கர்ப்ப காலத்தில் நம்பப்படும் கட்டுக்கதைகள்

cover-image
கர்ப்ப காலத்தில் நம்பப்படும் கட்டுக்கதைகள்

கர்ப்பமாக இருக்கிறோம் என தெரிந்துவிட்டால் போதும், வருவோர் போவோர் எல்லாம் ஆளுக்கொரு அட்வைஸ் தர ஆரம்பித்துவிடுவார்கள். அவற்றுள் நன்மைகளும் அடங்கும். சில சமயம் பொய்யான வதந்திகளும் அடங்கும். அவை என்னவென்பதை இந்த சுவாரஸ்யமான பதிவின் மூலம் நாம் இப்போது காணலாம்.

 

என்னென்ன கட்டுக்கதைகள் எல்லாம் சொல்லப்படுகிறது?

குங்குமப்பூ சாப்பிடுதல்:

குங்குமப்பூ சாப்பிட்டால் பிறக்கும் பிள்ளை சிவப்பாக பிறக்குமென பலர் சொல்வார்கள். இதற்காக பாலில் குங்குமப்பூவை அள்ளி கொட்டி கூட குடிக்க கொடுப்பார்கள். ஆனால், உண்மை என்னவென்றால், குங்குமப்பூ அதிகம் சேர்த்துக்கொண்டால் வயிற்றுப்போக்கு போகுமே தவிர, பிறக்கும் பிள்ளையின் நிறத்துக்கும், இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதே உண்மை. பிள்ளையின் நிறம் என்பது, மரபு சார்ந்த ஒன்று. அதனை மாற்ற யாராலும் முடியாது.

 

வாக்கிங் செல்லுதல்:

வாக்கிங் சென்றால், பிள்ளைகள் பனிக்குட நீரை உடைத்துக்கொண்டு வந்து நம்மை பார்க்க தயாராவார்கள் என்று சிலர் சொல்வார்கள். நம்முடைய டாக்டர்கள் கர்ப்பமாக இருக்கும்போது வாக்கிங் போக சொல்வது உண்மை தான். ஆனால், இதனால் பிரசவம் ஏற்படும் என்பதற்கு எந்த வித ஆதாரமும் இல்லை. வாக்கிங் செல்வது நம்முடைய பிரசவத்துக்கு உதவும், வலியை குறைத்து சவுகரியத்தை தரும், அவ்வளவு தான்.

 

விளக்கெண்ணெய் பயன்படுத்துதல்:

பிரசவத்தை தூண்ட விளக்கெண்ணெய் பயன்படுத்தலாம் என சிலர் சொல்வர். இதுவும் வயிற்றுப்போக்குக்கு வழி வகுக்கும் ஒரு முறையாகும். இதுவும் பரிந்துரைக்கு உட்பட்ட ஒரு விஷயமாக நிச்சயம் இருப்பதல்ல.

 

கருவிலுள்ள பிள்ளை முடி:

கருவிலுள்ள குழந்தைக்கு முடி அதிகம் இருந்தால், நமக்கு வாந்தி அதிகமாக எடுக்கும் என சொல்வதுண்டு. இதுவும் ஒரு பொய்யான தகவல் தான். நமக்கு வாந்தி, குமட்டல் போன்றவை எடுப்பதற்கு முக்கியமான காரணம் ஹார்மோன் மாற்றங்கள் மட்டும் தான். கருவிலுள்ள குழந்தையின் முடி ஒன்றுமல்ல.

 

முதல் மூன்று மாதம் சாப்பிடுதல்:

முதல் மூன்று மாதம் ஒழுங்காக சாப்பிடாவிட்டால், கருவிலுள்ள பிள்ளையை அது பாதிக்கும் என்பர். உண்மை என்னவென்றால், இந்த நேரத்தில் நாம் கொஞ்சம் கொஞ்சமாக சிறிய உணவு எடுத்துக்கொண்டால் போதும். ஆயில் நிறைந்த உணவு, காரமான உணவு போன்றவற்றை தவிர்க்கவும். ஒரு சில பெண்களுக்கு பாலால் ஆன உணவு முதல் சில மாதங்களுக்கு ஒத்துக்கொள்ளாது.

