உங்கள் குழந்தைக்கு முதல் பிறந்த நாள் முடிந்து விட்டதா? இனி நீங்கள் எங்கே சென்றாலும் எல்லாரும் கேட்க கூடிய ஒரே கேள்வி, ‘உங்க குழந்தைய எந்த ஸ்கூல்ல சேர்க்க போறீங்க?’ பெற்றோர்கள் உடனே இதைப் பற்றி யோசிக்க ஆரம்பிப்பார்கள். வீட்டைவிட்டு குழந்தை வெளியே பள்ளிக்கு செல்லும் முன், தன் குழந்தைக்கு என்ன கற்பிக்க வேண்டும்? முக்கியமாக எப்படி படிக்க கற்றுக் கொடுப்பது? இதையெல்லாம் எண்ணி நீங்கள் குழம்ப வேண்டியதில்லை. முதலில் குழந்தைக்கு எப்படி புத்தகம் படிக்க கற்றுக் கொடுப்பது என்று நாம் விரிவாக காணலாம்.
குழந்தைக்கு எப்படி புத்தகம் படிக்க கற்றுக் கொடுப்பது?
- முதலில் பெற்றோர்களுக்கு பொறுமை மிகவும் அவசியம். சில குழந்தைகள் நீங்கள் சொல்கிறதைக் கேட்டு அதற்கேற்ப படிப்பார்கள். ஆனால், சிலர் அப்படியில்லை. துருதுருவென இங்கேயும் அங்கேயும் ஓடிக் கொண்டிருப்பார்கள்.
- முதலில் அவர்களை ஒரு இடத்தில் உட்கார வைப்பதென்பது பெரிய விஷயம்.
- முடிந்தவரை பெற்றோர்கள் 2-3 மணிநேரம் ஒதுக்கி வைக்கவேண்டும்
- அதே சமயம், இரவில் குழந்தை தூங்க போகும் நேரத்தில் புத்தகத்தைக் கொடுக்க வேண்டாம்
- சிறு வயது குழந்தைகளுக்கு நல்ல வண்ணமயமான அதிக படம் போட்ட புத்தகங்களை வாங்கிக் கொடுக்கவும்.
- ஆரம்பத்தில் குழந்தைக்காக வாங்கும் புத்தகம் முடிந்தவரை குறைவான பக்கங்கள் மட்டும் இருப்பதே நல்லது.
- நீங்களும் குழந்தையுடன் இருந்து, அவனுடன் சேர்ந்து புத்தகத்தைப் படிக்க ஆரம்பிக்கவும்.
- ஒவ்வொரு வார்த்தை நீங்கள் சொல்லச்சொல்ல, உங்கள் குழந்தையும் அதே போல அந்த வார்த்தையை உச்சரிக்க வையுங்கள்.
- அப்போதுதான் உங்கள் குழந்தைக்கு பல்வேறு வார்த்தைகளின் வெளிப்பாடு கிடைக்கும்
- முதலில் வண்ணமயமான எழுத்து புத்தகத்தை எடுக்கவும். ஒவ்வொரு எழுத்துக்களையும் மெதுவாக கற்றுக் கொடுக்க ஆரம்பிக்கவும். அந்த எழுத்துக்கள் அவன் ஆழ் மனதில் பதியும் வரை அவனுக்கு தொடர்ந்து சொல்லிக் கொடுக்கவும். படங்களையும் விடாமல் காட்டிக் கொடுக்கவும்.
- அடுத்த நாள், உங்கள் குழந்தையால் முன்பு படித்ததை நினைவுக்கு கொண்டு வர முடிகிறதா என்பதையும் கவனிக்கவும்.
- எந்த காரணத்தைக் கொண்டும், குழந்தையை திட்டவோ அடிக்கவோ கூடவே கூடாது. அப்படி செய்தால் அவர்கள் ஆழ் மனதில், படிப்பை வெறுக்க தொடங்குவார்கள். முன்பு கூறியது போல, பொறுமையை கடைப்பிடிக்க வேண்டியது மிகவும் அவசியம்.
- நீங்கள் பதற்றத்தில் இருக்கும்போது, குழந்தைக்கு பாடம் கர்ப்பிக்காதீர்கள்.
