதற்கு பொறுப்பல்ல. இந்த உள்ளடக்கத்தின் எந்தவொரு பங்குகளோ, வரவுகளோ அல்லது விநியோகமோ பேபிசக்ரா மற்றும் அதன் ஆசிரியர் / உரிமையாளருக்கு உரிய வரவுகளுடன் செய்யப்பட வேண்டும்.

#mindfulparenting

A

gallery
send-btn

Related Topics for you