பிள்ளைகள் தவழ ஆரம்பித்ததும் துரத்தி பிடிப்பதற்கே நமக்கு நேரம் சரியாக இருக்கும். இது அவர்களிடமிருந்து நாம் இரசிக்க வேண்டிய ஒரு செயல்பாடாக இருந்தாலும், கவனமாகவும் இருக்க வேண்டும். இது குறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் நாம் காணலாம் வாருங்கள்.
எப்போது பிள்ளைகள் தவழ தொடங்குவார்கள்?
பொதுவாக பிள்ளைகள் எட்டு மாதத்தில் தவழ தொடங்குவார்கள். ஒரு சில பிள்ளைகள் எட்டு மாதங்களுக்கு முன்பே இந்த சேட்டையை ஆரம்பித்தும் விடுகின்றனர். தவழும் பிள்ளைகள் அவர்களின் அருகிலுள்ள நாற்காலி, மேசை போன்றவற்றை பிடித்திழுக்க ஆரம்பிக்கின்றனர்.
எந்த பொருளெல்லாம் அவர்கள் கண்களுக்கு தென்படும்?
குளியலறை பொருட்கள்:
- குளியலறை தொட்டியில் தண்ணீரை நிரப்பும்போது, அது அவர்கள் கால் மட்டத்துக்கு மட்டுமே இருப்பதை உறுதி செய்யவும். இது பிள்ளைகள் இருக்கும் ஒவ்வொரு வீட்டிலும் பின்பற்ற வேண்டிய முக்கியமான ஒன்றாகும்
- அவர்கள் கைக்கு எட்டும் தூரத்தில் சுடு தண்ணீரை வைக்க கூடாது
- அவர்கள் அருகில் இருக்கும்போது, சுடு தண்ணீர் டேப்பை எக்காரணம் கொண்டும் திறந்து வைக்க கூடாது
- அவர்கள் குளிக்கும்போது எந்த காரணத்துக்காகவும் அவர்களை தனியாக விடக்கூடாது
- ஹீட்டர்களை போட்டுவிட்டு அவர்கள் கைக்கு எட்டும் தூரத்தில் வைக்க கூடாது. குறிப்பாக கம்பி ஹீட்டர்களை பயன்படுத்தும்போது மிகவும் கவனமாக நாம் இருக்க வேண்டும்
- எப்போதும் பயன்படுத்திய நீரை கீழே ஊற்றிவிட்டு பாத்திரங்களை காலியாக மட்டுமே வைக்கவும்
- வழுக்காத பாயை குளிக்கும் பகுதியில் போட்டு வைக்கவும்
- பயன்படுத்தாத போது பாத்ரூம் கதவுகளை எக்காரணம் கொண்டும் திறந்து வைக்க கூடாது
சுட்டுக்கொள்ளாமல் இருக்க செய்ய வேண்டியவை:
- பிள்ளைகள் இருக்கும் இடத்தில் சூடான உணவையோ, நீரையோ வைக்க கூடாது
- டேபிள்களின் ஓரத்தில் சூடாக இருக்கும் உணவுகளை எக்காரணம் கொண்டும் வைக்கவே கூடாது
- நகரும் மேசைகளில் சூடான எதையும் வைக்க கூடாது
- ஸ்டவ்வில் சமைக்கும்போது ஒரு கையில் பிள்ளையை பிடித்திருப்பது போன்ற செயல்களை கட்டாயம் தவிர்க்கவும்
- கேஸ் சிலிண்டரை அவர்களுக்கு எட்டும் தூரத்தில் வைக்க கூடாது
- மெழுகுவர்த்தி, அகல்விளக்கு, அகர்பத்திகள், மஸ்கிட்டோ காயில் போன்றவற்றை அவர்கள் கைக்கு எட்டும் தூரத்தில் வைக்க வேண்டாம்
- தீப்பெட்டிகள் மற்றும் லைட்டர்கள் பாதுகாப்பான இடத்தில் இருப்பதை உறுதி செய்யவும்
காரில் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை:
- அவர்களுக்கான கார் சீட்டை பாதுகாப்பாக மாற்றவும்.
- சீட் ஆடாமல் அசையாமல் ஃபிட்டாக உள்ளதா என்பதை உறுதி செய்யவும்
- ஒருவேளை பிள்ளைகள் உங்கள் கையில் இருந்தால், உங்களுக்கு சீட் பெல்ட் போட்டிருப்பதை உறுதி செய்யவும். பிள்ளைக்கு மட்டும் போட்டிருக்கிறதா என பார்க்க கூடாது
- ஒரு நிமிடம் கூட தனியாக அவர்களை காரில் விடாதீர்கள்
துணிகளில் நாம் கவனிக்க வேண்டியவை:
- அவர்கள் கழுத்தை இறுக்கும் ஆடைகளை போட்டு விடாதீர்கள்.