- முடிந்த வரை ஆரம்பத்தில், குழந்தைகளுக்கு கம்ப்யூட்டர் அல்லது மொபைல் ஃபோன் பயன்படுத்தி பாடங்களைக் கர்ப்பிக்காதீர்கள்,
- குழந்தையை முதன்முதலில் புத்தகத்தைக் காட்டிதான் கற்பிக்க வேண்டும். இல்லையென்றால், பின்வரும் காலத்தில், புத்தகத்தின் மகத்துவத்தை அறியாமல் போய் விடுவான். ஆதலால், புத்தகத்தின் மகத்துவத்தை மறக்காமல் உங்களின் குழந்தைக்குப் போதிக்கவும்.
- அடுத்தது, மிருகங்களின் படங்கள் உள்ள ஒரு புத்தகம். ஒவ்வொரு படத்தையும் குழந்தைக்குக் காட்டவும். இது பூனை. இது யானை. இப்படி ஒவ்வொன்றாக நீங்கள் எடுத்துரைக்கவும். உங்கள் குழந்தையும் அப்படியே ஒப்புவிக்குமாறு கூறவும். மிருகங்களின் இடையிலுள்ள வேறுபாடுகளை விவரிக்கவும்.
- பொதுவாக குழந்தைகளுக்கு அதிக புகைப்படம் உள்ள புத்தகத்தை காட்டும்போது, அந்த புகைப்படங்கள் அவர்கள் மனதில் ஆழமாக பதியும்.
- இப்படி படிப்படியாக, கதைகளையும் கற்பிக்க ஆரம்பிக்கவும். அப்போதுதான், குழந்தையின் கற்பனைத்திறன் நன்றாகவே மேம்படும்.
- அடுத்தது, ர்ய்ம்ஸ். நீங்களே படித்துக் காட்டவும். அதனுடன் உங்கள் குழந்தையும் குதூகலத்துடன் நீங்கள் கூறுவதை ஒப்பிப்பான். அப்படி ஒப்பிக்கும்போது, அக்குழந்தையின் ஒப்பிக்கும் திறனை உங்களால் புரிந்து கொள்ள முடியும்.
- ஒவ்வொரு புத்தகத்தையும் படித்த பிறகு, அதில் உங்கள் குழந்தை என்ன கற்றுக் கொண்டார் என்று மறக்காமல் கேட்கவும்.
- அதே போல, அம்மா சொல்லிக் கொடுத்த பாடத்தை மறக்காமல் குழந்தை தன் தந்தையிடம் போதிக்குமாறு வழக்கத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான், குழந்தை ஒரு விஷயத்தை எப்படி தெரிவிக்கிறான், என்கிற யோசனை உங்களுக்கு கிடைக்கும்.
- இப்படி படிப்படியாக அவனுக்கு அதிக புத்தகங்களை வாங்கிக்கொடுக்கவும். படிப்பதெதுவோ, அது உங்கள் குழந்தை விருப்படுகிற புத்தகமாக இருக்க வேண்டும். படிக்கும்போது மறக்காமல் டிவி, மொபைல் மற்றும் ரேடியோவை ஒதுக்கி வைக்கவும்.
- போக போக அவனுக்கு குட்டிக்கதைகள், தெனாலிராமன் கதைகள், போன்ற அறிவுக்கு விருந்தளிக்கும் புத்தகங்களை வாங்கிக்கொடுக்கவும்.
- நீங்களும் உங்கள் குழந்தையிடம் புராணங்களில் உள்ள குட்டிக்கதைகளையும் கற்பித்துக் கொடுக்கவும்.
தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை. ஆதலால், இப்போது நீங்கள் கற்றுக் கொடுக்கும் ஒவ்வொரு விஷயமும்தான், அவன் பிற்காலத்தைத் தீர்மானிக்கும் என்பதை மறந்து விடாதீர்கள். ஆதலால், தாயோ தந்தையோ மட்டுமல்ல. தாயும் தந்தையும் சேர்ந்துதான், அவனைப் புத்தகம் படிக்க வைக்க வேண்டும். இப்படி செய்யும்போது, குழந்தைக்கு படிப்பு மேல் உள்ள ஆர்வம் நாள் போகப்போக அதிகமாகும். படிக்கும் நேரம்தான், தாய் தந்தையுடன் அறிவு சார்ந்து இணைகிற நேரம் என்று உங்கள் குழந்தையின் மனதில் ஆழமாக பதிய வேண்டும். அப்போதுதான், நீங்கள் அழைக்காமலேயே படிப்பதற்குரிய வேகம் உங்கள் குழந்தையின் மனதில் அதிகரிக்கும்.
#babychakratamil