• Home  /  
  • Learn  /  
  • குழந்தைகளுக்கு ஏற்படும் செவித்திறன் பிரச்சினை!
குழந்தைகளுக்கு ஏற்படும் செவித்திறன் பிரச்சினை!

குழந்தைகளுக்கு ஏற்படும் செவித்திறன் பிரச்சினை!

12 Mar 2020 | 1 min Read

Medically reviewed by

Author | Articles

உலக சுகாதார நிறுவனம் இந்த வருடம் மார்ச் 3-ந்தேதியை உலக செவித்திறன் நாளாக அறிவித்து உள்ளது. செல்வத்தில் சிறந்த செல்வம் செவிச்செல்வம் என்றார் வள்ளுவர். ஒரு தாய் வயிற்றில் கர்ப்பமான மூன்றாவது மாதம் முதல் சிசுவின் கேட்கும் திறன் வளர்கிறது. குழந்தைகள் கேட்கும் முதல் சத்தம் தாயின் இதயத் துடிப்பே ஆகும். ஒரு பெண் தான் கர்ப்பமாக இருக்கும் காலக்கட்டத்தில் நல்லசெய்திகளை கேட்டு, பரபரப்பின்றி அமைதியுடன் இருக்க வேண்டும். ஏனென்றால் தாய் கேட்பதை கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையாலும் கேட்க முடியும். இந்த தருணத்தில் அபிமன்யுவின் கதையை நினைவில் கொள்ளலாம். 

2019-ம் வருட உலக சுகாதார நிறுவன கணக்கெடுப்பின்படி 46.6 கோடி மக்கள், செவித்திறன் குறைபாடுகளுடன் இருப்பதாகவும் இதில் 34 லட்சம் பேர் குழந்தைகள் என்றும் தெரிய வந்துள்ளது. அதாவது 100 பேரில் 5 பேருக்கு காது கேட்பதில் குறைபாடு உள்ளது. உலகில் பிறக்கும் 1000 குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு பிறவியிலேயே காது கேளாத குறைபாடு உள்ளது. அதுவே இந்தியாவை பொறுத்தவரை 1000 பேரில் 2 பேர் என்பதும், தமிழகத்தைப் பொறுத்தவரை 1000 பேரில் 6 பேர் எனவும் இருக்கிறது. தமிழகத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் பிறவியிலேயே காது கேளாமையோடு பிறந்த குழந்தைகள் மூன்றில் இரண்டு பங்கு நெருங்கிய உறவினர்கள் மற்றும் ரத்த உறவுகளுக்குள் திருமணம் செய்தவர்களுக்கு பிறந்தவையாகும் என தெரியவந்துள்ளது. 

பெண்கள் கர்ப்பமாக இருக்கும் காலத்தில் மரபணு குறைபாடுகளாலும், சில நோய் தொற்று மற்றும் வேறு சில நோய்களுக்காக மருந்து உட்கொள்ளுதல் ஆகிய காரணங்களால் பிறக்கும் குழந்தைகளுக்கு செவித்திறன் குறைபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதேபோல் பிரசவத்தின்போது சில குழந்தைகளுக்கு ஏற்படும் மூச்சு அயற்சி மற்றும் அதிகமான மஞ்சள்காமாலை அல்லது சில வைரஸ்கிருமி நோய் தொற்று போன்ற காரணங்களாலும் செவித்திறன் குறைபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. கர்ப்பிணிப் பெண்கள் உட்கொள்ளும் சிலவகை மருந்துகள்கூட குழந்தையின் செவித்திறனை பாதிக்க வைத்து விடுகிறது. அதனைக் கண்டறியும் நவீன மருத்துவ சாதனங்கள் அதிக மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் சில தனியார் மருத்துவமனைகளிலும் வசதி உள்ளது. 

குழந்தைகளுக்கு பல்வேறு காரணங்களால் காது கேளாமை குறைபாடு ஏற்படவாய்ப்பு உள்ளது. குழந்தைகளில் 5 சதவீதம் பேரும், பெரியவர்களில் 8.5 சதவீதம்பேரும், மூத்த குடிமக்கள் 50 சதவீதம் பேரும் காது கேளாமை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

தட்டம்மை, மூளைக்காய்ச்சல், காதில் சீழ் வடிதல் அதன் தொடர்ச்சியான வியாதிகள், விபத்துகள், தலைக்காயம், அதிக சத்தம் உருவாக்கும் கலாசார விழாக்கள், இரவு நேர கிளப்புகள் மற்றும் பார்களில் ஏற்படும் சத்தங்கள், வயது முதிர்வு காரணமாகவும் காதுகளில் பாதிப்பு ஏற்பட்டு காது கேளாத நிலை ஏற்படும். காதில் மெழுகு மற்றும் காதில் தவறுதலாக போடப்படும் பொருள்கள் ஆகியவற்றால் காது கேளாமை ஏற்படுகிறது. 

