1 Oct 2021 | 1 min Read
Medically reviewed by
Author | Articles
பிள்ளைகளுக்கு என்னவெல்லாம் பிடிக்கும், பிடிக்காது என்பதில் அதிக அக்கறை காட்டுபவர்கள் அம்மாக்கள். தான் கர்ப்பம் என தெரிந்தவுடனே, எதை சாப்பிட வேண்டும்? சாப்பிட கூடாது? என்ற குழப்பமும் அவர்களுடைய மனதில் எழத்தான் தொடங்குகிறது. வேகமாக நடந்தால் அது கருவைப் பாதிக்குமோ, ஓடினால் அது கருவைப் பாதிக்குமோ, ஆடினால் அது கருவைப் பாதிக்குமோ என ஆயிரமாயிரம் கேள்விகளை மனதில் சுமந்துக்கொண்டு வயிற்றில் தன் பிள்ளையைச் சுமக்கின்றனர். ஆனால், அவர்களோ கருவில் பல சேட்டைகளைப் பத்து மாதகாலம் செய்யத்தான் செய்கின்றனர். அவை என்னவென்ற ஆர்வமான பதிவு தான் இது.
சிரிப்பு:
கருவில் இருக்கும் குழந்தைகள் சிரிப்பதை நீங்கள் ரசித்ததுண்டா? ஒருவேளை, நீங்கள் முதன் முதலில் கருவில் இருக்கும் குழந்தையை அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் உதவியுடன் பார்க்கும்போது, அவர்கள் சிரித்தால் எவ்வளவு அழகாக இருக்கும்!
இதனை ‘ரெஃபிளெக்ஸ் ஸ்மைல்’ என்று அழைப்பர். இதனைக் காணும் வரம் அனைத்து அம்மாக்களுக்கும் கிடைத்துவிடுவதில்லை. 4D ஸ்கேன் உதவியுடன் நம்முடைய குழந்தை சிரிப்பதைக் காண முடியும்.
விக்கல்:
முதல் மூன்று மாதங்களின் முடிவில் அல்லது இரண்டாவது மூன்று மாத தொடக்கத்தில் கருவில் இருக்கும் குழந்தைக்கு விக்கல் எடுக்க தொடங்கலாம். ஆனாலும், இதனை நம்மால் உணர முடியாமல் போகலாம்.
சுவைத்தல்:
கர்ப்பிணி பெண்கள் சாப்பிடும் உணவில் கூடுதல் கவனம் வேண்டும். ஒருவேளை கருவில் இருக்கும் உங்கள் குழந்தைக்கு அந்த உணவு பிடிக்கவில்லை என்றால், உதைக்கவும் வாய்ப்புண்டு. அட ஆமாம், ஒரு குறிப்பிட்ட உணவை நீங்கள் உண்ணும்போது, அதனைக் கருவில் உள்ள குழந்தையால் உணர முடிகிறது.
நாம் உண்ணும் உணவின் மூலமாக பிறக்கும் முன்பே குழந்தைகள் தங்களைத் தயார்படுத்திக்கொள்கின்றனர் என்பதை இனிமேலாவது கவனத்தில் கொள்ளலாமே.
13 முதல் 16 வாரங்களின் போது, கருவில் இருக்கும் குழந்தைகள் அம்மாக்கள் உண்ணும் உணவைச் சுவைக்க தொடங்குகின்றனர் என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்!
கண் திறந்து பார்த்தல்:
கருவில் உள்ள குழந்தையின் கண்கள் 26 முதல் 28 வாரத்தில் திறக்கிறது. டாக்டர்கள், அம்மாக்களின் வயிற்றில் டார்ச் அடித்து பார்க்கும்போது அந்த ஒளியைப் பிடிக்க குழந்தைகள் முயல்கிறார்கள். ஆம், இரண்டாவது மூன்று மாதத்தில் டாக்டர்கள் டார்ச் லைட்டை வயிற்றில் அடிக்கும்போது, அவர்கள் அசைவதை நம்மால் உணர முடியும்.
சிறுநீர் கழித்தல்:
முதல் மூன்று மாத முடிவிலேயே குழந்தைகள் சிறுநீர் கழிக்க தொடங்கிவிடுகின்றனர். பனிக்குட நீர் வற்றாமல் இருக்க முக்கிய காரணம் குழந்தைகளின் சிறுநீர் தான். அவர்கள் கமுக்கமாக சிறுநீரைக் கழித்துவிட்டு, சந்தோஷத்தில் உங்களை உதைக்கவும் செய்வார்கள்.
சுவாசித்தல்:
கர்ப்பகாலத்தில் அவர்களுக்கு தேவையான ஆக்சிஜனானது, தொப்புள் கொடி வழியாக கிடைக்கிறது. 32-ஆவது வாரத்தில் குழந்தைகள் விழுங்குதல், மூச்சு விடுதல், நுரையீரலைச் சுருக்கி விரித்தல் போன்ற பயிற்சிகளைச் செய்கின்றனர்.
