உங்கள் மனைவி கருவுற்றிருக்கிறாரா?

உங்கள் மனைவி கருவுற்றிருக்கிறாரா?

11 Mar 2020 | 1 min Read

Komal

Author | 138 Articles

ஒரு ஆணும் பெண்ணும் திருமணம் என்னும் அழகிய பந்தத்தில் இணைகின்றனர். பின் அவர்களின் இனிய இல்லறத்தின் பயனாக இருவரும் அடுத்த கட்டத்தை அடைகின்றனர். ஆம்! அது தாய் தந்தை என்னும் பதவியே தான். தான் தாய்மை அடைந்ததை எண்ணி அந்தப் பெண் அடையும் நெகிழ்ச்சியும், தான் தந்தையாகப் போகின்ற செய்தியை எண்ணி அந்த ஆண் அடையும் களிப்பையும் எத்தனை வார்த்தைகளைக் கொண்டும் சொல்லி விட முடியாது.  

ஒரு மனைவி கருவுற்றிருக்கும் சமயத்தில் அவளது கணவனின் பங்கு சாதாரணமானது இல்லை. ஒரு கணவனாக,தந்தையாக அந்த ஆண் மகனின் பொறுப்பும் கடமையும் மிக அதிகம். ஒரு பெண் தன் குழந்தையைக் கருவறையில் சுமக்கின்றாள். ஆனால் ஒரு ஆண் தன் குழந்தையை மனதில் சுமக்கின்றான். அவனது ஒவ்வொரு எண்ணமும் தன் மனைவியும் குழந்தையும் நலமுடன் இருக்க வேண்டும் என்பதுவே. சுருங்கச் சொல்வதானால் தன் மனைவி நல்லபடியாகக் கருவில் உள்ள குழந்தையைப் பிரசவித்து மீண்டு எழும் வரை அவன் தன் உயிரைக் கையில் பிடித்தபடி தான் இருப்பான். 

கணவன் அமைவதும் இறைவன் தந்த வரம் 

சில சமயங்களில் எல்லா கணவன்மார்களும் மேலே குறிப்பிட்டது போல இருந்து விடுவதில்லை. கர்ப்பிணி மனைவிகளின் உணர்வுகளை சரியாகப் புரிந்து கொள்ளத் தெரியாமலும், கையாளத் தெரியாமலும் தடம் மாறியும் நடக்கின்றனர். இதனால் குழந்தையைச் சுமந்து கொண்டிருக்கும் பெண் மனதளவில் உடைகிறாள். இது தாய்சேய் ஆரோக்கிய நலனையும் பாதித்து விடுகிறது. அதனாலே கணவன் அமைவதும் இறைவன் தந்த வரம் என்ற கோணத்திலே விசயத்தை அணுக வைக்கின்றது. குடும்பம் என்பது என்ன, ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து அன்போடும் மகிழ்ச்சியோடும் வாழ்வது தானே! 

அதனால் பொதுவாக ஒரு கணவனாக உங்கள் கர்ப்பிணி மனைவிக்கு நீங்கள் பல வகையில் உறுதுணையாகவும், பக்கபலமாகவும்  இருக்கலாம்.அதற்குக் கணவன்மார்களே! உங்களுக்கு நிறையவே யோசனைகள் தேவைப்படலாம். இந்தப் பதிவில் உங்கள் கர்ப்பிணி மனைவிகளுக்கு எப்படி எல்லாம் உதவலாம் என்ற குறிப்புகளை வழங்கியுள்ளோம். 

கர்ப்பிணி மனைவிகளுக்கு உதவ கணவன்மார்களுக்கு 10 அழகான யோசனைகள் 

1. மனநிலையைப் புரிந்து கொள்ளுங்கள் 

 

கர்ப்பமாக இருக்கும் பெண்ணின் மனநிலை எப்போதும் ஒரே மாதிரியாக இருக்காது. சில சமயம் அளவுக்கு அதிகமாக மகிழ்ச்சி கொள்வர்.சில வேளைகளில் கடும் கோபம் கொள்வர். ஏன் காரணமே இல்லாமல் விரக்தி அடைவர். இதை ஆங்கிலத்தில் ‘மூட் ஸ்விங்’ என்பர். இந்த மனநிலை மாற்றங்களுக்குச் சுரப்பிகளின் ஏற்ற இறக்கங்களே காரணம். ஆக ஒரு கணவனுக்குக் கர்ப்பவதியாக உள்ள தன் மனைவியின் மனநிலை மாற்றம் குறித்த புரிதல் மிக மிக அவசியம். உங்கள் கரிசனமும், அன்பும் உங்களது மனைவியின் மனதை இதமாக்கும் கருவிகள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

