கர்ப்பகால / பிரசவத்திற்குப் பின்னான மன அழுத்தம் / #Postpartum _Depression / #Post _Maternity_Depression

கர்பகால / பிரசவத்திற்குப் பின்னான மன அழுத்தம் / Postpartum Depression / Post Maternity Depression

பெண்கள் கருத்தரிப்பதே சிக்கலாகி வரும் இந்தக் காலகட்டத்தில் அதிகம் பேசப்படாத அல்லது கவனிக்கப்படாத கர்ப்பகால / பிரசவத்திற்குப் பின்னால் பெண்களுக்கு வரக்கூடிய மன அழுத்தம் பற்றி அறிந்துகொள்வோம்.

மன அழுத்தம் பெரும்பாலும் அனைவருக்கும் வரக்கூடியதுதான் என்றாலும் பெண்களுக்கு இது அதிகம். காரணம் ஹார்மோன் பிரச்சனைகள். கர்ப்பகாலத்திலும், பிரசவத்தின்பொழுதும் குறுகிய காலகட்டத்தில் அதிகமாக ஏறி இறங்கும் இதுபோன்ற ஹார்மோன்களால் சுமார் 13% பெண்களுக்கு மன அழுத்தம் வருவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

கர்ப்ப காலத்தை விட, பிரசவத்திற்குப் பின் பல பெண்கள் இதுபோன்ற பேறுகாலத்திற்குப் பின்னான மன அழுத்தம் அதிகம் பாதிக்கிறது. தனக்கு மன அழுத்தம் இருக்கிறது என்று அறியாமலேயே துன்பப்படும் பெண்கள் அதிகம். அதை எப்படிக் கண்டுகொள்வது என்று சில காரணிகளைக் கூறுகிறார்கள்:

எப்பொழுதும் படபடப்பாக அல்லது மவுனமாக இருப்பது.சோகமாக, விரக்தியாக இருப்பதுஅதிகம் அழுவது.உடலில் சக்தியே இல்லாமல் இருப்பது, உற்சாகம் இல்லாமல் இருப்பது.

குறைந்த அளவு உறங்குவது அல்லது அதிகம் உறங்குவது.

மனதை ஒருமுகப்படுத்துதல், விரைந்து முடிவெடுப்பதில் சிக்கல்

ஞாபக சக்தி குறைவது.

நாம் எதற்குமே பிரயோஜனமில்லையோ என்று எண்ணுவது.

இதுவரை நீங்கள் மகிழ்ச்சியாக செய்துகொண்டிருந்தவைகள் இப்பொழுது உங்களுக்கு வெறுப்பாக இருப்பது.

சொந்த பந்தம், நட்புகளிலிருந்து விலகத் துவங்குதல்.

உடல் வலி, தலைவலி, வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், அவை தொடர்ந்து தீராமல் இருப்பது.

ஹார்மோன் பிரச்சனைகள் தவிர்த்து இதுபோன்ற மன அழுத்தத்திற்கான காரணிகளாகச் சொல்லப்படுபவை:

குடும்பத்தில் மன அழுத்தம் பரம்பரையாக வருபவர்களுக்கு இது எளிதில் வரக்கூடிய பிரச்சனையாக இருக்கிறது.

குடும்பத்தில் / நெருங்கிய உறவில் ஏற்படும் திடீர் மரணம் ஏற்படுத்தும் அதிர்ச்சி. மூளையில் ஏற்படும் ரசாயண மாற்றங்கள்.

மிகவும் அழுத்தமான, பரபரப்பான, ஓய்வில்லாத வாழ்க்கை முறை குடும்ப வன்முறைகள், ஏழ்மை, குடும்பத்தில் ஏற்படும் சன்டை சச்சரவுகள்.

ஹார்மோன்கள் இதில் பெரும்பங்கு வகிக்கின்றன. மெனோபாஸ் நேரம், மாதவிடாய் ஏற்படுவதற்கு முன்பு, வயதுக்கு வரும்நேரம், கர்பம் தரிக்கும்பொழுதும், கர்ப்ப காலத்திலும், ஹார்மோன்கள் நேரடியாக மூளையில் ரசாயணமாற்றத்தை ஏற்படுத்துவதால் எளிதில் இந்த மன அழுத்தம் பெண்களை ஆட்கொள்கிறது.

குழந்தை பிறப்பிற்குப் பின்னான மன அழுத்தம் - Postpartum depression இதில் முக்கியமாகக் கவனிக்கப்படவேண்டிய / சரி செய்யப்படவேண்டிய ஒன்று. பரவலாக நம் நாட்டில் பெண்களுக்கு இந்தப் பிரச்சனை பற்றிய விழிப்புணர்வு இல்லை, நமது கலாச்சாரம், வாழ்க்கை முறையில் இது தவறுதலாகப் புரிந்துகொள்ளப்பட்டு மேலும் உறவு சார்ந்த சிக்கலாகவே பார்க்கப்படுகிறது அல்லது தவறாகப் புரிந்துகொள்ளப்படுகிறது என்பது வேதனை.

