இவற்றை எல்லாம் உங்கள் பிள்ளைகள் முன் செய்யாதீர்கள்!

cover-image
இவற்றை எல்லாம் உங்கள் பிள்ளைகள் முன் செய்யாதீர்கள்!

பெற்றோராகிய நாம் தான், நம்முடைய பிள்ளைகளுக்கு ரோல் மாடல். நாம் எதை கற்றுத்தருகிறோமோ, அதை தான் அவர்களும் கற்றுக்கொள்வார்கள். சில சமயம், நாம் கற்றுக்கொடுக்க வேண்டுமென கூட அவசியமில்லை. நாம் என்ன செய்கிறோமோ அதையே அவர்களும் செய்வார்கள். நல்ல விஷயங்களை நம்மை பார்த்து செய்தால் ஓகே. ஆனால், ஒருவேளை கெட்ட விஷயங்களை கற்றுக்கொண்டால் என்ன செய்வது. அதனால் பெற்றோர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தயவுசெய்து கீழ்காணும் விஷயங்களை உங்களின் பிள்ளைகள் முன்னால் எக்காரணம் கொண்டும் செய்யாதீர்கள். அவை என்னவென்பதை விளக்குகிறது இந்த பயனுள்ள பதிவு.

 

1. பொய்:

அவர்கள் முன்னால் எப்போதும் பொய் பேசாதீர்கள். உண்மையை ஒத்துக்கொள்ளுங்கள். பிள்ளைகள் கற்றுக்கொள்ளும் நிலையில் இருப்பார்கள். நீங்கள் பேசும் பொய், அவர்களையும் பேச தூண்டும். அதன்பிறகு, ஒருவேளை அவர்களை நீங்கள் இந்த விஷயத்தில் கண்டித்தால், கண்டுக்கொள்ளாமல் செல்ல கூட வாய்ப்புண்டு. இது அவர்களுடைய எதிர்காலத்தில் மிகப்பெரிய கேள்வியை நிச்சயம் எழுப்பிவிடும்.

 

2. கணவருடன் சண்டை இடுதல்:

கணவன் - மனைவிக்குள் மன சங்கடங்கள் வருவது இயல்பான விஷயம். இன்று ஏதோ ஒரு காரணத்துக்காக பேசிக்கொள்ளாமல் இருப்பர். நாளை சேர்ந்துவிடுவர். ஆனால், பிள்ளைகள் முன் நீங்கள் சண்டை போடும்போது, அவர்கள் வாழ்வில் அது எதிர்மறையான விளைவை ஏற்படுத்தக்கூடும். இப்போது நல்லது கெட்டது எதுவென்பதை பிரித்து பார்க்கும் பக்குவமென்பது அவர்களுக்கு இல்லாததால், உங்களை பார்த்து நாளை அவர்களும் வாழ்க்கை துணையிடம் இப்படி நடந்துக்கொண்டு விடக்கூடாது.

 

3. பிள்ளைகளை மற்றவர்கள் முன் கிண்டல் செய்யாதீர்கள்:

அவர்களை மற்ற யாருடனும் ஒப்பிட்டு கிண்டல் செய்யாதீர்கள். இதனால் அவர்களின் தன்னம்பிக்கை பாதிக்கக்கூடும். அவர்கள் மாற்றிக்கொள்ள வேண்டும் என நீங்கள் நினைக்கும் விஷயத்தை, தனியாக அழைத்து சொல்வது நல்லது. ஒருவேளை மற்றவர்கள் முன்னால் நாம் கிண்டல் செய்தால், சமூகத்துடன் ஒன்றி வாழ அவர்களுக்கு மிகவும் சிரமமாக இருக்கும். அதோடு, இதனால் அவர்களின் நினைவாற்றலும் பாதிப்புக்குள்ளாகும்.

 

4. பிள்ளைகளிடம் முரட்டுத்தனமாக நடத்தல்:

ஒரு சில சமயம், பிள்ளைகள் தங்களுடைய அறியாமை காரணமாக அடம் பிடிப்பார்கள். அப்போது பெற்றோர்களாகிய நாமும் சரிக்கு சமமாக அதே விஷயத்தை செய்யக்கூடாது. அப்படி செய்தால், நிச்சயம் அவர்கள் கூடுதலாக அடம்பிடிக்கவே செய்வார்கள். அடம்பிடிக்கும் குழந்தையை மாற்று வழிகளில் முதலில் அமைதிப்படுத்த வேண்டும். அதன்பிறகு, அவர்கள் செய்த இத்தகைய செயலால் என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்படும் என்பதை அன்பாக புரிய வைக்கவும்.