பெரும்பாலும் செவித்திறன் பாதிக்கப்பட்டு காது கேளாத நிலைமை பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களிடம் அதிகளவு உள்ளது. ஆகவே இதன் பாதிப்பை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து முறையான சிகிச்சை மற்றும் வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் அதன் தாக்கத்தை ஓரளவு குறைக்க முடியும். ஒருவருக்கு காது முழுமையாகவும் கேட்காமல் போகலாம் அல்லது அதன் பாதிப்பு குறை வாகவும் இருக்கலாம். காது கேளாமை என்பது உடலில் வெளியில் தெரியாத ஒரு குறை பாடாகும். பார்வையில்லாத ஒருவரிடம் காட்டப்படும் பரிவு முழுமையாக காது கேளாத வரிடம் காட்டப்படுவதில்லை பெரும்பாலும் அது ஒரு தொல்லையாக கருதப்படுகிறது. செவித்திறன் பாதிக்கப்பட்ட குழந்தைகள்ஆரம்பப் பள்ளிப்படிப்பு தொடங்கி உயர் கல்வி கற்கும் வரை வெளியில் சொல்ல முடியாத வேதனையை அனுபவிக்கிறார்கள். இந்தியாவைப் பொறுத்த வரை பெரும்பாலான காது கேளாமைக்கான காரணங்கள் 65 சதவீதம் தவிர்க்கப்படக்கூடிய பட்டியலில் இருக்கிறது. 

அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரியில் பணியாற்றும் மருத்துவர்களும், நலத்திட்டங்களில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும், மக்கள் நலனில் ஆர்வம் உள்ளவர்களும் ஒன்றிணைந்து காது கேளாமையால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு வழிமுறைகளை ஏற்படுத்தித் தர வேண்டும். இந்திய அரசும், தமிழக அரசும் செவித்திறன் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கிவரும் மருத்துவ உதவிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களது வாழ்வை மேம்படுத்த முயற்சி செய்ய வேண்டும். பிறக்கும் அத்தனை குழந்தைகளுக்கும் காது கேட்கும் திறன் சரியாக இருக்கிறதா என்பதை பரிசோதிக்க ‘ஓ.ஏ.இ’ கருவிகள் மூலமாகவும், அதில் ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் ‘பி.இ.ஆர்.ஏ’ டெஸ்ட் மூலமாகவும் அறிந்துகொண்டு தேவைப்படும் குழந்தைகளுக்கு ‘காக்ளியர் இம்ப்ளான்ட்’ கருவி பொருத்தி மறுவாழ்வு அளிக்கலாம். அல்லது தேவையான வகையில் கருவிகள் வைத்து காது கேட்கும் திறனை செம்மைப்படுத்தலாம். 

காதில் சீழ் வடியும் பள்ளிக் குழந்தைகளை பரிசோதித்து சிகிச்சை அளிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். குழந்தை பருவத்தை தாண்டியவர்களுக்கு காதில் சீழ்வடிந்தால் அதற்கான மருத்துவசிகிச்சை அல்லது அறுவை சிகிச்சை தேவைக்கு ஏற்றபடி செய்தும் காதொலி வழங்கும் கருவிகள் பொருத்திக்கொள்ளலாம். 

உலக செவித்திறன் நாளில் வாகன சத்தங்களை குறைப்பது, ஒலி பெருக்கிகளின் தரத்தை ஆராய்ந்து கட்டுப்பாட்டில் வைப்பது, காதில் வைக்கும் ஒலிப்பான்களை கட்டுப்பாட்டுடன் உபயோகப்படுத்துவது, தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்களுக்கு அதிக ஒலி பாதிப்பு இல்லாமல் தற்காத்துக் கொள்வது, தேசிய காது கேளாமை தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ் குழந்தைகளை பரிசோதனைக்கு உட்படுத்துவது, இதற்கென ஏற்படுத்தியுள்ள அரசு திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பது போன்ற வருமுன் காக்கும் முறைகளில் கவனம் செலுத்த வேண்டும். அனைவரும் ஒட்டுமொத்தமாக தவிர்க்கப்படக்கூடிய சத்தத்தை குறைக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும். நெருங்கிய ரத்த உறவு திருமணங்களை தவிர்த்து நம்மையும், நமது கேட்கும் திறனையும் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று முடிவு எடுப்போம்.

ஆதாரம்: மாலைமலர்

பேனர் படம் : cid.edu

மறுப்பு: வலைத் தளம் மற்றும் பயன்பாட்டில் இடுகையிடும் உள்ளடக்கத்தை துல்லியமாகவும், முழுமையானதாகவும், புதுப்பித்ததாகவும் வைத்திருக்க பேபிசக்ரா பாடுபடுகையில், பேபிசக்ரா எந்தவொரு உள்ளடக்கத்தின் துல்லியத்தன்மையையும், முழுமையையும், நேரத்தையும் பேபிசக்ராவோ, மற்றும் அதன் வழங்குநர்களோ அல்லது வலைத்தளமோ அல்லது பயன்பாட்டின் பயனர்களோ வழங்க முடியும் என்பதற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது, பேபி சக்ரா அதற்கு பொறுப்பல்ல. இந்த உள்ளடக்கத்தின் எந்தவொரு பங்குகளோ, வரவுகளோ அல்லது விநியோகமோ பேபிசக்ரா மற்றும் அதன் ஆசிரியர் / உரிமையாளருக்கு உரிய வரவுகளுடன் செய்யப்பட வேண்டும்.

#childhealth

A

gallery
send-btn

Related Topics for you