பிள்ளைகள் பெற்றோர்களை கவனிக்கிறார்கள். அவர்களையே முன்மாதிரியாகக் கொள்கிறார்கள். பெற்றோரின் வளர்ப்பு என்பது வெறும் சொல்லிக்கொடுப்பது மட்டுமல்ல, எடுத்துக்காட்டாக வாழ்ந்து காட்டுவதுமேயாகும். குழந்தைகளின் முன் செய்ய கூடிய/கூடாத விஷயங்கள் சிலவும் இருக்கின்றன. இளம் வயதில் பிள்ளைகள் நன்மை, தீமை, சமூக பார்வைகளை அறிந்திருப்பதில்லை. வீட்டை விட சிறந்த பள்ளிக்கூடம் உலகில் இல்லை எனலாம்.
செய்யக் கூடாதவை:
- குழந்தைகளின் முன் குடும்ப அரசியலைப் பற்றிப் பேசாதீர்கள்.
- பிள்ளைகளின் முன் சண்டை போடுவதையோ (அ) தேவை இல்லாத வாக்கு வாதங்களில் ஈடுபடாதீர்கள்.
- மிக கடினமான (அ) கெட்ட வார்த்தைகளையோ உங்கள் வேலை ஆட்களிடமோ அல்லது உங்களை விட சிறியவர்களிடமோ குழந்தைகளின் முன் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. ஏனெனில் குழந்தைகள் கெட்ட வார்த்தைகளைப் பேசுவதில்லை. மாறாக கேட்ட வார்த்தைகளையே பேசுகிறார்கள்.
- குழந்தைகளின் முன் உடை மாற்றுவதைத் தவிர்க்கவும். இதன் மூலம் அவர்களும் மறைமுகமாக அவர்கள் பாலினத்தின் அருமையை உணர்வார்கள்.
- குழந்தைகளின் முன் மது அருந்துவதையோ, புகை பிடிப்பதையோ செய்யாதீர்கள். நன்மை, தீமை அறியாத அவர்கள் நாம் இல்லாத சமயத்தில் நம்மைப் பின்பற்ற முயற்சிக்கலாம்.
- புறம் பேசுவது அல்லது அடுத்தவர்களை கேலி செய்வதைத் தவிர்க்கவும். ஏனெனில் மற்றவர்கள் முன்னிலையில் அவர்கள் அதை நினைவுபடுத்தி, உங்களை தர்மசங்கடத்திற்கு உள்ளாக்கலாம்.
- அவர்களை முழு நேரமும் மொபைலில் விளையாடவோ, டிவி பார்க்கவோ அனுமதிக்க வேண்டாம்.
- குழந்தைகளின் முன்னிலையில், மற்றவர்களிடம் அதிகமாக கோபப்பட்டு கத்தவோ, சபிக்கவோ வேண்டாம்.
- மற்றவர்களுடன் ஒப்பிட்டு அவர்களை மட்டம் தட்டாதீர்கள். ஒப்பிடுதல் கோபத்தையும், தாழ்வு மனப்பான்மையையும் தோற்றுவிக்கும்.
செய்யக்கூடியவை:
- குழந்தைகளிடம் முடிந்த அளவு பொறுமையைக் கையாளுங்கள். அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பொறுமையாக பதிலளியுங்கள்.
- அவர்களிடம் உறவுகளின் முக்கியத்துவத்தைப் பற்றி கூறுங்கள். கூறும் தொனி நட்புடன் இருந்தால் இன்னும் நலம்.
- விடுகதைகள், புதிர் விளையாட்டுக்கள் விளையாடுங்கள், இடையில் நிறுத்தி கேள்வி கேளுங்கள். சரியாகவும், விரைவாகவும் பதிலளித்தால் பாராட்டுங்கள். தாமதமானால் அல்லது தெரியவில்லையெனில் ஊக்கப்படுத்துங்கள். செயல் முறை விளையாட்டுக்களில், புத்தக வாசிப்பு, வரைதல், வண்ணம் தீட்டுதல், உடல் இயக்க விளையாட்டுகளில் ஈடுபடுத்தலாம்.
- அழகாக உடை அணிந்தால், மற்றவர்களிடம் மரியாதையுடன் பழகினால் பாராட்ட தவறாதீர்கள். கூச்சத்தை தவிர்த்து மற்றவர்களுடன் பேசிப் பழக அனுமதியுங்கள்.
- தவறுகள் செய்தால் தண்டனைகளை தவிர்த்து எடுத்துச் சொல்லிப் புரிய வையுங்கள். திரும்பவும் செய்தால் திருத்திக்கொள்ள பலமுறை வாய்ப்பளியுங்கள். அடி ஒரு போதும் உதவாது.
- நம் வயதுடன் குழந்தையை ஒப்பிடாமல் குழந்தையை குழந்தையாகப் பாருங்கள். அவர்களிடம் அன்றைய நாள், பார்த்தவை, கேட்டவை அனைத்தையும் உங்களிடம் சொல்லச் சொல்லி பொறுமையாகக் கேளுங்கள்.
மறுப்பு: வலைத் தளம் மற்றும் பயன்பாட்டில் இடுகையிடும் உள்ளடக்கத்தை துல்லியமாகவும், முழுமையானதாகவும், புதுப்பித்ததாகவும் வைத்திருக்க பேபிசக்ரா பாடுபடுகையில், பேபிசக்ரா எந்தவொரு உள்ளடக்கத்தின் துல்லியத்தன்மையையும், முழுமையையும், நேரத்தையும் பேபிசக்ராவோ, மற்றும் அதன் வழங்குநர்களோ அல்லது வலைத்தளமோ அல்லது பயன்பாட்டின் பயனர்களோ வழங்க முடியும் என்பதற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது, பேபி சக்ரா அதற்கு பொறுப்பல்ல. இந்த உள்ளடக்கத்தின் எந்தவொரு பங்குகளோ, வரவுகளோ அல்லது விநியோகமோ பேபிசக்ரா மற்றும் அதன் ஆசிரியர் / உரிமையாளருக்கு உரிய வரவுகளுடன் செய்யப்பட வேண்டும்.