கர்ப்பகாலத்தில் ஈஸ்ட்ரொஜென் மற்றும் ப்ரொஜெஸ்ட்ரொன் ஹார்மோன்கள் அளவுகள் அதிகரிக்கின்றன. குழந்தை பிறந்து 24 மணி நேரத்தில் விரைவில் அவை நார்மல் அளவிற்கு வருகின்றன. இந்த ஏற்ற இறக்கம் மன அழுத்தத்திற்கான முக்கிய காரணியாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். இதே காரணியே மாதவிடாய் துவங்கும் நாட்களுக்கு சற்று முன்பாகவும் ஏற்படுகிற மன அழுத்தத்திற்கான காரணமாகவும் சொல்லப்படுகிறது. போக தைராய்டு ஹார்மோன்களின் அளவுகளும் பிரசவத்திற்குப் பிறகு குறைவதும் ஒரு முக்கிய காரணியாகிறது. பிரசவத்திற்குப் பிறகான சோர்வு, சரியான உறக்கமின்மை, குழந்தைக்கு தான் சரியான தாயாக இருக்கமுடியுமா என்ற குழப்பம், வேலைக்குச் செல்லும் மகளிருக்கு ஏற்படும் நேரமின்மை அதனால் குழந்தையை / வேலையை சரியாக நிர்வகிக்கமுடியாத சிக்கல்கள், ஒரு உலகம் போற்றும் உத்தமத் தாயாக இருக்க வேண்டி ஏடாகூடமாக யோசித்தல், குழந்தைப் பிறப்புக்கு முன்பான உங்கள் பிம்பத்தை நீங்கள் இழப்பது. உடல் அழகு / தோற்றம் மாறுவதால் ஏற்படும் அடையாளச் சிக்கல்கள், பொழுதுபோக்கு மற்றும் உங்களுக்கேயான நேரம் குறைவது போன்றவைகளும் இந்த மன அழுத்தத்திற்கான தூண்டுகோலாக இருக்கிறது.

சில பெண்களுக்கு மன அழுத்தம் ஏற்கனவே கண்டறியப்பட்டு, அவற்றிற்கு மருந்துகள் உட்கொண்டு பிரசவகாலத்தில் அந்த மருந்துகளை எடுக்காமல் இருப்பதாலும் மீண்டும் மன அழுத்தம் வருகிறது. மன அழுத்தம் பலருக்கு அவர்கள் குடும்பத்தில் பரம்பரையாக இருப்பது மற்றும் சரியான குடும்பத்தினரின் ஒத்துழைப்பின்மை, உறவுச் சிக்கல்கள். கர்ப்பமடைந்தது குறித்த பயம் மற்றும் சந்தேகம், கர்ப்பத்தால் ஏற்படும் உடல் மாற்றங்களால் ஏற்படும் மனச்சோர்வு, எதிர்மறை எண்ணங்கள், ஏற்கனவே குழந்தை பிறப்பில் / கர்ப்பத்தில் சிக்கல்கள் எழுந்திருந்தால் அது பற்றிய கவலை / பயம். பொருளாதாரச் சிக்கல்கள், மிகவும் அழுத்தமான டென்ஷன் வாழ்க்கை முறை, வயது, குடும்ப வன்முறை போன்றவைகளையும் கணக்கில் எடுக்கலாம்.

பிரசவத்திற்குப் பின் பெண்களுக்கு இதுபோன்ற சிக்கல்கள் இருந்தால் இது மன அழுத்ததிற்கான அறிகுறிகள் என்று அறிந்து அதற்கான நடவடிக்கையைத் துவங்குவது நல்லது. பிரவத்திற்குப்பிறகு ஏற்படும் இந்த மனஅழுத்தம் தற்கொலை, குழந்தையை வெறுப்பது, காயப்படுத்துவது / கொல்லும் எண்ணங்கள், தாயே தன்னைக் காயப்படுத்திக்கொள்ள முயற்சிப்பது, குழந்தை மேல் நாட்டமில்லாமல் இருப்பது, குழப்பமாகவே இருப்பது, இல்லாத பொருளை இருப்பதாகக் கற்பனை செய்து தேடுவது, அடிக்கடி மூட் மாறுவது, தூக்கமின்மை, பசியின்மை, அழுகை என்று மீளமுடியாத நிலைக்குத் தள்ளிவிடும்.

பொதுவாக இது பிரசவம் முடிந்த பெண்களுக்கு ஹார்மோன் ஏற்ற இறக்கங்களால் ஏற்பட்டு வெகு விரைவில் சரியாகிவிடும் என்றாலும், சிலருக்கு இது தொடரும் அபாயம் இருப்பதால் மருத்துவர்கள் சாதாரணமான கேள்விகள் மூலம் இதைக் கண்டறிய முயல்வார்கள். குழந்தையைத் தூக்குகிறீர்களா? கொஞ்சுகிறீர்களா? பால் தருகிறீர்களா? என்பது போன்ற சில கேள்விகள் உங்களில் சிலரிடம் கேட்கப்பட்டிருக்கலாம். நாம் இப்படி இருந்ததில்லையே? இப்பொழுது ஏன் இப்படி நடந்துகொள்கிறோம் என்று ஓப்பனாக பேச வரும் பெண்கள் குறைவு, அதனாலேயே வெளிக்காட்டிக்கொள்ளாத இந்தப் பிரச்சனை அவர்களுக்கு மேலும் பல சிக்கல்களை வரவழைத்து அது அவரின் குணாதிசியமாகப் புரிந்துகொள்ளப்பட்டு மேலும் சிக்கலாக்கப்படுகிறது.

