பிரசவத்தின் போது நஞ்சுக்கொடி முந்தி வருதல் பற்றிய பயனுள்ள தகவல்

cover-image
பிரசவத்தின் போது நஞ்சுக்கொடி முந்தி வருதல் பற்றிய பயனுள்ள தகவல்

தோழிகளே, கர்ப்பமாக இருக்கும்போது நம்முடைய மனதில் பயமும், குழப்பமும் ஏற்படுவது உண்மை தான். ஆனால், ஒன்றே ஒன்றை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அது தான் தைரியம். எந்தவொரு அழகிய தருணமும் எளிதில் நமக்கு கிடைத்துவிடாது. அப்படி இருக்க, பிள்ளைகளால் மட்டும் எப்படி எளிதில் பிறந்துவிட முடியும்.

இத்தனை நாள் இருட்டறையில் (கருவறையில்) இருந்தவர்கள், உங்களின் குரலை மட்டுமே கேட்டிருப்பார்கள். நீங்கள் காட்டும் பாசத்தை உணர்ந்திருப்பார்கள். உங்களை காண ஆவலாகவும் இருப்பார்கள். அவர்களை பயத்தோடும், பதட்டத்தோடும் நாம் வரவேற்பது எப்படி சரியான ஒன்றாக இருக்கும்.

பத்து மாதம் நாம் பாதுகாப்பாக இருப்பதனால், பத்தே நிமிடத்தில் அந்த அழகிய பாதத்தையும், கைகளையும் காணவிருக்கிறோம். அந்த அழகிய சிரிப்பை ரசிக்க இருக்கிறோம். நம்முடைய உலகத்தையே நாம் காண போகிறோம். அந்த ஒரு சந்தோசம் நமக்கு போதாதா என்ன?

நஞ்சுக்கொடி முந்தி வருதல் நிச்சயம் ஒரு பிரச்சனையே இல்லை. நாம் முறையாக செக்கப் சென்று, பிள்ளையின் ஆரோக்கியத்தையும், நம் உடல் நார்மலாக இருக்கிறதா என்பதையும் தெரிந்துக்கொண்டே வந்தால், எதற்கும் அஞ்ச வேண்டிய அவசியமே இல்லை. இருப்பினும், நஞ்சு கொடி முந்தி வருதல் என்பது பற்றிய பயனுள்ள தகவலை நாம் இந்த பதிவின் மூலம் தெரிந்துகொண்டு, பாதுகாப்பாக இருப்போம் வாருங்கள்.

 

பிளென்செண்டா பிரெவியா:

இதை தான் நாம் நஞ்சுக்கொடி முந்தி வருதல் என தமிழில் அழைக்கிறோம். அதாவது கர்ப்பப்பை வாயை நஞ்சுக்கொடியானது மறைத்து விடுகிறது. இதனால் இரத்தம் அதிகம் வெளியாக வாய்ப்பிருக்கிறது. ஒருவேளை நஞ்சுக்கொடி கர்ப்பப்பைவாயை மறைத்து இருப்பதை மருத்துவர்கள் கண்டால், முன் கூட்டிய பிரசவத்துக்கு ஏற்பாடு செய்வார்கள். இந்த நிலையின்போது சுகப்பிரசவம் சிரமம் என்பதால், சிசேரியன் உதவியுடன் பிள்ளைகள் பாதுகாப்பாக பிறக்கின்றனர்.

 

இதற்கான அறிகுறிகள் எப்படி இருக்கும்?

1. கர்ப்பமாக இருக்கும்போது மூன்றாவது மூன்று மாதங்களில் அதிகமான இரத்தப்போக்கு இருக்கலாம். இது வலியில்லாமலும் நமக்கு வரக்கூடும்.

2. நம்முடைய கருப்பை இறுக்குவது போல உணர்வோம். அதோடு முதுகில் அதிகமான அழுத்தத்தையும் நாம் உணர செய்ய வாய்ப்புள்ளது.

3. ஒரு சிலருக்கு இரத்தபோக்கின் காரணமாக இரத்தம் குறைவாக இருத்தல், மூச்சு விடுவதில் சிரமம், இரத்த அழுத்தம் குறைந்து காணப்படுதல் போன்ற பிரச்சனைகளும் இருக்கலாம்.

 

எப்போது இதுபோல் நடக்க வாய்ப்புண்டு?

