3 Oct 2021 | 1 min Read
Medically reviewed by
Author | Articles
பிள்ளையை பெற்ற அம்மாக்களுக்கே தெரியும், செல்போன் தான் தன் பிள்ளையின் உலகமென்று. ஆம், அதுவும் ஆன்லைன் கிளாஸ் ஆரம்பித்தது போதும், நண்டு சிண்டு எல்லாம், நம்மை விட நன்றாகவே போனை பயன்படுத்துகின்றனர். என் வீட்டிலும் இதே நிலை தான் பிரெண்ட்ஸ், ஆனாலும் ஒரு சில டிரிக்ஸை செய்து அவர்கள் போன் பயன்பாட்டை குறைத்துள்ளேன். அவை என்னவென்பதை இதோ உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
இன்றைய கலாச்சாரத்தின் முக்கிய பங்காக செல்போன் பயன்பாடு உள்ளது. இதனால் பிள்ளைகள் இன்றைய நாளில் வீட்டை விட்டு வெளியில் சென்று விளையாடுவதையே மறந்துவிட்டனர். நம்முடைய பிள்ளை பருவத்தில் எல்லாம் சிறிய மண் பாண்ட பொருட்களை வைத்து சமையல் செய்வது, மண்ணில் கோயில் கட்டி விளையாடுவது என ஆரோக்கியமாக இருந்தோம். ஆனால், இன்றைய பிள்ளைகளுக்கு ஆங்க்ரி பேர்ட்ஸ், கேண்டி கிரஸ் போன்ற கேம்களே உலகமென ஆகிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். பல அம்மாக்களின் கவலையும் இது தான். இந்த செல்போன் பயன்பாட்டை பிள்ளைகளிடமிருந்து குறைப்பது எப்படி என்பதை விவரிக்கிறது இந்த பதிவு.
செல்போன் பயன்பாட்டை முழுவதுமாக குறைத்து விட முடியுமா?
இது இன்றைய நவீன உலகில் நிச்சயம் சாத்தியமில்லை. இன்றைய பிள்ளைகளுக்கு பள்ளி செல்வதே மறந்து செல்போனில் பாடம் கற்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். அட்லீஸ்ட், அப்படியாவது கற்கிறார்களே என்றே பெருமூச்சு விட வேண்டியுள்ளது. ஆனால், இடையிடையில் அவர்கள் வெளியில் சென்று சக நண்பர்களுடன் விளையாட பெற்றோர்களாகிய நாம் ஊக்குவிக்க வேண்டும். உண்மையில் சொல்லப்போனால், ஸ்கூல் திறந்தவுடன் எத்தனை பிள்ளைகள் போக மாட்டேன் என அடம்பிடிக்க போகிறதோ தெரியவில்லை.
பிள்ளைகள் போனை எவ்வளவு நேரம் பயன்படுத்தலாம்?
இரண்டு வயதுக்கு கீழுள்ள பிள்ளைகளிடம் பெற்றோர்கள் போன் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். 2 முதல் 12 வயது வரை உள்ள பிள்ளைகள் ஒரு நாளைக்கு 1 மணி நேரம் மட்டுமே செல்போன் பயன்படுத்துவது உடலுக்கும், மனதுக்கும் நல்லது. வயது வந்தோர்கள் ஒரு நாளைக்கு 2 மணி நேரம் மட்டுமே செல்போன் உபயோகிப்பது நல்லது என சொல்லப்படுகிறது.
நாம் என்ன செய்ய வேண்டும்?
இன்றைய பிள்ளைகள் தன் அம்மாவிற்கு தெரியாமலே, செல்போனை எடுத்து கேம் விளையாடுவது, யூ-டியூப் பார்ப்பது போன்றவற்றை செய்ய தொடங்கிவிட்டனர். பெற்றோர்கள் இதனை ஊக்குவிக்காமல், முடிந்தளவுக்கு அவர்கள் என்ன பார்க்கிறார்கள் என்பதை கவனிக்க வேண்டும்.
அதிக நேரம் செல்போன்களை நம்முடைய பிள்ளைகள் பயன்படுத்தினால் உடல் பருமன் அடைவது, உறங்க முடியாமல் தவிப்பது போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அதோடு, பிள்ளைகளுக்கும், பெற்றோருக்கும் இடையேயான பாசமும் பாதிக்கப்படுகிறது.