 

5. தேவையற்ற உணவுகளை உண்ணுதல்:

நேரத்தை மிச்சப்படுத்துகிறோம் என்ற பெயரில் நூடுல்ஸ் போன்றவற்றை நாம் சாப்பிட்டு, அவர்களையும் சாப்பிட பழக்கப்படுத்த கூடாது. இது அவர்களின் எதிர்காலத்தில் மிகப்பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தும். முன்பெல்லாம் எத்தனை வயதானாலும் நோய்கள் நெருங்கவே நெருங்காது. ஆனால், இப்போது சிறு வயதிலேயே சர்க்கரை வியாதி என பல பிரச்சனைகள் வந்துவிடுகிறது. அதனால், எப்போதும் ஆரோக்கியமான உணவை சாப்பிட நாம் அவர்களை பழக்க வேண்டும்.

 

6. போனை பயன்படுத்துதல்:

அவர்கள் உங்களின் அருகில் இருக்கும்போது முடிந்தளவுக்கு போன் பயன்படுத்துவதை குறைத்து கொள்ளுங்கள். இல்லையேல், அவர்களும் ஒரு நாள் உங்களையே பின்பற்றுவார்கள். எவ்வளவு முக்கியமான போன் கால், மெசேஜாக இருந்தாலும் பிள்ளைகளை மனதில் வைத்துக்கொண்டு ஈடுபடுங்கள். அதேபோல, அவர்கள் தொந்தரவிலிருந்து விடுபட போனை அவர்கள் கையில் கொடுத்துவிட்டு, நீங்கள் பாட்டுக்கும் வேலையில் மூழ்காதீர்கள். போன் மூலம் அவர்கள் நல்ல விஷயங்களை மட்டுமே கற்றுக்கொள்வார்கள் என்பதற்கு எந்த வித ஆதாரமும் இல்லை என்பதை மனதில் கொண்டு செயல்படுவது நல்லது.

 

7. புனைப்பெயர்கள்:

இதனை பட்டப்பெயர் என நாம் அழைப்போம். அவர்கள் முன்னால் கணவரையோ, நண்பர்களையோ என யாரையும் பட்டப்பெயர் வைத்து கூப்பிடுவது போன்ற செயல்களை தவிர்ப்பது நல்லது. இது போன்ற விஷயங்களை அவர்கள் கண்டால், நாளை பள்ளி சென்று படிப்பதற்கு பதிலாக மற்றவர்களுக்கு பட்டப்பெயர் வைத்து அழகு பார்க்கும் சூழ்நிலை வரலாம். அதனால், இந்த விஷயத்தில் மிகுந்த கவனம் தேவை நமக்கு.

 

8. சேர்ந்து இருத்தல்:

பிள்ளைகள் அருகில் இருக்கும்போது கணவன் - மனைவி கொஞ்சிக்கொண்டு இருப்பதை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகள் எப்போதும் அதிகம் கேள்வி கேட்பார்கள். அதனால், உங்களின் ஊடல் குறித்த கேள்விகள் இந்த வயதில் அவர்கள் மனதில் ஏற்படாமல் இருக்க வேண்டும்.

 

9. உடை உடுத்துதல்:

உடை உடுத்துதலில், உங்கள் பிள்ளைகளுக்கு எப்போதும் நீங்கள் முன் மாதிரியாக இருக்க வேண்டும். நம்மை பார்த்து வளரும் விஷயங்களில் ஒன்று உடை உடுத்தும் முறை. அதனால், அவர்களுக்கு எந்த மாதிரியான உடை உடுத்த வேண்டுமென்பதை உங்களை ரோல் மாடலாக வைத்தே கற்றுக்கொடுப்பது சிறந்த ஒரு செயலாகும்.

பெற்றோர்களே, உங்கள் பிள்ளைகளை நீங்களும் ஒரு அப்துல் கலாம் ஆக்கலாம். ஆனால், அதற்கு விதையை அவர்களின் சிறுவயதிலேயே போட்டு வளர்க்க தொடங்குங்கள். அதேபோல, அவர்களுக்கு பிடித்த விஷயங்கள் சரியானது என உங்கள் மனதில் பட்டால், அந்த இலட்சியப்பாதைக்கு பெற்றோராக நிச்சயம் நீங்கள் ஆதரவு தாருங்கள்.

#mindfulparenting
logo

Select Language

down - arrow
Personalizing BabyChakra just for you!
This may take a moment!