28 Oct 2021 | 1 min Read
Medically reviewed by
Author | Articles
இதனை ‘சென்சரி பிளே’ என அழைப்பார்கள். இது நம்முடைய பிள்ளைகளின் உணர்வு திறனை வளர்க்க உதவுகிறது. நம்முடைய பிள்ளைகளின் தொடு திறன், பார்க்கும் திறன், கேட்கும் திறன் போன்றவற்றில் முன்னேற்றம் காண இந்த செயல்பாடுகள் நமக்கும், நம்முடைய பிள்ளைகளுக்கும் உதவுகிறது.
நம்முடைய பிள்ளைகளுக்கு சிறுவயதில் ஐந்து விதமான உணர்வுகள் அவசியம் தேவைப்படுகிறது. அவை, தொடுதல், சுவைத்தல், கேட்டல், பார்த்தல் மற்றும் நுகர்தல் ஆகியவை ஆகும். இவை மேம்பட இந்த பதிவு நிச்சயம் உங்களுக்கும், உங்களுடைய பிள்ளைகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
என்னவெல்லாம் செயல்பாடுகளை நாம் செய்யலாம்?
1. உணவு
அவர்கள் விளையாடும்போது சட்டை அழுக்காக தான் செய்யும். ஆனாலும் அதை பற்றிய கவலை வேண்டாம். இதன் மூலமாக உணவை சுவைக்கவும், பிடிக்காத உணவை வேண்டாம் என சொல்லவும் நம்முடைய பிள்ளைகள் கற்றுக்கொள்கிறார்கள். நாம் இந்த செயல்பாட்டை பழங்கள் மற்றும் காய்கறிகள் கொண்டும் கூட செய்யலாம். அதோடு இவை தான் நம்முடைய பிள்ளைகள் தானாக எடுத்து சாப்பிடவும் பழக்கும்.
2. சவுண்ட் டியூப்
இது நம்முடைய பிள்ளைகளின் கேட்கும் திறனை மேம்படுத்தும் ஒரு செயல்பாடாகும். முதலில், சில வெற்று பேப்பர் டவல் ரோல்களை எடுத்துக்கொள்ளவும். ஒவ்வொரு ரோலிலும் சமைக்கப்படாத அரிசி, காய்ந்த பீன்ஸ், மணிகள் போன்றவற்றை உள்ளே போடவும்.
அவை உருண்டு அந்த டியூப்பில் செல்லும்போது வரக்கூடிய வித்தியாசமான ஒலிகளை அவர்கள் கவனிப்பார்கள்.
3. விளையாட்டு மாவு
இந்த வகை மாவில், எந்த கெமிக்கலும் இல்லாமல் இருக்க வேண்டும். இதனை கொண்டு நம்முடைய பிள்ளைகள் விதவிதமான வடிவங்களை செய்து மகிழ்கின்றனர். இதனால் சப்பாத்திக்கு மாவு பிசையும் ஆர்வம் வர, உங்களுக்கு உதவ அவர்கள் தயாரானாலும் ஆச்சரியப்பட எதுவுமில்லை. இதனால், நம்முடைய பிள்ளைகளின் கை தசைகளும், கற்பனை திறனும் வலுப்பெறும்.
4. பேலன்ஸ் பீம்
இது சிம்பிளான ஒரு விளையாட்டு தான். மார்க்கிங் டேப்புகளை தரையில் ஒட்டிக்கொள்ளவும். அதன் மீது நம்முடைய பிள்ளைகளை நடக்க சொல்லி ஊக்குவிக்கலாம். இது தடுமாற்றம் இல்லாமல் அவர்கள் நடக்க உதவக்கூடிய ஒரு செயல்பாடாகும்.
5. மினுமினுக்கும் பாட்டில்
இது நம் பிள்ளைகளின் கோபத்தை கட்டுப்படுத்தும் ஒரு செயல்பாடாகும். நீங்கள் இதற்காக ஒரு பழைய பாட்டிலை எடுத்துக்கொள்ளுங்கள். பிறகு, கோந்து, ஃபுட் கலரிங், மினுமினுக்கும் ஸ்டிக்கர்கள் போன்றவற்றை எடுத்துக்கொள்ளவும். இவற்றை எல்லாம் அந்த பாட்டிலில் போடும் முன்பு, பாட்டிலை தண்ணீர் கொண்டு நிரப்பி மூடி கொள்ளவும்.
அவர்களுக்கு எப்போதெல்லாம் கோபம் வருகிறதோ, அப்போது அந்த பாட்டிலை குலுக்க சொல்லவும். அந்த மினுமினுக்கும் ஸ்டிக்கர் போன்றவை எல்லாம் மிதப்பதை பார்த்து மகிழ்வார்கள். அவர்கள் கோபம் தனியும்போது, அவை அனைத்தும் மீண்டும் பாட்டிலின் அடிப்புறத்திற்கே சென்றுவிடும்.
6. ஸ்விங், ஸ்விங், ஸ்விங்
ஊஞ்சலில் ஆடுவது நம்முடைய பிள்ளைகளுக்கு எப்போதுமே பிடித்த விளையாட்டு தான். ஆனாலும் ஒரு சில மாறுதல்களை செய்யும்போது, நம்முடைய பிள்ளைகளின் வளர்ச்சியில் அவை கூடுதல் பங்கையும் வகிக்கிறது. சூப்பர் மென் ஸ்டைலில், ஊஞ்சலில் அவர்கள் வயிற்றை வைத்து ஆட சொல்லலாம்.
அதேபோல நாம் ஒவ்வொரு முறையும் அவர்களை ஆட்டி விடுவதற்கு பதிலாக, அவர்களாகவே கால்களை கீழே ஊன்றி ஆடவும் நாம் ஊக்கப்படுத்தலாம். ஆனாலும், நம்முடைய கண் பார்வையில் மட்டுமே இதனை அவர்கள் செய்ய வேண்டும்.
7. தோட்டம் அமைத்தல்
நம்முடைய பிள்ளைகளின் செயல்பாடு மற்றும் உணர்வை வேடிக்கையாக மாற்ற இது உதவுகிறது. நாம் சிறிய தொட்டிகளில் கூட விதைகளை நட ஊக்குவிக்கலாம். சேற்றை நோண்டி, விதையை நட்டு, அதற்கு தண்ணீர் ஊற்றி, அதன் மலர்களை நுகரவும் நாம் ஊக்குவிக்கலாம். இவை பல விதத்தில் நம்முடைய பிள்ளைகளின் உணர்வை மேம்படுத்த செய்கிறது.
8. மியூஸிக்கல் இன்ஸ்ட்ரூமென்ட்
வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு கிட்டார் போன்றவற்றை செய்து அவற்றை இசைக்க நம் பிள்ளைகளை ஊக்குவிக்கலாம். உதாரணத்திற்கு, வயலினை நம்மால் கொட்டாங்குச்சி கொண்டே செய்துவிட முடியும். அதேபோல பாத்திரங்களில் குச்சியை வைத்து அடித்து அதிலிருந்து வரும் ஒலியை கேட்க வைக்கலாம்.
நம்முடைய பிள்ளைகளின் காது, கண் என ஒவ்வொரு பாகமும் எந்தவித குறைபாடுகளும் இல்லாமல் சரியாக செயல்படுவதை நாம் எப்போதும் உறுதி செய்ய வேண்டும். இதனை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சரி செய்வது எதிர்காலத்தில் வரக்கூடிய பல வித பிரச்சனைகளை தவிர்க்க உதவும். மீண்டும் ஒரு பயனுள்ள பதிவில் சந்திக்கிறோம், நன்றி, வணக்கம்.
A