பிள்ளைகளுக்கு ஏற்படுத்த வேண்டிய உணவுப் பழக்கவழக்கங்கள்

cover-image
பிள்ளைகளுக்கு ஏற்படுத்த வேண்டிய உணவுப் பழக்கவழக்கங்கள்

நம்மை பார்த்து பிள்ளைகளுக்கு வரும் பழக்கங்கள் பல. அவற்றுள் ஒன்று தான் உணவுப் பழக்கவழக்கம். நம் பிள்ளைகளின் எடை ஆரோக்கியமாக இருக்கவும், அவர்களின் வளர்ச்சி சரியான விகிதத்தை அடையவும் உணவு பழக்கவழக்கம் முக்கியமான ஒன்றாகும். அதோடு, நாம் சிறுவயதில் சாப்பிட எப்படி பழக்கப்படுத்துகிறோமோ, அதை தான் அவர்கள் பெரியவர்கள் ஆன பின்பும் கடைப்பிடிக்க செய்கிறார்கள்.

நம்முடைய மருத்துவர்கள், நம் பிள்ளைகளின் உடல் எடை, உயரம், உடல் நிறை எண் (BMI) போன்றவற்றை கணக்கிட்டு, எந்த மாதிரியான உணவுப்பழக்கவழக்கம் வேண்டுமென்பதையும் பரிந்துரைப்பார்கள்.

ஆரோக்கியமான உணவுப்பழக்க வழக்கத்தில் அவசியமான ஒன்று என்னவென்றால், நம் பிள்ளைகள் எவ்வளவு சாப்பிடுகிறார்கள் என்பதும் கூட. அதோடு, அவர்கள் எடுத்துக்கொள்ளும் கொழுப்பு மற்றும் இனிப்பு அளவும் இதனுடன் சேரும்.

 

அவர்கள் எடுத்துக்கொள்ளும் கொழுப்பு அளவை குறைக்க என்ன தான் வழி?

  • குறைந்த கொழுப்பு அல்லது கொழுப்பு இல்லாத பால் உற்பத்தி பொருட்கள் தரலாம்
  • முழு தானிய பிரெட்டுகள் நல்லது
  • பழங்கள் மற்றும் காய்கறிகள் கொடுக்கலாம்
  • அதோடு, இனிப்பு பானங்கள் மற்றும் உப்பு அதிகமுள்ள ஸ்நாக்ஸ் கொடுப்பதை குறைக்கலாம்

 

பிள்ளைகளுக்கு எந்த மாதிரியான பழக்கத்தை எல்லாம் நாம் ஏற்படுத்து வேண்டும்?

1. வீடு முழுக்க ஆரோக்கியம்

வீடு முழுவதும் ஆரோக்கியமான உணவுகள் மட்டுமே இருப்பதை உறுதி செய்யவும். நாம் இவற்றை அவ்வப்போது சாப்பிடும்போது, அதனை பார்க்கும் நம் பிள்ளைகளும் ஆரோக்கியம் நோக்கி நகர தொடங்குவார்கள். வீடு முழுக்க ஆங்காங்கே சிப்ஸ், கூல் டிரிங்க்ஸ், ஜூஸ் போன்றவை பரப்பி போடுவதை கட்டாயம் நாம் தவிர்க்கவும்.

 

2. பொறுமையாக சாப்பிட ஊக்கப்படுத்துதல்

எவ்வளவு பசியாக இருந்தாலும் பொறுமையாக சாப்பிட அவர்களை பழக்கவும். ஒவ்வொருவருக்காக பரிமாறும் பொழுது, பசியை காரணம் காட்டி முதலில் தனக்கு தான் பரிமாற வேண்டுமென அவர்கள் அடம்பிடிப்பதை நாம் குறைக்க வேண்டும். இது அவர்களுக்கு பொறுமையாக இருப்பது எப்படி என்பதை வாழ்க்கைக்கு கற்றுத்தருகிறது.

