2 Oct 2021 | 1 min Read
Medically reviewed by
Author | Articles
கர்ப்ப காலம் என்பது ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் வசந்த காலமாகும். ஆனால், ஒரு பெண் கர்ப்பம் தரித்துள்ளாரா இல்லையா என்பதை அவருடைய மாதவிடாயே முடிவு செய்கிறது. ஆம், ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் தள்ளி சென்றால், அவளுக்கு அதை விட ஒரு சந்தோஷமான செய்தி வேறெதுவும் இருக்காது. தன் கணவனிடம் சென்று, ‘என்னங்க, எனக்கு பீரியட்ஸ் தள்ளி போகுது.’ என சொல்லும்போது அவள் முகத்தில் பொங்கும் சிரிப்பை வார்த்தைகளால் வர்ணிக்கவே முடியாது. இந்த ஒரு அறிகுறி மட்டுமே கர்ப்பத்தை முடிவு செய்துவிடுகிறதா என்ன? இல்லை, நிச்சயமாக இல்லை. வேறு என்னவெல்லாம் அறிகுறிகள் தென்படும் என்பதை இந்த பதிவின் மூலம் படித்து நாம் பயன் பெறுவோம் வாருங்கள்.
கர்ப்பமாக இருப்பதற்கான அறிகுறிகள் என்னென்ன?
1. மாதவிடாய் தள்ளி செல்வது:
ஒரு பெண்ணுக்கு ஒழுங்கான முறையில் மாதவிடாய் வந்திருந்தாலும், ஒழுங்கற்ற முறையில் வந்திருந்தாலும் கர்ப்பமாக இருக்கும்போது கண்டிப்பாக நின்றுவிடும். இது தான் ஒரு பெண் கர்ப்பமாக இருப்பதற்கான முதல் அறிகுறி.
2. மார்பகம் மென்மையடைதல், வீங்குதல்:
ஹார்மோன் மாற்றங்களின் காரணமாக கர்ப்பமாக இருக்கும் பெண்ணின் மார்பகம் மென்மை அடைந்து வீங்கி காணப்படுகிறது. இது அசவுகரியமான உணர்வை தந்தாலும், சில வாரங்களில் சரியாகிவிடும்.
3. குமட்டல்:
இது பெரும்பாலான கர்ப்பிணிகளுக்கு மிகவும் அவுகரியத்தை தரும் ஒன்றாகும். ஒரு சில கர்ப்பிணிகளுக்கு வாந்தியுடன் கூடிய குமட்டல் உணர்வும் இருக்கும். இரவு பகல் பாராமல் இருக்கும் இந்த பிரச்சனைக்கு, கணவன்மார்களும் கைக்கொடுப்பது சிறந்த விஷயமாக இருக்கும் என ஒவ்வொரு கர்ப்பிணி பெண்ணும் ஏங்குவர் என்பதே உண்மை. இருப்பினும், 14 வாரங்களில் இப்பிரச்சனை குறையக்கூடும். ஒரு சிலருக்கு இறுதி வரையும் கூட இப்பிரச்சனை இருக்கவும் செய்கிறது.
4. சிறுநீர் கழிக்க வேண்டுமென்ற உணர்வு:
வழக்கத்திற்கு மாறாக சிறுநீர் கழிக்க வேண்டிய எண்ணம் வரும். நம்முடைய உடலில் உள்ள இரத்தமானது கர்ப்பமாக இருக்கும்போது அதிகரிக்க செய்கிறது. இதனால், சிறுநீர்ப்பையில் கூடுதல் திரவம் சுரந்து சிறுநீர் கழிக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்துகிறது.
5. உடல் சோர்வு:
உடல் சோர்வும் இந்த நேரத்தில் அதிகமாக இருக்கும். எனவே கர்ப்பிணிகள் அதிகம் தண்ணீர் குடிப்பதை உறுதிசெய்ய வேண்டும். இந்த சமயம் அதிகம் ஓய்வில் இருக்க வேண்டுமென்ற எண்ணம் நமக்கு வரும்.
6. முதுகு வலி வருதல்:
மாதவிடாய் சமயத்தில் வருவது போல, ஆரம்ப கால கர்ப்பத்தின் போதும் முதுகு வலி உண்டாகும். இதற்கு காரணம் ஹார்மோன்களில் ஏற்படும் மாற்றம் தான்.