  • 35 வயதிற்கு மேல் கர்ப்பமாக இருக்கும்போது
  • ஏற்கனவே கர்ப்பமாக இருந்திருந்தால்
  • ஏற்கனவே நமக்கு சிசேரியன் நடந்திருந்தால்
  • கர்ப்பப்பையில் ஏற்கனவே ஏதேனும் அறுவை சிகிச்சை செய்திருந்தால்
  • ஒன்றுக்கும் மேற்பட்ட பிள்ளைகள் நம் வயிற்றில் இருந்தால்

இது போன்று ஏற்படலாம்.

 

எப்படி கண்டறியப்படும்?

உங்களின் கர்ப்ப கால செக்கப்புகளில் இது கண்டறியப்படும். ஒலி அலைகளை பயன்படுத்தி நஞ்சுக்கொடியின் நிலை கணக்கிடப்படுகிறது.

 

இதனை எப்படி குணப்படுத்துவது?

இதனை குணப்படுத்த எந்தவொரு மருத்துவமும் இல்லை. ஆனால், இதனால் வெளியாகும் அதிகப்படியான இரத்தப்போக்கை மருத்துவர்கள் குறைத்து பிரசவ தேதியை தாமதப்படுத்த செய்கின்றனர்.

டாக்டர்கள் ஒரு சிலவற்றை கவனித்து உங்களுக்கான சிகிச்சையை செய்கின்றனர். அவை,

  • இரத்தப்போக்கின் அளவு
  • கர்ப்பமாக இருக்கும் மாதம்
  • பிள்ளையின் ஆரோக்கியம் எப்படி உள்ளது
  • நஞ்சுக்கொடி எங்கே இருக்கிறது

இவற்றை கவனித்தே உங்கள் டாக்டர்கள் சிகிச்சையை பரிந்துரை செய்வர்.

 

இரத்தம் குறைவாக வெளியானால் என்ன செய்வது?

ஒருவேளை இரத்தம் குறைவாக வெளியாகும்போது, இடுப்புக்கு ஓய்வு அவசியம். அதனால் உடலுறவு மற்றும் உடற்பயிற்சியை தவிர்க்க சொல்லலாம். அடிக்கடி நஞ்சுக்கொடி நிலை குறித்து பரிசோதிக்கவும் செய்வர்.

 

இரத்தம் அதிகமாக வெளியானால் என்ன செய்வது?

ஒருவேளை இரத்தப்போக்கு அதிகமிருந்தால் (36 வாரங்கள் கடந்துவிட்டால்), உடனடியாக சிசேரியன் செய்ய நம்முடைய மருத்துவர்கள் பரிந்துரைக்கலாம். இந்த சூழலில் ஒரு ஊசியின் மூலமாக பிள்ளையின் நுரையீரல் வளர்ச்சியும் உறுதிசெய்யப்படுகிறது.

 

எதை தவிர்ப்பது நல்லது?

இதற்கு நாமாக எந்தவொரு மருத்துவத்தையும் செய்ய கூடாது. அதேபோல டாக்டர்கள் பரிந்துரையின்றி எந்தவொரு மாத்திரை, மருந்துகளை நாம் எடுத்துக்கொள்ள கூடாது. இரத்தப்போக்கை கண்டு வரக்கூடிய பதட்டத்தையும், பயத்தையும் நிச்சயம் நாம் தவிர்க்க வேண்டும்.

 

எப்போது டாக்டரை பார்க்க வேண்டும்?

ஒருவேளை இரண்டாவது அல்லது மூன்றாவது மூன்று மாதத்தில் உங்களின் இரத்தப்போக்கு அதிகமாக இருப்பதை போல நீங்கள் உணர்ந்தால் தாமதிக்காமல் டாக்டரை பார்ப்பது நல்லது.

தோழிகளே, கடினமான காலத்தை கடக்கும்போது தான் வாழ்க்கையே இனிமையாக அமையும். இது போன்ற கடினங்களை வென்று வர போகும் நம் பிள்ளையை வரவேற்க தயாராவோம் வாருங்கள். இந்த பதிவு பயனுள்ளதாக இருந்திருந்தால், மற்ற தோழிகளுக்கும் பகிர்ந்து அவர்கள் பயத்தையும் போக்கலாமே.

#pregnancymustknow #pregnancymilestones
logo

Select Language

down - arrow
Personalizing BabyChakra just for you!
This may take a moment!