 

3. குடும்பத்துடன் சாப்பிடுவது

ஒரு சில பிள்ளைகள் குடும்பத்தில் உள்ளவர்களுடன் சாப்பிடாமல், டிவி பார்த்துக்கொண்டு சாப்பிடுவது போன்ற பழக்கங்களை கொண்டிருப்பார்கள். இந்த பழக்கத்தை நாம் அவர்களிடம் இருந்து மாற்ற முயல வேண்டும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டு, அதன்பிறகு அவர்களை டிவி பார்க்க சொல்லலாம். இதனால், குடும்பத்துடனும், சமுதாயத்துடனும் ஒன்றிவாழ அவர்கள் பழகுவார்கள். இதனை அன்பாக சொல்லி அவர்களுக்கு நாம் புரியவைக்கவும். நாம் ஆக்ரோஷமாக செயல்பட்டு அவர்களை மாற்ற முயன்றால், அவர்கள் கூடுதலாக அடம்பிடிக்கவே செய்வார்கள்.

 

4. உணவை குறித்த புரிதல்

நம்முடைய பிள்ளைகள் எப்பேற்பட்ட உணவை தேர்ந்தெடுக்க வேண்டுமென்பதை இந்த பழக்கம் முடிவு செய்கிறது. நீங்கள் சமையலுக்கான பொருட்களை ஷாப்பிங் செய்ய செல்லும்போது, அவர்களையும் அழைத்து செல்லலாம். அதேபோல, சமையலை தயார் செய்யும்போது, அவர்களை உடன் அமரவைத்து எந்த காய்கறி? என்ன வைட்டமின் கொண்டுள்ளது? போன்றவற்றை அவர்களுக்கு கற்றுக்கொடுக்கலாம்.

 

5. ஸ்நாக்ஸ்ஸை திட்டமிடுதல்

அவர்கள் அதிகமாக ஸ்நாக்ஸ்ஸை விரும்பினால், இதனால் எந்நேரமும் சாப்பிடும் பழக்கத்துக்கு தள்ளப்படுவார்கள். பகல் நேரத்தில் ஒரு குறிப்பிட்ட சமயம் மட்டும், ஆரோக்கியமான ஸ்நாக்ஸ்ஸை நாம் அவர்களுக்கு தர தொடங்கலாம். ஆனாலும், சாப்பிடுவதற்கான நேரத்தில் ஸ்நாக்ஸ் தருவதை தவிர்க்கவும். இது அவர்களின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்த உதவக்கூடியதாகும்.

 

6. தண்ணீர் குடித்தல்

அதிகமாக கூல் டிரிங்க்ஸ், பாக்கெட் ஜூஸ் போன்றவை குடிப்பது உடல் பருமனுக்கு வழிவகுக்கும் என்பதை புரியவைத்து தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை நாம் அவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும்.

 

7. தண்டிக்க வேண்டாம்

அவர்கள் சாப்பாட்டை சாப்பிட முடியாமல் மீதம் வைத்தால் அடிக்கவோ, திட்டவோ கூடாது. அப்புறம், பயந்து கொண்டு மல்லுக்கட்டி சாப்பிட்டு அதனால் உடல் பிரச்சனைகள் வர அதிகம் வாய்ப்புள்ளது.

 

8. உணவகங்கள் செல்லுதல்

குடும்பத்தோடு ரெஸ்டாரண்ட் சென்றாலும், சுவையான உணவை மட்டுமே ஆர்டர் செய்யாமல், ஆரோக்கியத்தையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

என்ன தோழிகளே, நீங்களும் இந்த பழக்க வழக்கங்களை எல்லாம் உங்கள் பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுத்து அவர்கள் ஆரோக்கியமாக வாழ உதவலாமே. மீண்டும் ஒரு நல்ல பயனுள்ள பதிவில் உங்களை சந்திக்கிறோம்.

#parentinggyaan
logo

Select Language

down - arrow
Personalizing BabyChakra just for you!
This may take a moment!