• Home  /  
  • Learn  /  
  • டெஸ்ட் டியூப் பேபி பற்றி அறிய வேண்டிய உண்மைகள்
டெஸ்ட் டியூப் பேபி பற்றி அறிய வேண்டிய உண்மைகள்

டெஸ்ட் டியூப் பேபி பற்றி அறிய வேண்டிய உண்மைகள்

29 Oct 2021 | 1 min Read

Medically reviewed by

Author | Articles

கல்யாணம் ஆன சில மாதங்களில் அடுத்தாக எழும் கேள்வி, கர்ப்பமாக இருக்கிறீர்களா என்பது தான். இது எவ்வளவு பெரிய மன வேதனை என்பதை பெண்களால் விவரிக்கவும் இயலாது. பிள்ளை பெற்றுக்கொள்வதென்பது கணவனும், மனைவியும் சேர்ந்து எடுக்கும் ஒரு முடிவு. அதனில், மூன்றாவது மனிதன் மூக்கை நுழைப்பது சரியாக இருக்காது. ஒரு சில பெண்கள், திருமணம் முடிந்து 5-6 மாதம் ஆகிவிட்டது. ஆனாலும் கர்ப்பம் தரிக்கவில்லை என்ற கவலையுடனும் இருப்பார்கள். உண்மையில் சொல்ல வேண்டுமெனில், 1 வருடம் வரைக்கும் இயற்கையாகவே கர்ப்பம் தரிக்க முயலலாம் என்கின்றனர் மருத்துவர்கள். ஒருவேளை 1 வருடம் முயன்றும் கர்ப்பம் தரிக்கவில்லை என்றால், அப்போது தான் சிகிச்சை தேவை என்கின்றனர். சில தம்பதியினருக்கு இயற்கையாக கர்ப்பம் தரிக்க வாய்ப்பு இல்லாதபோது பயன்படுத்தும் முறைகளுள் ஒன்று தான் இந்த ஐ.வி.எஃப். இது பற்றிய கூடுதல் தகவலை நாம் இப்போது காண்போம் வாருங்கள்.

 

செயற்கை கருத்தரித்தல் முறை (IVF) என்றால் என்ன?

இந்த கருத்தரித்தல் முறையில், முதிர்ச்சி அடைந்த முட்டையை சேகரித்து, ஆய்வகத்தில் விந்தணுவுடன் கருவுற வைப்பார்கள். கருவுற்ற முட்டையை கர்ப்பப்பையில் செலுத்துவார்கள்.

 

எப்போது இது அவசியமாகிறது?

1. பெலோபியன் குழாய் சேதமடைதல் அல்லது அடைப்பு இருத்தல்

பெலோபியன் குழாய் சேதமடைந்து இருக்கும்போதும் அல்லது அடைத்து இருக்கும்போது முதிர்ச்சியடைந்த முட்டையால் விந்தணுவுடன் இணைந்து கருப்பைக்கு செல்ல முடியாமல் போகிறது.

 

2. கருமுட்டை வெளிப்பாடு இல்லை

கருமுட்டை சரியான நேரத்தில் வெளிப்படாமல் இருக்கும்போது இது அவசியமாகிறது.

 

3. எண்டோமெட்ரியோஸிஸ்

கரு சரியான இடத்தில் வளராதபோது, கரு தங்குவதற்கு முடியாமல் போகிறது. இதனால் சினைப்பைகள், கர்ப்பப்பை, பெலோபியன் குழாய் ஆகியவையும் பாதிப்புக்குள்ளாக வாய்ப்புள்ளது.

 

4. நார்த்திசுக்கட்டி வளர்தல்

கருப்பையில் கட்டி போன்று வளர தொடங்கும். 30 முதல் 40 வயது வரை உள்ள பெண்களுக்கு இது பொதுவாக இருக்க வாய்ப்புள்ளது. கருவுற்ற முட்டை சரியாக உட்பதியாமல் இருக்கும்போதும், இது அவசியமாகிறது.

 

5. கருத்தடுப்பு சிகிச்சை

கர்ப்பமாவதை தடுப்பதற்காக, பெலோபியன் குழாயை கட் செய்வது அல்லது அடைப்பதால் கருத்தரிக்க முடியாமல் போகலாம். கருத்தடுப்பு சிகிச்சைக்கு பிறகு கர்ப்பமாக நினைத்தால், அதற்கு ஒரே வழி இந்த IVF தான்.

 

6. விந்தணு குறைபாடு

விந்தணு சரியாக நகராமல் இருந்தாலும், விந்தணு சரியான வடிவத்தில் இல்லை என்றாலும், சரியான எண்ணிக்கையில் இல்லை என்றாலும் கர்ப்பமாக சிரமத்தை உண்டாக்கலாம். அப்போது செயற்கை கருத்தரித்தல் முறை தேவைப்படுகிறது.

 

7. விவரிக்க முடியாத பிரச்சனை

என்ன மாதிரியான பிரச்சனையால் கருத்தரிக்க முடியாமல் போனது என்ற காரணம் தெரியாத போதும் செயற்கை கருத்தரித்தல் தான் சிறந்த வழியாக அமைகிறது.

8. மரபணு குறைபாடு

சில சமயம் மரபு சார்ந்த காரணங்களினாலும் இது போன்ற கருத்தரிப்பு பிரச்சனைகள் உண்டாகிறது. அப்போதும் IVF முறையை பலர் கடைப்பிடிக்கின்றனர்.

 

9. புற்றுநோய் போன்றவற்றிற்கான சிகிச்சை

ரேடியேஷன் அல்லது கீமோதெரபி போன்ற புற்றுநோய் சிகிச்சையால் கருத்தரிப்பதை பாதிக்க வாய்ப்புள்ளது. அப்போதும் IVF முறையே கைக்கொடுக்கிறது.

 

IVF 100% பலன் அளிக்குமா?

இந்த சிகிச்சை வெற்றியடைவது சில காரணிகளை பொறுத்தே அமைகிறது. அவை,

 

  • தம்பதியரின் வயது
  • கருத்தரிக்க முடியாமல் இருந்துவந்த நாட்களின் எண்ணிக்கை
  • கருத்தரிக்க முடியாமல் போனதற்கான காரணம்
  • விந்தணு, முட்டை ஆகியவற்றின் தரம்
  • கருப்பை உட்சளிப் படலத்தின் வளர்ச்சி

இந்தியாவில், IVF வெற்றி விகிதத்தை பார்க்கும்போது, 30 முதல் 35 சதவிகிதமாக உள்ளது. ஆனாலும் மேல்காணும் காரணிகளை பொறுத்தே அது அமையும். இளம்பெண்களை பொறுத்த வரை 40 சதவிகிதத்துக்கும் மேலாக இந்த செயற்கை கருத்தரித்தல் முறையில் வெற்றியை கண்டுள்ளனர். அதேபோல 35 வயதிற்கும் குறைவான பெண்களுக்கு இது நல்ல பலனை அளிப்பதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

ஒருவேளை நீங்கள் நீண்ட வருடங்களாக கருத்தரிக்க முயன்றால், இந்த பதிவு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். உங்கள் தோழிகள் இது போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு சிரமம் கொள்கிறார்களா. அவர்களுக்கும் இந்த பதிவு உதவலாம் அல்லவா. மீண்டும் சந்திப்போம், நன்றி, வணக்கம்.

A

gallery
send-btn