மாதவிடாய் தவற என்னவெல்லாம் காரணம் இருக்கலாம்?

cover-image
மாதவிடாய் தவற என்னவெல்லாம் காரணம் இருக்கலாம்?

நம்மை போன்ற பெண்களுக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை மாதவிடாய் தான். நான் ஒன்றும் கர்ப்பமாக இல்லையே, எனக்கு ஏன் மாதவிடாய் தள்ளி போகிறது.’ என்ற கவலையும் சில பெண்களுக்கு உண்டு. ‘நான் கர்ப்பமாக இருக்கிறேனா’ என ஆனந்தமடையும் பெண்களும் உண்டு. ஆனால், உண்மை என்னவென்றால், மாதவிடாய் தள்ளி போக பல காரணங்கள் இருக்கிறது. அவற்றுள் மிகவும் முக்கியமான ஒன்று ஹார்மோன்கள் சமநிலையற்று இருத்தல்.

உங்களின் மாதவிடாயை குறித்த அடிப்படை புரிதல் இதற்கு மிக மிக அவசியமான ஒன்றாகும். உதாரணத்திற்கு, கடைசி மூன்று மாதம் எந்த தேதியில் நமக்கு பீரியட் வருகிறது என்பதை பொறுத்து, நமக்கு வருவது ஒழுங்கான மாதவிடாயா? இல்லை, ஒழுங்கற்ற மாதவிடாயா என்பதை அறிய முடியும்.

ஒருவேளை மாதவிடாய் நமக்கு வராமல் இருந்தால், அதற்கு கீழ்காணும் காரணங்கள் கூட இருக்கலாம், அவை என்னவென்பதை இப்போது நாம் விரிவாக பார்ப்போம்.

 

1. மன அழுத்தம்

மன அழுத்தம் காரணமாக ஹார்மோன்களில் மாற்றம் உண்டாகலாம். உங்களின் தினசரி வாழ்க்கை பாதிக்கப்பட்டு, மூளையின் செயல்பாட்டு முறையை மாற்றி மாதவிடாயையும் தாமதப்படுத்தலாம். மன அழுத்தம் காரணமாக நம்முடைய உடல் எடை கூடவோ, குறையவோ செய்யும். அப்போது மாதவிடாய் சுழற்சி பாதிக்க வாய்ப்புள்ளது.

ஒருவேளை உங்களுடைய மாதவிடாயை, உங்களின் மன அழுத்தம் தாமதிப்படுத்தியுள்ளதாக நினைத்தால், சில உடற்பயிற்சிகளை செய்து நாம் அதனை மீண்டும் வரவழைக்கலாம்.

 

2. உடல் எடை குறைவு

நாம் உணவுப்பழக்க வழக்கத்தை ஒழுங்காக கடைப்பிடிக்காவிட்டால் இதனாலும் மாதவிடாய் தள்ளி போகலாம். இது நம்முடைய உடல் செயல்பாட்டை மாற்றி, கருமுட்டை வெளியாவதையும் தடுக்கிறது. நாம் ஆரோக்கியமான உணவை எடுத்துக்கொள்வதன் மூலமாக சுழற்சியை மீண்டும் வரவழைக்கலாம். அளவுக்கதிகமாக உடற்பயிற்சி செய்தாலும், அதுவும் நம்முடைய மாதவிடாயை தள்ளி போக செய்யும் என்பதை மறவாதீர்.

 

3. உடல் பருமன்

நம் உடல் எடை கூடி இருந்தாலும், இதனால் மாதவிடாய் தள்ளி போக வாய்ப்புள்ளது. உங்களின் மருத்துவர் உணவு முறை மற்றும் உடற்பயிற்சியை பரிந்துரைக்கலாம். இதனால், சுழற்சி மீண்டும் வரக்கூடும்.