குறிப்பாக இளம் பருவத்தினருக்கு இது ஒரு பெரும் சவாலாக அமைந்து மன அழுத்தத்தையும், பதட்டத்தையும் அதிகரிக்க செய்கிறது.
வீட்டிலிருக்கும் பிள்ளைகளின் செல்போன் பயன்பாட்டு நேரத்தை குறைப்பது எப்படி?
1. எதிர்பார்ப்பு வையுங்கள்
நிச்சயம் உங்களுடைய பிள்ளைகள் செல்போன் பயன்பாட்டை குறைத்துவிடுவார்கள் என்ற நம்பிக்கையை வைத்து, அதனை அவர்கள் மனதில் மென்மையாக புகுத்தி கொண்டே இருங்கள்.
2. எதார்த்தமாக இருங்கள்
உங்களுடைய பிள்ளைகள் டிவி பார்ப்பது, செல்போன் பயன்படுத்துவது என மட்டுமே இருந்தால், அவர்களுக்கு ஒரு சில சிறிய இலக்குகளை நிர்ணயிங்கள். அதனை அவர்கள் சரியாக கடைப்பிடிக்காத பட்சத்தில் டிவி, செல்போன் பார்க்கும் நேரத்தை குறைத்துக்கொண்டே வாருங்கள்.
3. முகம் பார்த்து பேசுங்கள்
அவர்களின் முகம் பார்த்து பேசுவதை உறுதிப்படுத்துங்கள். நீங்கள் அவர்களுடன் நேரம் செலவிடுவதை அவர்கள் உணரும்போது, டிவி பார்க்கும் நேரமும், செல்போன் உபயோகிக்கும் நேரமும் நிச்சயம் குறையும்.
4. செல்போனை ஒளித்து வையுங்கள்
அவர்கள் வெளியில் சென்று விளையாடும் நேரத்திலும், உங்களுடன் பேசிக்கொண்டு இருக்கும் நேரத்திலும் செல்போன் போன்ற எலெக்ட்ரானிக் பொருட்களை அவர்கள் கண்ணிற்கு எட்டாத தூரத்தில் வையுங்கள்.
5. சாப்பிடும் இடத்தில் செல்போன் வேண்டாம்
அவர்கள் சாப்பிடும்போது நீங்களும் செல்போன் பயன்படுத்துவதை குறைத்துக்கொள்வது நல்லது. ஏனென்றால், பெற்றோரை பார்த்தே பிள்ளைகள் எல்லா விஷயத்தையும் கற்றுக்கொள்கின்றனர் என்பதால் அவர்களுக்கு முன்னுதாரணமாக நாம் எப்போதும் இருக்க வேண்டும்.
6. வெளியில் செல்லுங்கள்
போனை வைத்துவிட்டு அவர்களுடன் வாக்கிங் செல்வது, வெளியில் சென்று விளையாடுவது போன்றவற்றை செய்யுங்கள். இது உங்களுக்கும், உங்களுடைய பிள்ளைகளுக்கும் புத்துணர்வை தந்து செல்போன் பயன்பாட்டை குறைக்கவும் ஊக்குவிக்கிறது.
7. கவனத்தை திசை திருப்புதல்
ஹேண்ட் கிராஃப்ட், விளையாட்டு பொருட்கள் போன்றவற்றை கொண்டு அவர்களுடைய கவனத்தை திசை திருப்புங்கள். இதனால் நாளடைவில் அவர்கள் செல்போனை விட்டு வெளியில் வந்துவிடுவார்கள்.
8. அலாரம் செட் செய்தல்
அவர்கள் செல்போன் எவ்வளவு நேரம் பயன்படுத்த வேண்டும் என்பதை நிர்ணயித்து அலாரம் செட் செய்ய தொடருங்கள். நாளடைவில், அவர்களே புரிந்துக்கொண்டு போனை உங்களிடம் கொடுத்துவிட்டு சென்றுவிடுவார்கள்.
பிள்ளைகளின் போன் பயன்பாட்டு நேரத்தையும், டிவி பார்க்கும் நேரத்தையும் நம்மால் கட்டுப்படுத்த முடியாவிட்டால் வேறு யாரால் தான் கட்டுப்படுத்த முடிய போகிறது. அவர்களிடம் அன்பாக பேசி, அதிக நேரத்தை செலவிட்டு இனியதோர் எதிர்காலத்தை பெற்றோர்களாகிய நாம் நிச்சயம் அமைத்து தர வேண்டும்.
A
Suggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.