கர்ப்ப கால சந்தேகங்களும்-பதில்களும்!!

கர்ப்ப கால சந்தேகங்களும்-பதில்களும்!!

1 Oct 2019 | 1 min Read

Komal

Author | 138 Articles

 

கர்ப்ப காலம் என்பது பெண்களுக்கு ஒரு வரப்பிரசாதம், அன்பான உறவுகள்,  சுற்றத்தார், பிறந்த/புகுந்த வீடு இரண்டு வீடுகளிலும் கர்ப்பிணிகளை அக்கறையுடன் பார்த்துக்கொள்வர், பல விதமான அறிவுரைகளையும் வழங்குவர். வீட்டிற்கு ஒரு புதிய ஜீவனின் வருகையை மங்களகரமாய்க் கொண்டாடும் மன நிலை தான் பலருக்கும் இருக்கிறது. சில விதி விலக்குகள் இருக்கலாம். தாயாக போகும் பெண்ணுக்கு கர்ப்பிணி ஆனதும் மற்ற எல்லா உறவுகளின் முக்கியத்துவம் குறைந்து  குழந்தை முதல் முக்கியத்துவம் பெற்று  விடுகிறது.

 

எதைச் சாப்பிடுவதென்றாலும், அடடா!! இது குழந்தைக்கு ஒத்துக் கொள்ளுமா? என்று யோசித்துவிட்டே சாப்பிட வேண்டியதாகிவிடுகிறது. இது அம்மாவுக்கும், குழந்தைக்குமான ‘எமோஷனல் பாண்டிங்’ என்பதோடு குழந்தையின் நலனுக்கும் அவசியமானது என்பதால் வயிற்றில் குழந்தை இருக்கும்போது சூடாக காபி, டீ சாப்பிடலாமா?  ஹெர்பல் டீ குடிக்கலாமா? மசாலா உணவுகளை ஒரு கட்டுக் கட்டலாமா, கூடாதா? நெய்யில் செய்த பலகாரங்களை சாப்பிடலாமா? தேன் சாப்பிடலாமா? போன்ற பொதுவான சந்தேகங்கள் எல்லா பெண்களுக்குமே எழும். 

 

இதோ சில பொதுவான கேள்விகளும், பதில்களும். பல தாய்மார்கள் மற்றும் கர்பிணிகளுடன் உரையாடியதிலிருந்து தொகுக்கப்பட்டவை.  

 

கேள்வி: கர்ப்பமாய் இருக்கும் போது சூடான பானங்கள் சாப்பிட்டால் வயிற்றில் இருக்கும் குழந்தைக்குச் சுடுமா?

 

பதில்: அம்மா சூடான பானங் கள் சாப்பிட்டால் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு சுடும் என்பதெல்லாம் கற்பனை. குழந்தைக்குச் சுடாது. கர்ப்பிணிகள் என்றில்லை, பொதுவாகவே மிதமிஞ்சிய சூட்டில் பானங்களையும், உணவுப் பொருட்களையும் சாப்பிடும்  பழக்கம் சிலருக்கு இருக்கலாம். அப்படி சாப்பிடும்போது உணவுக் குழாய் புண்ணாகி அல்சர் வர வாய்ப்பிருப்பதால் சூடாக சாப்பிடக் கூடாது என்பதுதான் மருத்துவரீதியான காரணம்.

 

கேள்வி: கர்ப்பிணிகள் ஐஸ்கிரீம் சாப்பிடக் கூடாதா?

 

பதில்: ஐஸ்கிரீம் சாப்பிடலாம். சளி பிடிக்காமல் இருக்கும் வரை பிரச்சினை இல்லை. ஏப்ரல், மே மாதங்களில் கோடைக்கு இதமாக இருக்கிறதென்று ஆசை ஆசையாக தினமும் ஐஸ்க்ரீம், ஜில்லென்று ஜூஸ் வகைகளாக சாப்பிட்டுப் பழகினால் அது கடுமையான சளி, இருமலில் கொண்டு விடும். கர்ப்ப காலங்களில் சாதாரண நாட்களில் நாம் எடுத்துக் கொள்ளும் இருமல், சளி மருந்துகளை எடுத்துக்கொள்ள முடியாது. அந்த மருந்துகள் வயிற்றில் இருக்கும் குழந்தையை பாதிக்க வாய்ப்புகள் அதிகம். அதனால் தான் பெரியவர்கள் கர்ப்பிணிகளை அதிக குளிர்ச்சியான, அதிக சூடான உணவுப் பொருட்களை எடுத்துக்கொள்ள அனுமதிப்பதில்லை.

 

கேள்வி: கர்ப்பிணிகள் சர்க்கரைக்குப் பதிலாக தேன் கலந்து சாப்பிடலாமா?

