இந்த ஆர்டிக்களில், பிள்ளைகளை நாம் எதற்காக பாராட்ட வேண்டும்? இப்படி பாராட்டுவதனால் நமக்கு என்ன இலாபம்? கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன? என்பது குறித்து பார்க்கவிருக்கிறோம்.
பிள்ளைகள் சேட்டைகளை மட்டுமே செய்பவர்கள் அல்ல. இதனை கடந்து, பல நற்செயல்களையும் கற்றுக்கொண்டு செய்கிறார்கள். குழந்தை மனதுக்கு தீங்கு விளைவிக்க தெரியவே தெரியாது என்பதே உண்மை. அவர்கள் செய்யும் சேட்டைகள் யாவும் காலப்போக்கில் மாறிவிடும். ஆனால், மாறாமல் இருப்பது எது தெரியுமா? நாம் பிள்ளைகளை வளர்க்கும் விதம் தான். பிள்ளைகள் தவறு செய்தால் அவர்களை கண்டிக்க பெற்றோர்களாகிய நமக்கு உரிமை உண்டு. அதேபோல அவர்கள் நற்செயல் செய்தாலும் நாம் பாராட்ட வேண்டும். இதனால் அவர்கள் வாழ்க்கையை வாழ கற்றுக்கொண்டு வெல்லவும் முனைவர். இது குறித்த ஒரு சுவாரஸ்யமான தகவலை நாம் இப்போது காண்போம் வாருங்கள்.
“பிள்ளைகள் தூங்கினாலும் முத்தம் கொடுத்து குட் நைட் சொல்ல மறக்காதீர்கள்.”
நாம் நம்முடைய பிள்ளைகள் செய்யும் நற்செயல்களை பாராட்டி புகழும்போது அவர்களுக்கு ஒரு தன்னம்பிக்கை பிறக்கிறது. நல்லது எது? கெட்டது எது? என்பதை அறிந்து அதற்கு ஏற்ப வாழ பழகுவார்கள்.
எதெற்காகவெல்லாம் நாம் அவர்களை பாராட்டலாம்?
இது வயதை பொறுத்து மாறுபடும் ஒரு செயல்பாடாகும்,
- பிள்ளைகள், அவர்கள் நண்பர்களுடன் விளையாடும்போது, விளையாட்டு பொருட்களை பகிர்ந்து விளையாடினால் நாம் பாராட்டலாம்.
- பிள்ளைகள் நம்முடைய மொபைல் போனை பயன்படுத்தும்போது, ஒரு வரம்பை அமைத்து அந்த நேரத்திற்குள் கொடுக்க சொல்லுங்கள். அவர்கள் அந்த வரம்பை மீறாமல் சரியாக நடந்துக்கொண்டால் நாம் பாராட்டலாம்.
- விளையாடிவிட்டு சரியான நேரத்திற்கு அவர்கள் வந்தால் நாம் பாராட்டலாம்.
- வீட்டு பாடங்களை அவர்கள் சரியாக முடித்து டீச்சரிடம் வெரி குட் வாங்கினால் அப்போது பாராட்டலாம்.
- அவர்கள் மாற்றிக்கொள்ள வேண்டுமென நாம் நினைக்கும் பழக்கத்தை அவர்கள் மெல்ல மாற்றிக்கொள்ள முயன்றாலும் நாம் பாராட்டலாம்.
- நமக்கு தொந்தரவு எதுவும் தராமல் அவர்கள் விளையாட்டு சாமான்களை எடுத்துவைத்துக்கொண்டு தானாக விளையாடினாலும் நாம் அவர்களை பாராட்டலாம்.
இப்படி பாராட்டுவதனால் நமக்கு என்ன இலாபம்?
- எதுவாக இருந்தாலும் மறைக்காமல் நம்மிடம் வந்து சொல்ல தொடங்குவார்கள்.
- நம்மீது நம்பிக்கை அவர்களுக்கு அதிகமாக வர தொடங்கும்.
- பிரச்சனையை கண்டு அஞ்சாமல் அதற்கான தீர்வை தேட தொடங்குவர்.
- பிரச்சனைகளை அமைதியாக தீர்க்க ஆசைக்கொள்வர்.
- இதுபோல இன்னும் நிறைய பாராட்டுகளை உங்களிடமிருந்து பெற வேண்டுமென்பதற்காகவே நல்ல விஷயங்களை செய்துக்கொண்டே இருப்பர்.
- தன்னம்பிக்கையை பல மடங்கு வளர்த்துக்கொண்டு வாழ்வில் வலம் வருவர்.
பாராட்டும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் எவை?
- அவர்களை எக்காரணம் கொண்டும் பொய்யாக பாராட்ட கூடாது. நேர்மையாக, மனதார பாராட்டுவதையே நம்முடைய பிள்ளைகள் விரும்புவார்கள்.
- பாராட்டும்போது, ஒரு வார்த்தையுடன் முடித்துவிடாமல், அதனை குறித்து விளக்கி பாராட்ட முயலலாம். அப்போது தான் நாம் எதற்காக அவர்களை பாராட்டுகிறோம் என்பதை அவர்கள் புரிந்துக்கொள்வர்.
- அவர்களை பாராட்டும்போது வெற்றியை கருத்தில் கொண்டு மட்டுமே பாராட்டக்கூடாது. மாறாக, அவர்கள் அந்த செயலை கஷ்டப்பட்டு செய்து வெற்றிக்கனியை சுவைக்க முடியவில்லை என்றாலும், அவர்களின் முயற்சியை நாம் பாராட்ட வேண்டும்.
- பாராட்டும்போது இன்னொருவருடன் ஒப்பிட்டு அவர்களை பாராட்டக்கூடாது. நம்முடைய பிள்ளைகளின் திறமையை மட்டுமே குறித்து நாம் பாராட்ட வேண்டும்.
- எளிதான காரியங்களை அவர்கள் செய்து முடிக்கும்போது, அளவுக்கு அதிகமாக பாராட்டி, அவர்கள் தன்னம்பிக்கையை கெடுக்க கூடாது. அது முற்றிலும் செயற்கை தனமாய் தெரிய, அவர்கள் பாராட்டை வெறுக்கவே செய்துவிடவும் கூடும்.
இந்த ஆர்டிக்கல் உங்களுக்கு பிடித்திருந்தால் லைக் பண்ணுங்க, ஷேர் பண்ணுங்க, கமெண்ட் பண்ணுங்க.
மீண்டுமொரு பயனுள்ள பதிவில் உங்கள் அனைவரையும் சந்திக்கிறோம். நன்றி, வணக்கம்.
_m_36_60 #3years #b _m_36_60 #tamilbabychakra #babychakraparenting #activeparenting #badparenting