 

2.மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள் 

உங்கள் மனைவி மருத்துவ ஆலோசனை பெற ஏற்ற பெண் மருத்துவரைத் தேர்வு செய்யுங்கள். கூடுதலாக வீட்டின் அருகாமைப் பகுதியில் உள்ள தரமான மருத்துவமனையாக அது இருக்கும் பட்சத்தில் இன்னும் நல்லது. உங்கள் மனைவியின் பிரசவ நேரத்தில் இது சௌகரியமான சூழலை ஏற்படுத்தும். கணவன்மார்களே உங்கள் கர்ப்பிணி மனைவிகளுக்குச் சரியான நேரத்தில் மருத்துவ பரிசோதனைகள் அவசியம். அதனால் சரியான நேரக் குறிப்பெடுத்து அவர்களை அன்போடு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது உங்களின் மிக முக்கிய கடமையாகும்.

 

3.சமையல்/வீட்டு வேலைகளில் உதவி

உங்கள் கர்ப்பிணி மனைவிகளால் எல்லா வீட்டு வேலைகளையும் தனியாகச் செய்ய இயலாது. இந்த சமயத்தில் அவர்கள் நிச்சயம் மற்றவர்கள் உதவியை எதிர்பார்ப்பார்கள். அவர்கள் உரிமையோடு உதவி கேட்கும் நபர்களில் நீங்கள் முதலிடத்தில் உள்ளீர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டும் இல்லாமல் சமையல் செய்யும் போது சில பொருட்களின் நெடி அவர்களுக்குப் பிடிக்காமல் குமட்டல் உணர்வைப் பெற்றுச் சிரமப்படுவார்கள். இந்த சமயத்தில் நீங்கள் சமையலில் சற்று உதவிகரமாக இருந்து உங்கள் மனைவிக்கு கை கொடுக்கலாம். 

 

4.நடைப்பயிற்சி மற்றும் எளிய யோகாசனங்கள் 

கர்ப்பிணிப் பெண்களுக்குச் சரியான வழிகாட்டுதலும், உந்துதலும் குடும்பத்திலிருந்து கிடைக்க வேண்டும். அவர்கள் தேவையான ஆரோக்கிய மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டால் மட்டுமே சுகப் பிரசவம் நடைபெறும். அதற்காகத் தினம் உங்கள் மனைவியை மாலை நேரத்தில் நடைப்பயிற்சிக்கு அழைத்துச் செல்லலாம். அதே மாதிரி காலை நேரத்தில் உரிய யோகா ஆசிரியரிடம் கற்று அறிந்த பிரசவ கால பயிற்சிகளைக் கண்ணும் கருத்துமாகச் செய்ய உங்கள் அன்பு மனைவியை ஊக்கப்படுத்தலாம்.

 

5.சண்டை கூடாது

சராசரியாகக் கணவன் மனைவிகளால் தினம் ஒரு சண்டையாவது போடாமல் இருக்க முடியாது. ஆனால் கருவுற்றிருக்கும் காலத்தில் பெண்கள் இதமான மகிழ்ச்சியான  மனநிலையோடு இருப்பது தாய்சேய் நலத்திற்கு இன்றியமையாதது. ஆகக் கணவன்மார்கள் சற்று எச்சரிக்கையாக இருந்து சண்டை வராமல் தவிர்க்க வேண்டும்.

 

6.மனைவி உண்ணும் உணவு

கர்ப்பிணிப் பெண்களுக்கு பல்வேறு ஊட்டச்சத்துகள் அவசியம். குறிப்புக்காகப் பிரசவ நேரச் சிக்கல் வராமல் இருக்க இரும்புச் சத்து அதிகம் தேவை. அதனால் தினம் வேலை முடிந்து நீங்கள் வீட்டிற்குத் திரும்பும்போது காய்கனிகள், கீரைகள், பருப்பு வகைகள் என்று அட்டவணைப் போட்டு உங்கள் மனைவிக்கு தவறாமல் வாங்கி வாருங்கள்.