 

பதில்: இரத்தத்தில் சர்க்கரையின் அளவில் (Blood Sugar ) இன்சுலின் குறைவாக இருப்பவர்கள் சர்க்கரைக்குப் பதிலாக தேன் பயன்படுத்தலாம். இன்சுலின் அதிகமாக இருப்பவர்கள் தேன் சாப்பிடுவதைக் குறைப்பது நல்லது. இல்லாவிட்டால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்து வயிற்றில் இருக்கும் குழந்தையையும் பாதிக்கக்கூடும். தேனில் ஆன்ட்டி ஆக்சிடன்டுகள் அதிகமிருப்பதால் ஆக்சிஜன் ஃப்ரீரேடிக்கிள்களை கட்டுப்படுத்தி மூளை மற்றும் இதயத்திற்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் செயல்படும் செல்களை ஒழுங்காக இயங்க வைக்கும் சக்தி அதற்குண்டு.

 

கேள்வி: கர்ப்ப காலத்தில் எடை கூடி விடக்  கூடாது என்பதற்காக கார்போ ஹைட்ரேட்டுகள் அதிகளவில் இருக்கும்  உணவுப் பொருட்களை பெருமளவில் குறைத்து விட்டு புரோட்டின்கள் அதிகமிருக்கும் உணவுப் பொருட்களை மட்டும் எடுத்துக்கொள்ளலாமா?

 

 பதில்: இது முற்றிலும் தவறு. கர்ப்ப காலம் என்பது வயிற்றில் இருக்கும் குழந்தையின் ஆரோக்கியத்துக்குத் தேவையான சத்தான உணவுகளை சாப்பிட வேண்டிய காலமே தவிர சாப்பாட்டைக் குறைத்து டயட்டில் இருக்கும் காலம் அல்ல. வயிற்றிலிருக்கும் குழந்தையின் போஷாக்கிற்கு கார்போ ஹைட்ரேட்டுகள் மிகவும் அவசியம். மேலும் நமது உடலின் ரத்தச் சிவப்பணுக்கள் மற்றும் மூளைச் செல்கள் தங்களது இயங்கு சக்திக்கான சத்துக்களுக்கு பெருமளவில் கார்போஹைட்ரேட்டுகளையே நம்பி இருக்கின்றன. முற்றிலுமாக கார்போஹைட்ரேட்டுகளைத் தவிர்த்து விட்டு, நீங்களாக ஒரு டயட் பின்பற்றத் தொடங்கினீர்கள் என்றால் உடலில் மாவுச்சத்து  பற்றாக்குறை ஏற்பட்டு கர்ப்ப கால மலச்சிக்கல், மார்னிங் சிக்னஸ் போன்ற அவதிகளுக்கு உள்ளாவீர்கள். உடல் எடையை குறைப்பதெல்லாம் குழந்தை பிறந்த பிறகு பார்த்துக் கொள்ளலாம். கர்ப்ப காலம் குழந்தையின் ஆரோக்கியத்துக்குத் தேவையான அனைத்து உணவுப்பொருட்களையும் தவறாது எடுத்துக்கொள்ள வேண்டிய காலம் என்பதை தாய்மார்கள் மறக்கக் கூடாது.

 

கேள்வி: கர்ப்ப காலத்தில் ஹெர்பல் டீ, ஹெர்பல் ஹெல்த் டிரிங்குகள் சாப்பிடலாமா?

 

பதில்: ஹெர்பல் ஹெல்த் டிரிங்குகள் மற்றும் டீ எதுவானாலும் சரி உங்களது உடல்நிலை ஏற்றுக் கொள்கிறதா என்பதைப் பொறுத்து நீங்கள் வழக்கமாக செக்-அப் செய்து மருத்துவரின் ஆலோசனையின் பேரில் ஹெர்பல் டிரிங்குகள் எடுத்துக் கொள்ளலாம். சிலருக்கு சில மூலிகைகளால் ஒவ்வாமை ஏற்படும் வாய்ப்புகள் இருப்பதால் ஹெர்பல் என்ற வார்த்தையை மட்டுமே நம்பி மருத்துவரை ஆலோசிக்காமல் எதையும் செய்யாமலிருப்பது நல்லது.

 

கேள்வி: கர்ப்பிணிகள் கிரீன் டீ சாப்பிடலாமா?

 

பதில்: கர்ப்ப காலத்தில் கிரீன் டீ சாப்பிடலாம். தேனைப் போல இதிலும் ஆன்ட்டி ஆக்சிடண்டுகள் அதிகமிருப்பதால் வயிற்றில் இருக்கும் கருவின் இதயம் மற்றும் மூளை செல்களின் வளர்ச்சிக்கு நல்லது.

 

கேள்வி: கர்ப்ப காலத்தில் பிரியாணி, பெப்பர் சிக்கன் போன்ற மசாலா சேர்த்த கார சாரமான உணவுப் பொருட்களை உண்பது சரியா?

 

பதில்: கார சாரமான உணவுப் பொருட்களை சாப்பிடக் கூடாது என்று எந்த டாக்டரும் சொல்வதில்லை. இப்படிச் சாப்பிடுவதால் நெஞ்செரிச்சல், மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகள் வராமல் இருப்பின் தாராளமாய் சாப்பிடலாம். இந்த உணவுப் பொருட்களில் வாசனைக்காக சேர்க்கப்படும் மசாலாப் பொருட்களான மிளகு, சீரகம்,  சோம்பு போன்ற வாசனைப் பொருட்களில் வைட்டமின் சி அதிகளவில் இருப்பதால் ஒரு வகையில் ஆரோக்கியமானதே. ஆனால் அதிக காரமும் எண்ணெயும் அசிடிட்டி ஏற்படுத்தும் என்பதால் கூடுமான அளவிற்கு எண்ணெய் மற்றும் காரத்தைக் குறைப்பது நல்லது.