ஆனாலும், 32 வாரங்களில் பிள்ளைகளின் நுரையீரல் முழுவதுமாக வளர்ச்சி அடைந்து இருக்காது தான். அது முழுவதுமாக வளர்ச்சியடைய 36 வாரங்கள் ஆகிறது.
அழுதல்:
கருவில் உள்ள குழந்தைகள் அழவும் செய்வார்கள். ஒருவேளை அவர்கள் அழும்போது நாம் கண்டுக்கொள்ளாமல் இருப்பதால் தான் உதைக்க செய்கிறார்களோ என்னவோ, தெரியவில்லை. ஆனாலும், அவர்கள் அதிக நேரம் அழுவதை வாடிக்கையாக கொண்டிருக்கவுமில்லை என்பதை நினைவில் கொள்ளவும்.
அல்ட்ரா சவுண்ட் உதவியுடன் அவர்களின் இந்தச் செயல்பாட்டை நம்மால் காணவும் முடியும்.
உதைத்தல்:
ஒவ்வொரு கர்ப்பிணி பெண்ணும் மிகவும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் ஒரு விஷயம் தான் கருவில் உள்ள குழந்தை உதைப்பது.
தாயவள் தன்னனுடைய கைகளை வயிற்று பகுதியிலேயே வைத்திருப்பாள். குழந்தை உதைப்பதை உணர்ந்தவுடன் தன் கணவனை அவசர அவசரமாக அழைத்து கை வைத்து பார்க்க சொல்லுவாள். கணவரோ ஏமாற்றம் கலந்த ஏக்கத்துடன் எட்டி செல்வார். இது பெண் கர்ப்பமாக இருக்கும்போது, ஒவ்வொரு வீட்டிலும் நடக்கும் ஒரு விஷயம் தான்.
கர்ப்ப காலத்தின் 16 முதல் 25 வாரங்களில் அம்மாக்களால் அவர்கள் பிள்ளைகள் உதைப்பதை உணர முடியும். நீங்கள் முதல் முறை கர்ப்பமாக இருந்தால், 25 வாரங்கள் வரையும் கூட குழந்தை உதைப்பதை உணர முடியாமல் போகலாம். இதற்காக கவலைப்பட வேண்டாம். நீங்கள் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறீர்களா? அப்படி என்றால், 13 வாரங்களில் கூட உங்களால் உணர முடியும்.
இசை கேட்டல்:
குழந்தைகள் வளர வளர அவர்கள் இசையைக் கேட்க தொடங்குகிறார்கள். 25 அல்லது 26-ஆவது வாரத்தில் அவர்கள் குரலுக்கு செவி சாய்க்க தொடங்குகின்றனர்.
ஆனாலும், வயிற்று பகுதியில் ஹெட்போன் வைப்பதை அம்மாக்கள் தவிர்ப்பது நல்லது. இதனால், கருவில் உள்ள உங்கள் குழந்தை பயப்படக்கூடும்.
கருவில் உள்ள உங்கள் குழந்தைக்கு சத்தமாக புத்தகங்கள் வாசித்து காட்டுவது நல்ல பழக்கமாகும். அவர்களுக்கு நீங்கள் படிப்பது புரியாவிட்டாலும், அவர்களுடன் தொடர்புக்கொள்ளவும், அவர்கள் கவனிக்கவும், அவர்களின் நினைவாற்றல் வளரவும், ஒரு சில வார்த்தைகளைக் கருவிலேயே அவர்கள் கற்றுக்கொள்ளவும் இந்த வாசிப்புப்பழக்கம் உதவும்.
கர்ப்பமாக இருக்கும்போது அதிகம் இரைச்சல் உள்ள இடத்தில் நிற்க வேண்டாம். குறிப்பாக, துக்கம் போன்ற நிகழ்வுகளில் எக்காரணம் கொண்டும் கலந்துக்கொள்ளாமல் இருப்பது தாய், சேய் இருவருக்கும் மிக நல்லது.
கர்ப்பக்காலம் என்பது கடவுள் அளித்த வரம். அதனை மகிழ்வுடன் கொண்டாடி கருவில் இருக்கும் குழந்தையை நாம் வரவேற்க வேண்டும். குழந்தையும், தெய்வமும் ஒன்று. தெய்வத்தை நம்மால் நேரில் காண இயலாது. ஆனால், நிச்சயம் குழந்தை வடிவில் உங்கள் ஒவ்வொருவர் வீட்டிலும் தெய்வத்தைக் காணலாம். கர்ப்பமாக உள்ள அனைவருக்கும் எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
A
Suggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.