கருக்குழாய் (fallopian tube) கர்ப்பம்

கருக்குழாய் (fallopian tube) கர்ப்பம்

11 Feb 2020 | 1 min Read

Komal

Author | 138 Articles

நிறைய பெண்களுக்குக் குழப்பத்தையும், கலக்கத்தையும் தருகிற விஷயமாகவே இது இருக்கிறது. நீண்ட காலமாகக் கர்ப்பம் தரிக்காமல் இருந்துவிட்டு, திடீரென கர்ப்பம் உண்டான மகிழ்ச்சியில் மருத்துவரிடம் சென்று சோதித்துப் பார்த்தால் அவர்களுக்குக் கருக்குழாயில்  கர்ப்பம் தரித்திருக்கும். அந்தக் கர்ப்பத்தைத் தொடர விட முடியாது என்று கலைக்கச் சொல்லி மருத்துவர் அறிவுறுத்துவார்.

 

கருக்குழாயில்தானே கர்ப்பம் தரிக்கும்? இதைக் கலைத்துவிட்டால் மீண்டும் அதே இடத்தில்தானே கரு உண்டாகும்? அதில் என்னதான் பிரச்னை என ஆயிரம் கேள்விகளுடன் கலங்கி நிற்பதைப் பார்க்க முடிகிறது. கருக்குழாய் கர்ப்பம் ஆரோக்கியமானதில்லை…’’ என்கிறார் மகப்பேறு மருத்துவர். அதற்கான காரணங்கள் இதோ:

 

எல்லா பெண்களுக்கும் கரு இணைக் குழாயில்தான் கரு உருவாகும். இயற்கையாக கரு உருவாக, கரு இணைக்குழாய் எனும் ஃபாலோப்பியன் டியூபுகள் அடைப்பின்றியும், நோய் தொற்று இன்றியும், ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியம். கருக்குழாய் முழுவதும் அடைத்திருந்தால், பெண்ணின் சினை முட்டையும், ஆணின் உயிரணுவும் இணைய வாய்ப்பே இல்லை. ஆனால், பாதி அடைப்பாக இருந்தால், ஆண் / பெண் அணுக்கள் இணைந்த பின் வளர ஆரம்பிக்கும்.

 

சாதாரணமாக இணைந்த கரு, உடனடியாக கருப்பைக்குள் வந்து சேர்ந்து வளர ஆரம்பிப்பதில்லை. கரு உருவாகி, நான்கைந்து நாட்கள் கழித்துதான் கருக்குழாயில் உருட்டப்பட்டு, கருப்பைக்குள் வந்து சேர்கிறது. இந்த நான்கைந்து நாட்களில், கருவானது 16 செல் அளவுக்கு வளர்ந்திருக்கும். கருக்குழாய் பாதி அடைத்திருந்தால், அதாவது அதனால் நகர்ந்து செல்ல முடியாத அளவுக்கு அடைப்பிருந்தால் கருக்குழாயிலேயே தங்கி வளர ஆரம்பிக்கும்.

 

மெல்லியதான இந்த கரு இணைக்குழாய், கருவின் சில நாள் வளர்ச்சியை மட்டுமே தாங்கும். வேகமாக வளர ஆரம்பிக்கும் கரு, கருக்குழாயைக் கிழித்து வெடிக்கச் செய்யும். இந்த நேரத்தில் சம்பந்தப்பட்ட பெண்களுக்கு வயிற்று வலி வந்ததும், அதையடுத்து அறுவை சிகிச்சை செய்யப்படலாம்.

 

இப்போது எதற்கு இத்தனை வியாக்கியானம் என்கிற பெண்களும் இருக்கிறார்கள். நாம் நம் மொபைல் போனை பற்றித் தெரிந்து வைத்திருக்கிற அளவுகூட, நம் உடம்பில் ஒவ்வொரு மாதமும் நிகழ்கிற மாற்றம் பற்றியோ, குழந்தை என்கிற அற்புதம் உருவாகி வெளியாவது பற்றியோ தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவதில்லை.

 

சில பெண்களுக்கு வயிற்றைக் கிழித்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருக்கும். கருக்குழாய் பழுதடைந்த நிலையில், வேறு வழியின்றி அதை அகற்றியிருப்பார்கள். இன்னொரு கருக்குழாய் எந்தளவுக்கு ஆரோக்கியமாக உள்ளது என்பதை முதலில் பார்க்க வேண்டும்.

ஆதாரம்: marriage

ஒவ்வொரு பெண்ணுக்கும் இயற்கையான முறையில் கருத்தரிக்க, ஒரு கருக்குழாய் ஆரோக்கியமாக இருந்தாலே போதும். இரண்டில் ஒரு கண் பழுதடைந்தாலோ, இரண்டில் ஒரு கையோ, காலோ சரியில்லாமல் போனாலோ, நன்றாக உள்ள இன்னொன்றை வைத்து நாம் சமாளிப்பதில்லையா? அந்த மாதிரி அற்புதம்தான் இதுவும். ஆனால், சிலருக்கு அடுத்த கர்ப்பமும், இதே போல கருக்குழாயிலேயே உருவாக 50 சதவிகித வாய்ப்புகள் உண்டு. லேப்ராஸ்கோப்பி மூலம், அந்த இன்னொரு கருக்குழாயில் பாதி அல்லது முழு அடைப்பு இருக்கிறதா, நோய் தொற்று இருக்கிறதா என எல்லாவற்றையும் கண்டறியலாம்.

 

மிகக் குறைவான அடைப்பு மாதிரியான சின்ன கோளாறுகளை ‘டயக்னாஸ்டிக் ஹிஸ்ட்ரோ லேப்ராஸ்கோப்பி’ எனப்படுகிற மைனர் ஆபரேஷன் மூலம் சரியாக்கலாம். தேவைப்பட்டால் ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொண்டுள்ள கருக்குழாய்களைப் பிரித்து விடுவதற்கான பிரத்யேக சிகிச்சையும் மேற்கொள்ளப்படும். கருக்குழாய் அடைப்பை 50 சதவிகிதம் லேப்ராஸ்கோப்பி சிகிச்சை மூலம் சரியாக்க முடியும். எல்லாவிதமான அடைப்புகளையும் அப்படிச் செய்ய முடியாது. அடைப்பு அதிகமாக இருந்தால், சோதனைக் குழாய் முறையில் குழந்தை பெற்றுக் கொள்கிற முயற்சிதான் ஒரே தீர்வு. இளவயதுப் பெண்களுக்கு இம்முறையில் 70 சதவிகிதம் வெற்றி வாய்ப்பு உண்டு.

 

எனவே, கருக்குழாயில் கர்ப்பம் தரித்துக் கலைத்தவர்கள், உடனடியாக அடுத்த கருக்குழாயின் ஆரோக்கியத்தைத் தெரிந்து கொண்டு, அது நன்றாக இருக்கும் பட்சத்தில் 6 மாத காலம் காத்திருந்து, கருத்தரிக்கலாம்.

 

ஆதாரம்: தினகரன்

பரிந்துரைத்தவர் :healthline

#momhealth

A

gallery
send-btn

Related Topics for you