 

கேள்வி: கர்ப்பிணியாய் இருக்கும்போது ஹோட்டலில் வாங்கிய உணவு ஒத்துக்கொள்ளாமல் நஞ்சாகக் கூடும் என்று உணர்ந்ததும் அந்த உணவைத் தூக்கி குப்பையில் வீசி விட்டேன், கொஞ்சமாய்தான் சாப்பிட்டேன்  வயிற்றுக்குள் போன அந்த உணவால் வயிற்றிலிருக்கும் குழந்தைக்கு ஏதேனும் ஆபத்து வருமா?

 

பதில்:  பழுதடைந்தால் வயிற்றிலிருக்கும் குழந்தையை விட சாப்பிட்ட உங்களுக்குத்தான் அதிக பாதிப்பை ஏற்படுத்தும். தொடர்ந்து வயிற்றுப்போக்கோ, வாந்தியோ இருந்து உங்களது உடலில் இருந்து அதிகளவில் நீர் வெளியேறி நீரிழப்பு ஏற்பட வாய்ப்பிருப்பதால் நிறைய தண்ணீர், பழச்சாறுகள் அருந்துங்கள், இப்படியான சூழலில் எதற்கும் உங்களது மகப்பேறு மருத்துவரை அணுகி உடனடியாக ஆலோசனை பெறுவது நல்லது.

 

கேள்வி: கர்ப்ப காலத்தில் இரத்தத்தில் இன்சுலின் அளவு (அ) உப்பின் அளவு திடீரென்று கூடுவது ஏன்?

 

பதில்: சிலருக்கு அதிக எடை காரணமாக இப்படி நிகழலாம், சிலருக்கு மரபியல் காரணங்களால் சர்க்கரை மற்றும் உப்பின் அளவு கூடலாம் (அ) குறையலாம். அப்பாவுக்கோ, தாத்தாவுக்கோ சர்க்கரைச் சத்தோ, உப்புச்சத்தோ இருந்து அது அம்மாவின் வழியாக கருவில் இருக்கும் குழந்தைக்கும் பரவ வாய்ப்பு உண்டு.

கருவில் இருக்கும் குழந்தைக்குப் பரவும்போதுதான் குறைப்பிரசவம், கருப்பையில் குழந்தை இறந்து போதல் போன்ற சிக்கல்கள் ஏற்படுகின்றன.

கருவில் இருக்கும் குழந்தைக்கு அம்மாவின் மூலமாக ரத்தத்தில் இருக்கும் உப்பின் அளவு அதிகரிக்கும்போது குறைப்பிரசவம் ஏற்பட வாய்ப்பு உண்டு. அப்படி நிகழ்வதை மருத் துவ மொழியில் இன்ட்ராயூட்டரின் குரோத்ரி டார்டேஷன் என்பார்கள்.

 

மேலும் துரதிருஷ்டவசமாக கருவிலேயே உப்பின் அளவு அதிகரிப்பதால் குழந்தை இறந்தே பிறக்கும் நிலையை இன்ட்ராயூட்டரின் டெத் என்பார்கள். அதனால் கர்ப்ப காலங்களில் குறிப்பிட்ட இடைவெளிகளில் தொடர்ந்து செக் -அப் செல்ல தயங்கக்கூடாது. வயிற்றில் இருக்கும் குழந்தையின் நலனுக்காக அம்மா எப்போதும் தான் சாப்பிடும் உணவுப் பொருட்களின் மீதான விழிப்புணர்வைத் தவிர்க்காமல் இருப்பது குழந்தைக்கும் அம்மாவுக்கும் நல்லது. 

 

மறுப்பு: வலைத் தளம் மற்றும் பயன்பாட்டில் இடுகையிடும் உள்ளடக்கத்தை துல்லியமாகவும், முழுமையானதாகவும், புதுப்பித்ததாகவும் வைத்திருக்க பேபிசக்ரா பாடுபடுகையில், பேபிசக்ரா எந்தவொரு உள்ளடக்கத்தின் துல்லியத்தன்மையையும், முழுமையையும், நேரத்தையும் பேபிசக்ராவோ, மற்றும் அதன் வழங்குநர்களோ அல்லது வலைத்தளமோ அல்லது பயன்பாட்டின் பயனர்களோ வழங்க முடியும் என்பதற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது, பேபி சக்ரா அதற்கு பொறுப்பல்ல. இந்த உள்ளடக்கத்தின் எந்தவொரு பங்குகளோ, வரவுகளோ அல்லது விநியோகமோ பேபிசக்ரா மற்றும் அதன் ஆசிரியர் / உரிமையாளருக்கு உரிய வரவுகளுடன் செய்யப்பட வேண்டும்.

 

#babychakratamil

A

gallery
send-btn

Related Topics for you