சிசேரியன் vs சுகப்பிரசவம்! எது நல்லது?

சிசேரியன் vs சுகப்பிரசவம்! எது நல்லது?

5 Oct 2021 | 1 min Read

Medically reviewed by

Author | Articles

கர்ப்பமாக இருக்கும்போது பிள்ளையை பாதுகாப்பாக பெற்றெடுத்தால் போதுமென நினைப்போமே தவிர, அது சிசேரியனாக இருக்க வேண்டும், சுகப்பிரசவமாக இருக்க வேண்டுமென எல்லாம் யாரும் யோசிப்பதே இல்லை. ஆனாலும், இவை இரண்டுக்கும் நடுவே பல வேறுபாடுகள் உண்டு. பல சவுகரியங்கள் உண்டு, பல அசவுகரியங்கள் கூட உண்டு. அவை என்னவென்பதை இந்த பயனுள்ள பதிவின் மூலம் படித்து தெரிந்துக்கொள்வோம்.

நாம், நமக்கு சுகப்பிரசவம் தான் வேண்டும், சிசேரியன் தான் வேண்டுமென நினைத்து மனதளவில் அடம்பிடித்தாலும், அது ஒன்றும் நம் கையில் இல்லை என்பதே யதார்த்தம் கலந்த உண்மை. ஆம், அதனை முடிவு செய்வது நம்முடைய மருத்துவர்கள் கையிலே உள்ளது.

 

சுகப்பிரசவம்:

யோனி மூலம் குழந்தையை பெற்றெடுப்பது சுகப்பிரசவமாகும். இந்த சுகப்பிரசவத்தின் போது அதிக நாட்கள் மருத்துவமனையில் நாம் தங்குவது இல்லை, அதிகம் ஊசிப்போட வேண்டிய அவசியமும் இல்லை. குணமடைந்து வீடு திரும்பக்கூடிய நேரமும் மிக குறைவே.

 

சிசேரியன்:

அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியில் எடுப்பது சிசேரியன் எனப்படும். சுகப்பிரசவம் செய்ய முடியாமல் போனாலோ, அம்மாக்கள் சிசேரியன் போதுமென சொன்னால் மட்டுமே சிசேரியன் செய்யப்படுகிறது. இவை, மருத்துவ ரீதியாக அதிகம் தொடர்புடைய ஒரு விஷயமாகும்.

 

சுகப்பிரசவம் எப்படி நடக்கும்?

சுகப்பிரசவம் மருத்துவமனையிலோ, பர்த் சென்டரிலோ, வீட்டிலோ கூட சாத்தியமான ஒன்று. இதனில் மூன்று நிலைகள் உள்ளன. அவை ஆரம்ப நிலை (முதல் நிலை), செயல்பாட்டு நிலை (இரண்டாவது நிலை) மற்றும் இடைநிலை (மூன்றாவது நிலை) ஆகியவையாகும். நர்ஸ் அல்லது டாக்டர்கள், நீங்கள் எந்த நிலையில் இருக்கிறீர்கள் என்பதை கருப்பை வாய்ப்பகுதி குறித்து கவனித்துக்கொண்டே இருப்பார்கள்.

கருப்பை வாய்ப்பகுதி 10 செ.மீ இருக்கும்போது, நன்றாக விரிந்துக்கொடுக்கும். ஆம், இப்போது நாம் புஷ் செய்ய வேண்டிய நேரமிது. நம்முடைய மருத்துவர்கள் கீழ் நோக்கி புஷ் செய்ய சொல்வார்கள். அப்போது குழந்தையின் தலை சரியான நிலையில் வருகிறதா என்பதையும் மருத்துவர்கள் கவனிப்பார்கள்.

 

சிசேரியனில் என்ன செய்வார்கள்?

சிசேரியன், சுகப்பிரசவத்தை காட்டிலும் வித்தியாசமானது. இந்த அறுவை சிகிச்சையானது பொதுவாக 45 நிமிடங்கள் மட்டுமே இருக்கும். சுகப்பிரசவம் அதிக நேரம் எடுக்கக்கூடியது. இந்த வகையான சிசேரியன் முறையில், நம்முடைய மருத்துவர் வயிறு மற்றும் கருப்பையை அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியில் எடுப்பார்.