 

4. சினைப்பை நீர்க்கட்டி (PCOS)

ஹார்மோன் சமநிலை அற்று இருக்கும்போது சினைப்பைகளில் கட்டிகள் உருவாகும். இதனால் கருமுட்டை வெளியாவது ஒழுங்கற்றோ அல்லது நின்றோ போகவும் கூடும். இதனை ஒழுங்குப்படுத்த நம்முடைய மருத்துவர்கள் மாத்திரையை பரிந்துரைக்கலாம்.

 

5. கருத்தடை

கருத்தடை மாத்திரைகள் நாம் பயன்படுத்துவதாலும் சுழற்சியில் மாற்றம் ஏற்படுகிறது. கருத்தடை மாத்திரைகள் எஸ்ட்ரோஜன் மற்றும் ப்ரோஜெஸ்டின் ஹார்மோன்களை கொண்டுள்ளது. இவை சினைப்பையிலிருந்து முட்டை வெளியாவதை தடுக்கிறது. கருத்தடை மாத்திரை உபயோகித்து ஆறு மாதங்கள் கழித்தே மாதவிடாய் ஒழுங்காக வர தொடங்கும்.

 

6. நாள்பட்ட நோய்கள்

சர்க்கரை வியாதி உங்களுக்கு இருந்தாலும், இதனால் மாதவிடாய் சுழற்சி பாதிக்கப்படுகிறது. சர்க்கரை வியாதி ஹார்மோன் மாற்றங்கள் உடன் தொடர்புடையது. சர்க்கரை வியாதியை நாம் கட்டுக்குள் வைத்துக்கொள்ளாவிட்டால், இதனாலும் மாதவிடாய் தாமதமாகக்கூடும்.

 

7. மாதவிடாய் நின்று போகுதல்

பெரும்பாலான பெண்கள் இதனை 45 முதல் 55 வயதுக்கு இடையில் அனுபவிக்கின்றனர். அதாவது மாதவிடாய் அவர்களுக்கு சுத்தமாக நின்றுவிடுகிறது. இதற்கான அறிகுறியை இவர்களால் 40 வயதிலும் உணர முடிகிறது. முட்டை வெளியாவது நின்று, மாதவிடாயை நிறுத்தக்கூடும்.

 

8. தைராய்டு பிரச்சனை

தைராய்டு சுரப்பினாலும் நம்முடைய மாதவிடாய் தாமதமாகவோ அல்லது தவறவோக்கூடும். இந்த தைராய்டு காரணமாக ஹார்மோன்கள் லெவல் பாதிப்புக்குள்ளாகிறது. இந்த பிரச்சனைக்கு டாக்டர்களால் மருந்து பரிந்துரைக்கப்படுகிறது. சிகிச்சைக்கு பிறகு, மாதவிடாய் இயல்பாகவும் இருக்கும்.

 

எப்போது மருத்துவரை பார்ப்பது?

இந்த அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை கட்டாயம் பார்க்கவும். அவை,

  • அதிகமான இரத்தப்போக்கு
  • காய்ச்சல்
  • கடுமையான வலி
  • குமட்டல் மற்றும் வாந்தி
  • 7 நாட்களுக்கு மேலான இரத்தப்போக்கு
  • வருடங்கள் கடந்து மாதவிடாய் நின்றும் இரத்தப்போக்கு இருத்தல்


தோழிகளே, மாதவிடாய் ஒழுங்கற்று வருவது ஒன்றும் அவ்வளவு பெரிய சிக்கல் இல்லை. ஆனாலும், முன் கூட்டிய மருத்துவரின் ஆலோசனை உங்களின் வாழ்வை ஆரோக்கியமாக மாற்றும். என்ன பிரச்சனை இருக்குமோ என பயப்படுவதை விட, அதனை பற்றி மருத்துவரிடம் பேசி, சந்தேகத்தை மனதிலிருந்து நீக்குவது நமக்கு எப்போதுமே நல்லது. இந்த பதிவு பயனுள்ளதாக இருந்திருந்தால், நீங்கள் உங்கள் தோழிகளுடன் இதனை பகிர்ந்து அவர்களுக்கும் உதவலாமே.

#momhealth
logo

Select Language

down - arrow
Personalizing BabyChakra just for you!
This may take a moment!