 

7.காது கொடுத்துக் கேளுங்கள்

கர்ப்பிணிப் பெண்களுக்கு திடீர் திடீரென எதாவது ஆசை வரும்.திடீரென புளிப்பான மாங்காய் வேண்டும் என்பார்கள். உடனே கோவிலுக்குப் போக வேண்டும் என்று கெஞ்சுவார்கள். எப்போதோ வந்த திரைப்படத்தை நினைவு கூர்ந்து பார்க்க வேண்டும் போல உள்ளது என்பார்கள். தூரத்துக் கிராமத்தில் வசிக்கும்  பாட்டி வீட்டிற்குப் போக வேண்டும் என்பார்கள். என்ன கணவன்மார்களே! கேட்கவே பயமாக உள்ளதா? ஆமாம் இது நிச்சயம் உங்கள் பொறுமைக்கான பரீட்சைக் காலம்தான்.இயன்றவரை அவர்கள் ஆசைகளைப் பூர்த்தி செய்யுங்கள்.

 

8.அருகாமை

ஒரு கணவனாக உங்கள் அருகாமையை உங்கள் கர்ப்பிணி மனைவி அதிகம் எதிர்பார்ப்பார்கள். அவர்களுக்குப் பாதுகாப்பு உணர்வு அவசியமாகத் தேவைப்படும். உங்கள் அன்பான பார்வைகளும், தலை கோதல்களும், சின்ன தழுவல்களும் உங்கள் மனைவியின் மனதை விவரிக்க முடியாக அளவு பரவசப்படுத்தும் என்பது உண்மை. கூடுதலாக உங்கள் குழந்தை கருவறையில் செய்யும் குறும்புகள் அதிகம். உதாரணமாக உதைப்பது, இடம் மாறுவது என்று அடுக்கலாம். அதைப் பற்றி எல்லாம் உங்கள் மனைவி உங்களிடம் பகிர்வதோடு  நிறுத்தாமல் அந்த ஆனந்தத்தை உங்களையும் அடையச் செய்வர்.ஒரு அப்பாவாக நீங்கள் அந்த சுகங்களை அனுபவிக்கத் தயாராக இருங்கள்.

 

9.திட்டமிடுதல் 

பொதுவாக மனைவி கர்ப்பம் தரித்த தகவல் அறிந்ததுமே கணவன் மனைவி பல விதமான திட்டங்களைப் போடத் தொடங்கிவிடுவர். உதாரணமாகக் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம்? குழந்தைக்கு ஏற்றவாறு எப்படி அறையைத் தயார் செய்யலாம்? எந்த இடத்தில் தொட்டில் போடலாம்? என்ன ஆடை வாங்கலாம்? என்று பட்டியல் நீண்டு கொண்டே போகும். ஆக இந்த விசயத்தில் நீங்கள் அழகான யோசனைகளை உங்கள் மனைவிக்கு அளித்து மிகவும் நல்ல கணவர் என்ற பட்டத்தை வாங்கிக் கொள்ளலாம்.

 

10.அச்சத்தைப் போக்குங்கள் 

உங்கள் மனைவி நிறைமாதத்தைத் தொட்டவுடன் அவர்களுக்குத் தானாகவே பிரசவ அச்சம் வந்துவிடும். ஒரு நல்ல கணவனாக நீங்கள் நிறைய நம்பிக்கைகளை வழங்க வேண்டும். நிச்சயம் உனக்குச் சுகப்பிரசவம் நடக்கும். எப்போதும் நான் உனக்குத் துணை இருப்பேன் என்பன போன்ற நேர்மறை வார்த்தைகளை உங்கள் மனைவியின் மனதில் பதிய வைக்க வேண்டும். இந்த விசயம் உங்கள் மனைவிக்கு மட்டும் உங்கள் குழந்தைக்கும் நன்மைப் பயக்கும். இது அப்பாவாகிய உங்கள் கடமையும் கூட!

 

புதுவரவை எதிர்நோக்கி இருக்கும் எல்லா அப்பாக்களுக்கும் தங்கள் கருவுற்றிருக்கும் மனைவிகளுக்கு உதவ இந்த 10 குறிப்புகளும்  மிகவும் பயனுள்ளதாக இருந்திருக்கும் என்று நம்புகிறோம்.இனி என்ன உங்கள் மனைவிகளை மகிழ்ச்சிப்படுத்த உடனே எல்லா வகையிலும் செயலில் இறங்குங்கள்.

#momhealth

A

gallery
send-btn

Related Topics for you

Suggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.