குழந்தை வெளியில் வந்தபிறகு, அவர்கள் தொப்புள் கொடியை கட் செய்வார்கள். நஞ்சுக்கொடியை நீக்கி தையல் போடுவார்கள். இந்த அறுவை சிகிச்சையின் போது, மயக்க மருந்தும் கொடுக்கப்படும்.

பிறகு, பிள்ளைகளின் ஆரோக்கியம் குறித்தும் டாக்டர்கள் கவனிப்பார்கள்.

 

குணப்படுத்துதல்:

டாக்டர்கள் முதல் 6 வாரங்களில் உங்களுடைய அறுவை சிகிச்சைக்கு அப்புறமான புண் எந்தளவுக்கு குணமாகி வருகிறது என்பதை பார்ப்பார். அதனால், பிரசவத்துக்கு பிறகு அது குணமாவதற்கு நமக்கு போதுமான ஓய்வு ரொம்ப அவசியம்.

சுகப்பிரசவ புண்ணானது ஆறுவது ஒவ்வொருவருக்கும் வித்தியாசப்படும். ஒரு சிலருக்கு சுகப்பிரசவத்தின்போது விரிந்து கிழியும்போது அது ஆறுவதற்கு 6 வாரமாவது ஆகிறது.
ஒருவேளை சுகப்பிரசவம் எளிதில் சிரமமின்றி முடிந்திருந்தால் உங்களின் புண் ஆற 3 வாரங்கள் அல்லது அதற்கு குறைவாக ஆகலாம்.

அதேபோல, முதல் சில வாரங்கள், உங்களது புண் அரிப்புடனும், வலியுடனும் இருப்பதையும் நீங்கள் உணர்வீர்கள். இதுவும் புண் ஆறுவதற்கான அறிகுறிதான்.

 

எது சீக்கிரம் குணமாகும்?

சிலர் சிசேரியனை விட சுகப்பிரசவம் சீக்கிரம் குணமடைந்துவிடும் என்கின்றனர். ஆனால், ஒரு சிலர் இதற்கு மாற்றாகவும் கூறுகின்றனர். இதற்கு காரணம், சுகப்பிரசவத்தின் போது எவ்வளவு நேரம் எடுக்கிறது, எவ்வளவு கருப்பை விரிந்துக்கொடுக்கிறது என்பதை பொறுத்தே அமையும்.

இது ஒவ்வொருவர் உடலை பொறுத்து மாறுபடவும் செய்கிறது.

 

அபாயங்கள் மற்றும் சிக்கல்கள் என்னென்ன?

இரண்டிலுமே நன்மை, தீமை என இரண்டும் கலந்தே உள்ளது.

சுகப்பிரசவம் ஆகும் பெண்களுக்கு தோல் கிழிந்து காணப்படும். இதனால் எபிசியோடமி தையல் செய்யப்படுகிறது. இதற்கு தையல்கள் போடப்பட்டு, குணமாவதற்கான நேரமும் சில வாரங்கள் வரை எடுக்கிறது. கூடுதலாக ஒரு சில பெண்களுக்கு, கர்ப்பப்பை ஆனது சுகப்பிரசவத்தின் போது இறங்கவும் செய்கிறது.

அதேபோல, சிசேரியனிலும் குறைகள் காணப்படுகின்றன. ஆம், தொற்று ஏற்படுதல், இரத்த இழப்பு, இரத்தம் உறைந்து காணப்படுதல், குடல் பகுதி அல்லது சிறுநீர்ப்பையில் காயம் போன்றவையும் ஏற்படக்கூடும். அதோடு, மயக்க மருந்தும் ஒரு சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தலாம்.

ஒட்டுமொத்தத்தில்,

சுகப்பிரசவம், சிசேரியன் இரண்டிலுமே பல வித நிறைகளும், குறைகளும் இருக்கத்தான் செய்கிறது. நம்முடைய கர்ப்ப காலத்தை பொறுத்தே, எது நம்முடைய உடலுக்கு நல்லது என்பதை மருத்துவர் பரிந்துரைப்பார்.

எதுவாக இருந்தாலும், நம்முடைய இலக்கு ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுப்பது மட்டும் தான் என்பதை நினைவில் வைத்து செயல்படுவதே சிறந்ததாகும்.

அழகிய குழந்தையை ஈன்றெடுக்க காத்திருக்கும் அனைவருக்கும் என் அட்வான்ஸ் நல்வாழ்த்துக்கள்.

#delivery

A

gallery
send-btn

Related Topics for you