குழந்தை பிறப்பிற்குப் பின் இருவாரங்களில் இது போன்ற பிரச்சனைகள் சீராகவில்லை என்றால், மன அழுத்தம் அதிகரித்தால்,உங்கள் வேலைகளில் கவனம் செலுத்தமுடியவில்லை என்றால், உங்களையும் குழந்தையையும் உங்களால் கவனிக்க முடியவில்லை என்றால், உங்களையும், குழந்தையையும் காயப்படுத்திக்கொள்ளும் எண்ணங்கள், தற்கொலை உணர்வுகள் மேலோங்கினால், நீங்கள் இதை உங்கள் மருத்துவரிடம் உடனடியாகக் கலந்தாலோசிப்பது நல்லது. இதை வெளியில் சொல்லக் கூச்சமோ, தயக்கமோ அடையத் தேவையில்லை. இதைப் பற்றிப் பேசினால் தவறாக எண்ணிவிடுவார்களோ என்று அச்சமடையத் தேவையில்லை.

என்ன செய்யலாம்?

நல்ல ஓய்வு முக்கியம்.

உலகில் ஒப்பற்றத் தாயாக / பெண்ணாக இருக்கப் பிரயத்தனப்படாதீர்கள். உங்களால் என்ன முடியுமோ அதை ஆத்மார்த்தமாகச் செய்தால் போதும். அடுத்தவரைப் பார்த் உங்களை / உங்கள் குழந்தையை ஒப்பிடவேண்டாம்.

உங்கள் குடும்பத்தினர் / கணவர் / நண்பர்களிடம் உங்களுக்குத் தேவையான உதவிகளைக் கேளுங்கள்.

மகிழ்ச்சியாக இருங்கள், நண்பர்களை, உறவினர்களை, பிடித்த இடங்களைப் பார்க்கச் செல்லுங்கள்.

உங்களுக்கு நம்பகமானவர்களிடம் உங்கள் பிரச்சனையைப் பற்றிப் பேசி உங்கள் அழுத்தத்தைக் குறைக்கலாம்.

உங்களைப் போன்று பிரசவித்த தாய்மார்களிடம் பேசி அவர்களின் அனுபவத்தைக் கேட்கலாம்.

கர்ப்பகாலத்தில் இந்த மன அழுத்தம் சரியாகக் கவனிக்கபடாவிட்டால், பிரசவத்தில் சிக்கல், எடை குறைவான குழந்தை, குறை பிரசவம் போன்றவை ஏற்பட வாய்ப்புண்டு என்பதால் கவனமாக இருக்கவும். மேலும் இது பிறக்கும் குழந்தையையும் பாதிக்கிறது. பேசத் துவங்குவதில் சிக்கல் / தாமதம், அம்மா / குழந்தை நெருக்கத்தில் பிரச்சனை, குழந்தை அடம்பிடிப்பது / ஒழுக்கச் சிக்கல்கள், அதிக அழுகை போன்றவை இதனால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள்.

ஆக, வயதுக்கு வருவது முதல், கருவுற்று, பிரசவித்து, குழந்தையை வளர்த்து ஆளாக்குவது வரை ஒரு பெண் ஆரோக்கியமாகவும், தனது பிரச்சனைகளை சரியாகக் கையாளத் தெரிந்தவராகவும் இருக்கவேண்டியது அவசியம். கட்டுப்பாடான நமது கலாச்சாரம் சார்ந்த வாழ்க்கை முறையில் இதுபோன்ற உளவியல் சிக்கல்களை சரியாக அடையாளம் கண்டுகொள்வதும், அதற்கு சரியான சிகிச்சை அல்லது உணவுமுறை மூலம் தீர்வுகாண்பதும் ஆரோக்கியமான குடும்பம், எதிர்கால சந்ததிகளுக்கு மிகவும் அவசியமான ஒன்றாக ஆகிறது. எல்லாவற்றையுமே ஒருவரின் கேரக்டருடன் தொடர்பு படுத்தாமல் உளவியல் ஞானத்துடன் அணுகினால் , வெகுவிரைவில் அவர் குணமடைவதுடன் குடும்ப வாழ்க்கை இனிமையாகவும் அமையும்.

Article by : Shankar Ji

-- #Post _Maternity_Depression

#postpartum _depression

#பிரசவகால_மனஅழுத்தம்.

(படித்ததில் பகிர்ந்தது)


தகவலுக்கு நன்றி! பகிர்வும் இது போன்ற விசயங்களை.

Divya nalla info, inum posts la podunga , congrats

Very good info.


Suggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.

Recommended Articles

Scan QR Code
to open in App
Image
http://app.babychakra.com/feedpost/93920