- அவர்கள் டிரெஸ்ஸில் உள்ள எல்லா பட்டனும் ஃபிட்டாக உள்ளது, கழடவில்லை என்பதை உறுதி செய்யவும், இல்லையேல், வாயை வைத்து அதனை இழுப்பார்கள்
- மணி, கண்ணாடி போன்றவை வைத்த டிரெஸ்ஸை தவிர்ப்பது நல்லது. இவற்றை விழுங்கினால் மூச்சு திணறல் ஏற்படக்கூடும்
தூங்க வைப்பதில் கவனம்:
- அவர்களை அண்ணாந்து பார்க்க வைத்து படுக்க வையுங்கள்
- பிள்ளைகள் கட்டிலில் படுத்திருக்கும்போது உருண்டு விழ ஏதேனும் வாய்ப்புள்ளதா என்பதை பார்த்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும்
- பிள்ளைகளை தொட்டில் அல்லது ஊஞ்சலில் படுக்க வைத்திருந்தால், மிகவும் கவனத்துடன் அவர்களை பார்த்துக்கொள்ளவும்
ஒருவேளை உங்கள் பிள்ளைகள் தரையில் படுத்து உறங்கினால், அருகிலுள்ள ஸ்விட்சகளுக்கு பாதுகாப்பு கவர்களை போட்டு வைப்பது நல்லது. அதோடு வொயர் எதுவும் வெளியில் வந்து இல்லை என்பதையும் உறுதி செய்யவும்
- அவர்கள் கைக்கு எட்டும் தூரத்தில் மொபைல் போன்கள், தொட்டிலில் தொங்கும் பொம்மை போன்றவை இருக்க கூடாது
- பிள்ளைகள் தூங்கும்போது அவர்கள் கைகளுக்கு அருகில் பெரிய பொம்மைகளை வைக்காதீர்கள். அவை அவர்களுக்கு மூச்சு திணறலை ஏற்படுத்தக்கூடும்
- வீட்டிலுள்ள பீரோல், கபோர்டுகளை பூட்டி வைக்கவும். எக்காரணம் கொண்டும் திறந்து போட கூடாது
கதவுகளில் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:
- கதவுகள் தானாக மூடாமல், திறக்காமல் இருக்க, டோர் ஸ்டாப்களை நாம் பயன்படுத்தலாம்
- ஆட்டோமெட்டிக் லாக்குகளை கதவிலிருந்து அகற்றவும், அதேபோல சாவிகளை அவர்கள் கைக்கு எட்டும் தூரத்தில் வைக்க வேண்டாம்
எலெக்ட்ரானிக் விஷயங்களில் கவனிக்க வேண்டியவை:
- எப்போதும் ஸ்விட்ச் போர்டுகளை சோஃபா போன்றவற்றிக்கு பின்னால் மறைத்து வைப்பது நல்லது
- அதேபோல, அயர்ன் பாக்ஸ், எலெக்ட்ரிக் அடுப்பு போன்றவற்றை பயன்படுத்திய பிறகு, அன்-பிளக் செய்யப்பட வேண்டும். அதோடு, அவர்கள் கைக்கு எட்டாத தூரத்தில் வைக்கவும் வேண்டும்
- ஸ்விட்ச்களை அடிக்கடி கவனித்து, அவை ஷாக் அடிக்கவில்லை என்பதை உறுதி செய்யவும்
விழாமல் தடுக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கைகள்:
- பிள்ளைகளை கட்டில் அல்லது சோஃபாவில் தனியாக விட வேண்டாம், கீழே விழ வாய்ப்புள்ளது.
- ஜன்னல்களில் பாதுகாப்பு வளையங்கள் போட்டு வைப்பது, கதவுகளை மூடி வைப்பது போன்ற முன்னெச்சரிக்கைகளை நாம் செய்யலாம்.
- மாடிப்படிகளுக்கு செல்லும் படிகளை மூடி வைக்கவும்
- நீங்கள் மாடியில் வசிப்பவராக இருந்தால், எந்த காரணத்துக்காகவும் அவற்றை திறந்து அவர்கள் பார்வையில் படும்படி வைக்க கூடாது
- அவர்களை எங்காவது அழைத்து சென்றால், சேப்டி பெல்ட்டை போட்டிருப்பது அவசியம்
தோழிகளே, இந்த பதிவில் எப்படி எல்லாம் நம்முடைய பிள்ளைகளை பாதுகாப்பது என்பது குறித்து தெரிந்துக்கொண்டோம். வேறு என்னவெல்லாம் நம்முடைய பிள்ளைகளின் பாதுகாப்புக்காக நாம் செய்ய வேண்டும். நீங்களும் அதனை மற்ற அம்மாக்களுடன் பகிர்ந்துக்கொள்ளலாமே.
#childsafety #growthmilestones