 

முதல் மூன்று மாத ஓய்வு:

இதுவும் பொய்யான ஒரு தகவல். ஓய்வில் நீங்கள் இல்லாமல் இருந்தால் கருச்சிதைவு ஆகும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. நாம் வேலை செய்தாலும், மிகுந்த பாதுகாப்புடன் நாம் இருக்க வேண்டும். கர்ப்பம் அசாதாரணமாக இருந்தால் மட்டுமே அது கருச்சிதைவுக்கு வழிவகுக்கும். ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக முதல் மூன்று மாதங்கள் அசதி அதிகமிருக்கும் தான். ஆனால், ஓய்வு கிடைக்கும் போது ஓய்வெடுத்து, நீங்கள் எப்போதும் போல வேலையை தொடரலாம். எந்நேரமும் படுக்கையில் இருந்தால், அதனாலும் கால்கள் வலுவிழந்து காணப்படலாம்.

 

மாடிப்படி ஏறுதல்:

முதல் மூன்று மாதங்கள் மாடிப்படி ஏறினால் கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு ஆபத்து என சொல்வதுண்டு. இதுவும் பொய்யான ஒரு தகவல். மாடிப்படி ஏறுவதனால் சில நன்மைகளும் உண்டு. இந்த நேரத்தில் ஏற்படும் வாந்தி, மயக்கம், குமட்டல் காரணமாக மாடிப்படி ஏறுவது ஆபத்து. அவ்வளவு தான்.

கூடுதல் தகவலுக்கு ஏற்கனவே பகிர்ந்துள்ள இன்னொரு ஆர்டிக்கலை பார்த்து பயன் பெறலாம் நண்பிகளே.

 

உடலுறவு கொள்ளுதல்:

முதல் மூன்று மாதங்கள் உடலுறவு கொள்வதால், கருச்சிதைவு ஏற்பட வாய்ப்புண்டு என்பர். இதற்கும் எந்த ஆதாரமும் இல்லை. கர்ப்பமாக இருக்கும்போது அசதி அதிகமாக இருக்கும். அந்த சமயம் உடலுறவும் கொள்ளும்போது, அது கூடுதல் அசதியை கர்ப்பிணிகளுக்கு தரும். மற்றபடி, உடலுறவு கொள்வதால் கருச்சிதைவு ஏற்படும் என்பது பொய்யான தகவல்.

 

இரும்புச்சத்து மாத்திரை:

இரும்புச்சத்து மாத்திரை எடுத்துக்கொண்டால், குழந்தை கருப்பாக பிறக்கும் என தகவல் வருகிறது. இதுவும் பொய் தான். பிள்ளைகளின் சரும நிறம், மரபணு சார்ந்த ஒரு விஷயமே தவிர, அதற்கும் இரும்புச்சத்து மாத்திரைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

 

நெய் சாப்பிடுதல்:

நெய் சாப்பிட்டால் பிரசவம் எளிதாக நடக்கும் என்பார்கள். ஆனால், இதுவும் உண்மையல்ல. நெய்யில் நிறைவுறாத கொழுப்பு உள்ளது. இது வீணாக நம் எடையை கூட்டுமே தவிர, இதற்கும் பிரசவத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

 

எள்ளு விதை சாப்பிடுதல்:

எள்ளு சேர்த்துக்கொண்டால் கருக்கலைந்துவிடும் என்பார்கள். ஆனால், இதற்கும் எந்தவொரு ஆதாரமும் இல்லை. எள்ளு சூட்டை கிளப்பும் என்பதால் கருவிலுள்ள பிள்ளைக்கு ஆபத்தாக அது இருக்கலாம். கருகலைந்துவிடும் என்றெல்லாம் சொல்லிவிட முடியாது.

பப்பாளி, மாம்பழம், அன்னாசி:

இந்த பழங்களை சாப்பிட்டால் கருச்சிதைவு உண்டாகும் என்பர் சிலர். ஆனால், உண்மை என்னவென்றால், உங்களின் கரு அசாதாரண நிலையில் இருந்தால் மட்டுமே இதற்கு வாய்ப்புண்டு.

எனவே நண்பிகளே, யார் எது சொன்னாலும் நம்பிவிடாமல் உண்மை - பொய்யை முதலில் ஆராய்ந்து அதன்பிறகு முடிவெடுங்கள். கர்ப்பமாக இருக்கும்போது நெகட்டிவாக எண்ணங்களை மனதில் அதிகம் தங்க விடாதீர்கள். இதுவே கருவில் வளரும் நம்முடைய குழந்தைக்கு அசாதாரண சூழலை உருவாக்கி தந்துவிடும்.

#pregnancymilestones
logo

Select Language

down - arrow
Personalizing BabyChakra just for you!
This may take a moment!