7. தலைவலி:
முதல் மூன்று மாதங்களில் தலைவலி வருவது கர்ப்பக்காலத்தில் பொதுவான பிரச்சனை தான். இது இரண்டாவது மூன்று மாதங்களும் தொடரவும் வாய்ப்பிருக்கிறது. எனவே, போதுமான ஓய்வு உங்களுக்கு மிகவும் அவசியம்.
மற்ற கர்ப்பக்கால அறிகுறிகள் என்னென்ன தெரியுமா?
மேல்காணும் பொதுவான அறிகுறிகளை தவிர்த்து ஒரு சிலருக்கு பார்க்கவிருக்கும் அறிகுறிகளும் காணப்படும். அவை,
உணர்ச்சிவசப்படுதல்:
ஹார்மோன் மாற்றம் காரணமாக இந்த சமயத்தில் ஒரு சிலர் அளவுக்கதிகமாக உணர்ச்சிவசப்படவும் செய்வார்கள். இப்போது உணர்ச்சி வசப்படுவது கர்ப்பக்காலத்தில் வரக்கூடிய ஒரு பொதுவான பிரச்சனை தான் என்பதால் பயப்பட தேவையில்லை.
உப்பி காணப்படுதல்:
ஹார்மோன் மாற்றம் காரணமாக இப்பிரச்சனை இருப்பது பொதுவான ஒன்று தான். இது கிட்டத்தட்ட மாதவிடாய் ஆரம்பிக்கும்போது இருப்பது போலவே இருக்க செய்யும்.
லேசான இரத்தக்கசிவு:
கர்ப்பமாக இருக்கும்போது அதன் அறிகுறியாக லேசான இரத்தக்கசிவு இருக்கக்கூடும். இதனை கரு உட்பதியும் முறை என அழைப்பர். கருவுற்ற முட்டையானது 10 முதல் 14 நாட்களில் கருப்பையில் பதியும். அவ்வாறு கருவானது பதியும்போது இரத்தக்கசிவு இருக்கும். ஆனாலும் இப்பிரச்சனை எல்லா பெண்களுக்கும் இருப்பதுமில்லை.
கருப்பைப்பிடிப்பு:
கர்ப்பத்தின் ஆரம்ப நிலையில் ஒரு சில பெண்களுக்கு லேசான கருப்பை பிடிப்பும் இருக்கக்கூடும்.
மலச்சிக்கல்:
ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக நம்முடைய செரிமான குழல், மெதுவாக செயல்பட தொடங்கும். இதனால் மலச்சிக்கல் உண்டாகிறது.
உணவை வெறுத்தல்:
நீங்கள் கர்ப்பமாக இருக்கும்போது, இதுவரை பிடித்த உணவுகளும், அதன் சுவைகளும் கூட பிடிக்காமல் போக வாய்ப்புள்ளது. குறிப்பாக, இது ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக நிகழ்கிறது.
மூக்கடைப்பு பிரச்சனை:
ஹார்மோன் அளவு அதிகரிப்பதாலும், இரத்தம் உற்பத்தி ஆவதாலும் உங்கள் மூக்கானது வீங்கி வறண்டு போய் இருப்பது போல இருக்கவும் கூடும். இதனால் மூக்கு ஒழுகுவது போன்ற உணர்வு உங்களுக்கு ஏற்படலாம்.
இவை கர்ப்பமாக இருப்பதற்கான அறிகுறிகளாக மட்டுமே இருக்க வேண்டுமென அவசியமும் இல்லை. ஒருவேளை உங்கள் உடல் நலன் சரியாக இல்லாத காரணத்தினாலும் இது போன்ற அறிகுறிகள் உண்டாகக்கூடும். இருப்பினும், மாதவிடாய் தள்ளி சென்று இது போன்ற அறிகுறிகளை நீங்கள் காண்கிறீர்களா? உடனே, கிட் வாங்கி டெஸ்ட் செய்து பார்க்கவும் அல்லது டாக்ரிடம் செல்லவும். ஒரு சிலருக்கு அறிகுறிகள் அற்ற கர்ப்பமும் இருக்கலாம்.
ஒருவேளை உங்களது ஹோம் பிரெக்னென்சி டெஸ்ட்டில் பாசிட்டிவ் என வந்தால், உடனடியாக மருத்துவரை அணுகி உறுதி செய்துக்கொள்ளவும்.
எது எப்படியோ! அனைவருக்கும் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
A
Suggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.