பிள்ளைகள் தூக்கம் குறித்த சுவாரஸ்யமான தகவல்

cover-image
பிள்ளைகள் தூக்கம் குறித்த சுவாரஸ்யமான தகவல்

பிள்ளைகளை தூங்க வைக்க முடியாமல் தவிக்கிறீர்களா? இதற்கு என்ன தான் காரணம்? என்னவெல்லாம் நாம் செய்வது?

 

பிள்ளைகளை தூங்க வைப்பதென்பது, பெற்றோர்களின் வாழ்நாள் சாதனை என்று கூட சொல்லலாம். உண்மை தானே, அவர்கள் தூங்கும் நேரத்தில் தான் நம்மால் நிம்மதியாக தூங்க முடியும். அதிலும் தளிர்நடை போடும் பிள்ளைகள் செய்யும் சேட்டையை சொல்ல வார்த்தைகளே இல்லை. அவ்வளவு அழகாக குறும்புகளை செய்து நம்முடைய தூக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க முயல்வார்கள். இது குறித்த சுவாரஸ்யமாக விளக்குகிறது இந்த சிறப்பு பதிவு.

 

ஏன் இரவில் தூங்க பிள்ளைகள் அடம்பிடிக்கிறார்கள்?

1. தூக்கம் வராமல் இருத்தல்

இதற்கு பலவிதமான காரணங்கள் உள்ளது. அவை என்னவென்பதை நாம் இப்போது பார்ப்போம் வாருங்கள்.

தூங்குவதற்கு முன்னால் டிவி அல்லது மொபைல் பார்த்தல்

தூங்குவதற்கு முன்பாக சுறுசுறுப்புடன் விளையாடும் விளையாட்டுக்கள்

தூங்குவதற்கு முன்பு இனிப்பு அல்லது ஏதாவது கூல்டிரிங்க்ஸ் சாப்பிடுவது

சாக்லேட் போன்றவற்றை அதிகமாக சாப்பிடுவது

 

2. அசவுகரியம் காணப்படுதல்

அவர்களின் தூக்க சுழற்சியை அடிக்கடி மாற்றும்போதும் அவர்களால் தூங்க முடிவதில்லை. அதனோடு, ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு சென்றிருக்கும்போது அவர்கள் தூங்க சிரமம் கொள்கின்றனர். கீழ்காணும் காரணங்களும் அவர்களுடைய தூக்க சுழற்சியை பாதிக்கிறது. அவை,

  • வெளிச்சம் முகத்தில் அடித்தல்
  • சத்தம் கேட்டல்
  • அசவுகரியமான உடையை உடுத்தி இருத்தல்
  • காலநிலை மாற்றம் காரணமாக கடினம் கொள்ளுதல்

 

3. பயம் கொள்ளுதல்

நம்முடைய பிள்ளைகள் பலவீனமாக உணரும்போது பலவித கனவுகளும் அவர்கள் தூக்கத்தை ஆக்கிரமிக்கிறது. இதனால் தூங்கி திடீரென எழுந்து அழவும் வாய்ப்புள்ளது.

 

இதனை நாம் எப்படி தவிர்ப்பது?

1. நம்மை பார்த்து பிள்ளைகள் பழகும் பல விஷயங்களுள் தூக்கமும் ஒன்று. அதனால், நாம் அவர்களுக்கு தூங்குவதற்கான முன் மாதிரியை அமைத்து தர வேண்டும். நாம் தூங்காமல் செல் அல்லது டிவி பார்த்தால், அவர்களும் அதையே பின்பற்ற ஆசைக்கொள்வார்கள்.

2. நம்முடைய பிள்ளைகளை வெதுவெதுப்பான நீரில் குளிக்க வைத்தல் நல்ல தூக்கத்தை தர உதவும். அதேபோல இரவில் தூங்க செல்லும் முன்பு பல் துலக்கி விடுதல், அவர்களுக்காக ஒரு கதையை சொல்லி தூக்கத்தை வர வைத்தல் போன்ற செயல்பாடுகளை செய்யலாம்.

3. அவர்களை மாலை நேரங்களில் அருகில் உள்ள பூங்காவிற்கு அழைத்து சென்று விளையாட வைக்கலாம் அல்லது அவர்களை வீட்டிலேயே விளையாட வைக்கலாம். இரவு உணவுக்கு முன்பு வரை நாம் அவர்களை இப்படி சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ளும்போது சாப்பிட்ட உடன் தூங்கவே அவர்களுக்கு தோணும். சூரிய வெளிச்சம் அவர்களை பகலில் ஆரோக்கியமாக வைத்துக்கொண்டு, இரவில் அமைதியாக தூங்கவும் உதவுகிறது.

4. பிள்ளைகள் தூங்கும் இடத்திற்கு அருகில் டிவி, ஸ்மார்ட் போன்கள், டேப்லெட் போன்ற எந்தவொரு எலெக்ட்ரானிக் சாதனங்களும் இல்லை என்பதை உறுதி செய்யவும். அப்போது தான் இவற்றின் தொந்தரவு இல்லாமல் நம்முடைய பிள்ளைகளால் நிம்மதியாக தூங்க முடியும்.

5. அவர்கள் நிம்மதியாக தூங்க, தூங்குவதற்கு முன்னால் அவர்களின் மனதில் பாசிட்டிவ் எண்ணங்கள் நிரம்பி வழிய நாம் உதவ வேண்டும். தூங்குவதற்கு முன்பாக நாம் அவர்களுடன் சேர்ந்து கொஞ்ச நேரம் இனிமையான பாடல்களை கூட கேட்கலாம்.

6. அவர்கள் பாதுகாப்பாகவும், அமைதியாகவும் தூங்க அவர்களுக்கு போர்த்தும் போர்வையிலும் உடுத்தி இருக்கும் ஆடைகளிலும் கவனம் வேண்டும். அவர்கள் வாயில் வைக்கும் அளவிற்கு எதுவும் போர்வை மற்றும் ஆடைகளில் இல்லை என்பதை உறுதிசெய்துக்கொள்ளவும்.

7. இப்போது அவர்களை நம்முடனே தூங்க வைத்துக்கொள்ளலாம். இது தேவையற்ற கனவுகள் அதிகம் வராமல் பாதுகாப்பாக தூங்க அவர்களுக்கு உதவும்.

8. நன்றாக தற்போது தூங்கினால் தான் நாளை மீண்டும் ஆரோக்கியத்துடன் சுறுசுறுப்பாக விளையாட முடியும் என்பதை அவர்களுக்கு சொல்லி வளர்க்கலாம். இது நாளடைவில் நிச்சயம் அவர்கள் பழக்கத்துக்கு வர தொடங்கும்.

9. அவர்கள் தூங்குவதற்கு முன்பாக சாக்லேட், ஸ்வீட் போன்றவை கொடுப்பதை கட்டாயம் தவிர்க்கவும். இவை அவர்கள் தூக்கத்தை கெடுத்து, இரவில் விழித்திருக்க செய்துவிடும்.

 

பிள்ளைகளின் தூக்கம் குறித்து பல பயனுள்ள தகவலை நாம் அறிந்துக்கொண்டோம். உங்களுடைய பிள்ளைகளை தூங்க வைக்க நீங்கள் என்னவெல்லாம் செய்கிறீர்கள்? இதனை நீங்களும் சுவாரஸ்யமாக பகிர்ந்துக்கொள்ளலாமே. மீண்டும் ஒரு பதிவில் உங்களை சந்திக்கிறோம். நன்றி, வணக்கம்.

#babysleep
logo

Select Language

down - arrow
Personalizing BabyChakra just for you!
This may take a moment!